புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 நவ., 2019

எத்திப் பிழைக்கும் அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கைகள் நம்பகமானவையா?- பனங்காட்டான்


சஜித்தின் தேர்தல் அறிக்கைக்காகக் காத்திருந்தவர்களுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் கால உறுதி மொழிகள் காற்றில் கலந்து காணாமற்போய்விடுபவை ஆயினும் அதனை நம்பி ஏமாறுவதுதானே தமிழர் வரலாறு. அதற்கு இந்த மாதத் தேர்தல் எவ்வாறு விதிவிலக்காகும்? நம்ப நட நம்பி நடவாதே! நடக்குமா?

இலங்கைக்குள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் இப்போது அதிகம் பேசப்படுவது ஜனாதிபதித் தேர்தல்.


இந்த மாதம் 16ஆம் திகதி இதற்கான வாக்களிப்பு. சஜித் பிரேமதாசவுக்கும் கோதபாய ராஜபக்சவுக்கும் இடையில்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டி நிலவினாலும், மற்றைய வேட்பாளர்கள் சும்மா இருக்கவில்லை.

ஜே.வி.பி.யின் அனுர குமர திசநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க, ரெலோ கட்சியின் பிரமுகர் சிவாஜிலிங்கம் ஆகிய மூவரும் வேட்பாளர் பட்டியலில் இரண்டாம் அணியில் நன்கு அறிமுகமானவர்கள்.

முப்பதுக்கும் அதிகமானவர்கள் இம்முறை போட்டியிடுவதால் வாக்குச் சீட்டு இரண்டரை அடி நீளமாகியுள்ளது. இதனால் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரத்தால் அதிகரிக்க ஆலோசிக்கப்படுகிறது.


இத்தேர்தல் இலங்கை முழுவதற்குமான ஜனாதிபதியை தெரிவதற்கானதாக இருந்தாலும், தமிழர்மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தம் பற்றியே அபேட்சகர்கள் அதிகம் பேசுகிறார்கள்.

யுத்தத்தை வென்றது நீயா நானா என்ற சரத் பொன்சேகா மற்றும் கோதபாய ராஜபக்ச போட்டிக்குள் மூன்றாவதாக இப்போது முன்னாள் இராணுவத்தளபதி மகே~; சேனநாயக்கவும் புகுந்துள்ளார்.

யுத்த வெற்றிக்கு தனிநபர் எவரும் உரிமை கோர முடியாது என்றும் இவ்வெற்றி அதில் பங்குபற்றிய சகலருக்கும் சொந்தமானதென்றும் இவர் கூறி வருகிறார். அதுமட்டுமன்றி, அரசியல்வாதிகளால் நாட்டைச் சரியாக ஆளமுடியாது என்பது இவரது வாதம். அப்படியென்றால் தம்மைப்போன்ற இராணுவ அதிகாரிகளால்தான் அது முடியுமென எண்ணுகிறார் போலும்.


ரயிலில் யாழ்ப்பாணம் போவதும், மேலாடையின்றி பழத்தட்டேந்தி நல்லூருக்குச் சென்று பூசை வழிபாட்டில் கலந்து கொள்வதும் தேர்தல் வேட்பாளர்களின் பரப்புரைக்கான ஒரு ஸ்டன்ட் ஆகிவிட்டது.

யாழ்ப்பாணத்தில் கோதபாயவும் தமது தமையனார் மகிந்தவுடன் சென்று ஒரு கூட்டம் நடத்தினார். நல்லூர் முத்திரைச் சந்திக்கு அருகாமையிலுள்ள ஷகிட்டு பூங்கா| அமைந்துள்ள காணியில் இக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரின் பெயரிலுள்ள இடத்தில் கூட்டம் நடத்தினால் சிங்கள மக்களின் வாக்கு மாறிவிடலாமென்ற அச்சத்தால் இடத்தை மாற்றிக் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்னராக இவருடனான நீண்ட செவ்வி ஒன்றை கேள்வி பதிலாக கொழும்பு ஊடகமொன்று பிரசுரித்தது. 

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா என்ற கேள்விக்கு, 'அவ்வாறு செய்ய முடியாது. பாரிய குற்றச்சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட இவர்களை அப்படி விடுதலை செய்ய முடியாது. நீதி விசாரணையின் பின்னரே இவர்கள் பற்றி முடிவெடுக்கப்படும்" என்று பதிலளித்தார்.


ஆனால், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்வோமென்று பகிரங்கமாகச் சொன்னார்.

தேர்தல் என்றால் அங்கொன்றையும் இங்கொன்றையும் கூறி குத்துக்கரணங்கள் இப்படித்தான் அடிப்பார்கள்.

கோதபாயவின் இந்த அறிவிப்பை மையப்படுத்தி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார்.

'ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இவ்வாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமானால் உங்களால் ஏன் அவ்வாறு செய்ய முடியாது" என்பது விக்னேஸ்வரனின் கேள்வி. நிச்சயமாக இக்கேள்விக்கு ஒருபோதும் பதில் கிடைக்க மாட்டாது.

கோதபாயவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு எழுப்பப்பட்ட கோ~ங்களும் கேள்விகளும் முக்கியமானவை.


'வெள்ளை வான் முதலாளி" என்று கானாணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுலோக அட்டைகளில் எழுதி கவன ஈர்ப்பு நடத்தினர். 'நரகத்தின் ஆட்சியில் எமதூதராகச் செயற்பட்டவர் கோதபாய" என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முடிசூட்டினார்.

'புலிகளைக் கொன்றதைவிட ஊடகவியலாளர்களையும் அப்பாவிப் பொதுமக்களையுமே கோதபாய கொலை செய்தார்" என்று பகிரங்கமாகச் சாடினார் சமூக செயற்பாட்டாளரான சமீர பெரேரா.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கின்ற சட்ட விலக்கல் உரிமை, சகலருக்கும் தேர்தல் காலத்தில் கிடைத்திருப்பது போன்று தெரிகிறது.

கடந்த மாத நடுப்பகுதியில் பலாலியில் திறக்கப்பட்ட யாழ்ப்பாண விமான நிலையப் பிரதேசம் கடும் மழையால் வெள்ளக்காடாகியது. யாழ்ப்பாணக் கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச இதனை எள்ளி நகையாடும் வகையில், இங்கு திறக்கப்பட்டது விமான நிலையமா அல்லது நீச்சல் குளமா என்று கேள்வி எழுப்பினார்.

இவரது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மத்தள விமானநிலையம் இப்போது நெற்களஞ்சியசாலையாக மாற்றப்பட்டிருப்பதை இவர் மறந்துவிட்டார் போலும்.

தேர்தல் பரப்புரை ஆரம்பமான மூன்று வாரங்களுக்குள் இரண்டு பிரதான வேட்பாளர்கள் 762 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்புகளின் அமையம் அறிவித்துள்ளது. இதில் 177 மில்லியன் ரூபா அச்சு ஊடகங்களுக்கும், 563 மில்லியன் ரூபா இலத்திரனியல் ஊடகங்களுக்கம் வழங்கப்பட்டுள்ளதாம். இவ்வளவு தொகையான பணம் இரு வேட்பாளர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வியும் எழும்பாமல் இல்லை.


இவ்வாறாக பரப்புரை சுனாமி வேகத்தில் இடம்பெற்றாலும், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாக சிறுபான்மை இன மக்களே பார்க்கப்படுகின்றனர். தமிழர், முஸ்லிம்கள், மலையக தமிழரின் வாக்குகளை ஊடகங்கள் அவ்வப்போது சுட்டி வருகின்றன.

தமிழர் வாக்குகள் யாருக்கு என்பதை இன்னமும் யாரும் சரியாக அறிவிக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் பகி~;கரிக்க கோரியுள்ளது. ரெலோ அமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் தாமே பொதுவேட்பாளர் என்று கூறி சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களை சுயாதீனமாக முடிவெடுக்கக் கோரியுள்ளாராயினும், புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து கட்சி கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறார்.

கூட்டமைப்பை உள்ளடக்கிய ஐந்து கட்சி கூட்டணி எதிர்பார்த்த சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறி;க்கை கண்டியிலுள்ள மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் வெளியாகியுள்ளது.

சகல மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்று இங்கு தெரிவிக்கப்பட்டிருப்பினும் காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் பற்றி விபரமாக எதனையும் காணோம். பிளவுபடாத ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதை கூட்டமைப்பின் பாணியில் சஜித் தெரிவித்துள்ளார். ஆனாலும், நாட்டின் இறையாண்மைபை; பாதிக்கும் உடன்பாடுகளை அனுமதிக்கப் போவதில்லையென அழுத்திக் கூறியுள்ளார்.


நீண்டகாலம் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுதலை செய்யப்படுவர் என்று பொதுவாக ஒரு வரி குறிப்பிடுகிறது. இது தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இதனை அப்படியும் எடுக்கலாம், இப்படியும் எடுக்கலாம் என்பது தேர்தல் கால அரசியல் சதுரங்கம்.

மூன்று கட்சி இணைப்பிலுள்ள கூட்டமைப்பின் பார்வையில், ஐந்து தமிழ் கட்சிகளின் கூட்டணி கோரியிருக்கும் 13 அம்சக் கோரிக்கைகளை சஜித்தின் தேர்தல் அறிக்கை ஓரளவுக்கு உள்வாங்கியிருப்பது போன்று நோக்கப்படுகிறது.

இப்படித்தான் இந்த அறிக்கை வருமென்பது கூட்டமைப்பினருக்கு நிச்சயமாக முற்கூட்டியே தெரியும். அதனாற்தான், தேர்தல் வாக்களிப்பு தொடர்பான தங்கள் முடிவை அறிவிப்பதற்கான காலத்தை இவர்கள் இழுத்தடித்து வந்தனர்.

தேர்தல் கால அறிக்கைகளில் கூறப்படுபவைகள் அநேகமாக நிறைவேற்றப்படுவதில்லை. இவர்கள் காற்றில் சிக்குப்படும் வாலறுந்த பட்டங்கள்.

முன்னர் இப்பந்தியில் பல தடவை கூறப்பட்டதுபோல யாருக்கு வாக்களிப்பது என்பதைவிட, யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதுவே தமிழர்கள் நிலைப்பாடு. 2010ஆம் ஆண்டு 2015ஆம் ஆண்டுத் தேர்தல்களிலும் இதே நிலைப்பாடுதான் இருந்தது.

இவ்விடயத்தில் தமிழர் தரப்புக்கு இசைவாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை  அமைந்துள்ளது. தமிழ் கட்சிகளும் கூட்டமைப்பும் இதுவரை அறிவிக்காதிருந்த முடிவை அறிவிப்பதற்கான கதவு இப்போது திறக்கப்பட்டுள்ளது.

உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கும் தமிழருக்கு இன்றுள்ள ஒரேயொரு உரிமை தேர்தல் கால வாக்குரிமை மட்டுமே. அதனையும் எத்திப்பிழைக்கும் அரசியல்வாதிகளிடம் தாரை வார்த்துக் கொடுப்பது வரலாறாகிவிட்டது.

நம்ப நட, நம்பி நடவாதே! இது நடக்குமா?