புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஜூலை, 2019

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி - ரோகித் சர்மா 5வது சதம் அடித்து சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்னே மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். இதில் கருணாரத்னே 10 ரன்னிலும், குசல் பெரேரா 18 ரன்னிலும், பும்ரா வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த குசல் மென்டிஸ் 3 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்னிலும் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் மற்றும் திரிமன்னே நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர். இதில் திரிமன்னே 53 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்த வந்த தனஞ்ஜெயா டி சில்வா, மேத்யூஸ் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. தொடர்ந்து தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம், அணியை சரிவிலிருந்த மீட்டு சதம் அடித்து அசத்திய மேத்யூஸ் 128 பந்துகளில் 113 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய திசிரா பெரேரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எடுத்தது. கடைசியில் தனஞ்ஜெயா டி சில்வா 29 ரன்னுடனும், இசுரு உதனா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 1 விகெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில், லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடி தங்களது சிறப்பான துவக்க ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிருபித்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்த ஜோடி தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். அந்த ஜோடியில் அதிரடியாக ரன் சேர்த்த ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் தனது 5வது சதத்தை பதிவு செய்து, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககரா ( 4 சதம் ) அடித்த சாதனையை முறியடித்தார். பின்னர் ரோகித் சர்மா 103(94) ரன்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன், கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விரைவாக ரன் சேர்க்க, இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றது. இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த லோகேஷ் ராகுல் தனது சதத்தை பதிவு செய்தநிலையில், 111(118) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 4(4) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 34(41) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 7(4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 43.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக உதானா, கசுன் ரஜிதா மற்றும் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.