6 மார்., 2017

ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டாம்: பிரதமருக்கு வைகோ கடிதம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 2017 மார்ச் 6 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு  மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் “ஜெனீவாவில் நடைபெற்று வருகிற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைத் தீவில் உள்ள தற்போதைய சூழ்நிலையையும், இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்தும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

1955 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை சிங்கள அரசு தொடுத்ததோடு, ஈழத் தமிழ் இனத்தை அழிக்க இனப் படுகொலை செய்து வந்தது. 1999 ஆம் ஆண்டில் அப்பொழுது பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இலங்கைக்கு இந்திய அரசு எந்தவிதமான இராணுவ உதவியும் செய்வது இல்லை என்றும், ஆயுதங்களை விற்பனைகூட செய்வது இல்லை என்றும் அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவை பிரகடனம் செய்தார்.

ஆனால் அந்த முடிவுக்கு நேர் எதிராக பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து விதமான இராணுவ உதவியையும் இலங்கை அரசுக்குச் செய்ததோடு, ஆயுதங்களும் வழங்கியது. இலங்கை அரசுடன் இருநாட்டு கடல்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தமும் செய்தது.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா.வின் அன்றைய பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவர்கள், மார்சுகி தாரீஸ்மன் தலைமையில் அமைத்த மூவர் குழு 190 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், குழந்தைகள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் 2009 ஆம் ஆண்டில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை ஆதாரத்தோடு வெளியிட்டது.

ஆனால், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே மாதத்தில் மிகவும் வஞ்சமாக இலங்கை அரசைப் பாராட்டி மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் போட உதவியது.

2015 ஆம் ஆண்டில் மனித உரிமைக் கவுன்சில், 2009 இல் சிங்கள இராணுவம் நடத்திய போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சுதந்திரமான பாரபட்சமற்ற விசாரணையை பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அத்தகைய விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துழைக்காமல் மறுத்துவிட்டது. மேலும் இலங்கை அதிபர் மைதிரி பால சிறிசேனாவும், இலங்கையின் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கேயும் 2009 இல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து விசாரணை செய்ய இலங்கைக்குள் எந்த வெளிநாட்டு நீதிபதியையும் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர்.
ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போய்விட்டனர். 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாகிவிட்டனர். வடக்கு மாகாணத்தில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் பூமியை சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமிப்புச் செய்துகொண்டு, சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்திவிட்டனர். கண்துடைப்புக்காக வெறும் 3ஆயிரம் ஏக்கர் நிலம்தான் ஈழத்தமிழர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு 2017 மார்ச் 3 ஆம் தேதி ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன், ஒரு இலட்சம் ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில் நடைபெற்ற கொலைகள் குறித்து விசாரிக்க முன்வராமல் சிங்கள அரசு தயக்கம் காட்டி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையை இந்திய அரசு பின்பற்றக் கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவக் கூடாது. அப்படி உதவினால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் தாங்க முடியாத ரணத்தையும், வேதனையையும் ஏற்படுத்தும். எனவே, இந்திய அரசு 2009 இல் நடைபெற்ற ஈழத் தமிழர் இனப் படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”என்று வைகோ மின்னஞ்சல் கடிதம் பிரதமருக்கு அனுப்பி உள்ளார்.
 
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates