அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே அடுத்த நிமிஷம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நான் சொல்லவே இல்லையே?
இப்படி நினைப்பதே குழந்தைத்தனமான சிந்தனையாகும்.
அமைச்சரவை பத்திரம் என்பது, சில யோசனைகளை தெரிவித்து, சில தீர்மானங்களை எடுக்கும்படி அமைச்சரவையை கோரும்.
பொது மன்னிப்பு, சட்ட மா அதிபர் வழக்குகளை மீளப்பெறல் அல்லது பிணை வழங்குதல், பொலிஸ் வழக்குகளை மீளப்பெறல், புனர்வாழ்வளித்தல் போன்ற பல்வேறு யோசனைகளை பரிசீலிக்கும்படியான தீர்மானங்களை எடுக்கும்படி ஜனாதிபதி உட்பட துறைசார் அமைச்சர்களை, சட்டமா அதிபரை இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் கோரும்.
அடுத்தது, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களை கொண்ட அமைச்சரவைதான் இந்நாட்டின் அதியுயர் அரசியல் அதிகார பீடமாகும். இங்கே எடுக்கப்படும் தீர்மானங்கள் அரசியல் அதிகார தீர்மானங்களாகும். இதைவிட வேறு ஒரு அரசியல் பீடத்தை நோக்கி நாம் ஓட வேண்டியதில்லை.
எது எப்படி இருந்தாலும் சட்ட வழியில், தமிழ் கைதிகளை முழுமையாக விடுவிக்க முடியாது போயுள்ளது. இந்த காரணத்தினாலேயே இன்று இந்த பிரச்சினை எரியும் பிரச்சினையாக மாறியுள்ளது.
ஆகவேதான் இதை அரசியல்ரீதியாக தீர்க்க முயல்கிறேன்.
அமைச்சரவை ஒரு நீதிமன்றம் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தில் கிடைக்காத முழுமையான தீர்வை மக்கள் மன்றத்தில் காண நான் முயல்கிறேன்.
எனது அமைச்சரவை பத்திரம் மூலம் இந்த பிரச்சினை தேசிய அரங்குக்கு வரும். அதன் மூலம் தீர்வை நோக்கி நகரும்.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரச்சினை அமைச்சரவைக்கு போகின்றது.
எடுத்த எடுப்பிலேயே இதில் குறை கண்டு, பிழை தேடி, முயற்சியை முடமாக்கி விடாதீர்கள்.
ஆகவேதான் எனக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அனைத்து கட்சிகளையும் நான் கோரியுள்ளேன்