அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு அரசாங்கத்திடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று இரா.சம்பந்தனிடம் கேள்வியெழுப்பியிருந்தது.
இந்நிலையில், சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்திருந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், தான் அரசாங்கத்திடம் இருந்து பணம் எதனையும் பெற்றுக்கொள்வில்லை எனக் கூறியுள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்த போது, “தனது குற்றச்சாட்டை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துக் கொண்டுள்ளதாக” கூறியுள்ளார்.
அபிவிருத்தி என்ற பெயரில் நிதி பெறப்பட்டிருக்குமாக இருந்தால் அந்த தொகையினை மேலும் அதிகரித்து வாங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை ஒத்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்துள்ளார்.