புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஜூலை, 2019

குழப்பியது கூட்டமைப்பா?- மகிந்தவுக்கு பதிலடி

13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக மாறிவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக மாறிவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு ​வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம். பி இவ்வாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் அவர் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு தற்போது அவர் தம் நிலைப்பாட்டிலிருந்து முற்றாக மாறி விட்டார் என்பதை பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை தெளிவுபடுத்துகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது புதிய அரசியலமைப்பு திருத்தம், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி வருகிறது.எதிர்க்கட்சியினரும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

அரசியலமைப்பு ஒரு சட்டம் அல்ல அது ஒரு சமூக ஒப்பந்தமே என்பதை நாட்டு மக்கள் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகளை வெற்றியாக்குவதற்காக நாம் எம்மை அர்ப்பணித் துள்ளோம். அதற்கான வழி நடத்தல் குழு அனைத்திலும் நாங்கள் பங்கேற்றுள்ளோம். நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாம் பெரும் அக்கறையுடன் செயற்படுகின்றோம்.

இது ஒரு அரசியல் கருத்திட்டம் அல்ல என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் சகல மக்களுக்கும் சமத்துவமான அதிகாரப் பகிர்வு தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.

எமது மக்களுக்கான அதிகாரத்தை அவர்கள் கைகளில் வழங்குமாறு நாம் கேட்கிறோம். அவ்வாறு இல்லை அனைத்து அதிகாரங்களும் எமது கையில் தான் இருக்க வேண்டும் என்று ஒருபோதும் பெரும்பான்மை மக்கள் கேட்க மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன். இந்த நாட்டில் நாம் சிறுபான்மை அல்ல, எண்ணிக்கையில் குறைந்தவர்களே.

நாம் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் எமக்கான அரசியல் உரிமை வேண்டும் எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. புதிய அரசியலமைப்பு தொடர்பில் வாத விவாதங்களுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பெரும்பாலான விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளன. சிறு விடயங்களிலேயே இணக்கப்பாடுகள் காணப்பட வேண்டியுள்ளன.

குறிப்பாக அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியோரின் நிலைப்பாடும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேவேளை தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாதொழிப்பு போன்ற விடயங்களிலேயே இணக்கப்பாடு காணப்படாதுள்ளது.

இது தொடர்பான இரண்டாம் அறிக்கைக்கு பின்பு நாம் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இந்த கலந்துரையாடல்களில் கலந்து கொண்டுள்ளார். இதில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்புள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நாம் இது தொடர்பில் தொடர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.13 பிளஸ் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்கள் மாகாண பொலிஸ் அதிகாரம் பற்றிய விடயத்தை பூதாகாரமாக்கினர்.

எதிர்க்கட்சித் தலைவர் தற்போது அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் நாம் அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தை பாராளுமன்றத்தில் விவாதிப்பதாகவும் அதில் பிரியோசனம் இல்லை என்றும் கூறுகின்றார்.

அவர்களது காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் நாம் பல யோசனைகளை முன் வைத்தோம். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.அதில் முன்னேற்றம் எதுவும் காணப்படாததால் பேச்சுவார்த்தைகளை நிறுத்திக் கொண்டோம்.

அதன் பின்னர் இரா சம்பந்தனுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் ஐந்து ஆவணங்களை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிக்கா பண்டாரநாயக்க கால அறிக்கை, அரசியல் சட்டமூலம் 2000 மற்றும் அனைத்துக் கட்சி அறிக்கை என அவை அடிப்படையாக வைத்து ஆராயப்பட்டன.

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் இன்னும் ஒரு வருடமாக உள்ள நிலையில் அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கப் போவதாக தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் இந்த நாட்டின் எதிர்காலம் அதன் வெற்றியிலேயே தங்கியுள்ளது எனவும் அவ்வாறு இடம் பெறவில்லையானால் நாடு முன்னொருபோதும் இல்லாதவாறு பாரிய அழிவையே எதிர்கொள்ள நேரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.