வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு
சென்னை:
கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய பின்பு அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.
நேற்று காலை வரை சாத்தனூர், சத்தியமங்கலத்தில் தலா 2 செ.மீ. மழையும், வேலூர் கலவை, கிருஷ்ணகிரியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
அதன்பிறகு இது தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வருகிற 10-ந் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
புயல் முதலில் சென்னை நோக்கி நகரும் என்றும், சென்னையை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
12-ந் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகரத் தொடங்கும். 14-ந் தேதி கரையை நெருங்கும். 15-ந் தேதி கடற்கரையை அடையும், 16-ந் தேதி கரையை கடக்காமல் வலுவிழந்து ஒடிசாவுக்கு சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திங்கட்கிழமைக்கு மேல் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேய்ட்டி’ என பெயர் சூட்டும். #Storm #Rain #BayofBengal