புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 டிச., 2019

பிரித்தானிய தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
பிரித்தானிய தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் கட்சி அமோக வெற்றி!

நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான கொன்சவேர்ட்டிவ் கட்சி பெருவெற்றியீட்டியிருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் இது. இம்மூன்று தேர்தல்களிலும் கொன்சவேர்ட்டிவ் கட்சி வேறுபட்ட மூன்று தலைவர்களின் தலைமையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் இத்தேர்தலிலேயே மிகப் பெரிய பெரும்பான்மையை அது பெற்றுக் கொண்டுள்ளது.

மொத்தம் 650 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் இதுவரை வெளியான 649 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளில் 364 தேர்தல் தொகுதிகளில் கொன்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. முதன்மை எதிர்க்கட்சியான ஜெரமி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி 203 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. முன்னைய தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்ற இடங்களில் 49 இடங்களில் தோல்வியடைந்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியதிலிருந்து விலகுவதற்கு ஆதரவு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுதலை குறிக்கும் பிரெக்சிற் என்ற விடயமே இத்தேர்தலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. விலகுதலைக் கடுமையாக ஆதரிக்கும் பொறிஸ் ஜோன்சன் அந்த ஒன்றை மாத்திரம் வலியுறுத்தியபடி தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டார். அதனடிப்படையில் வைத்துப் பார்க்கையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதலை பிரித்தானிய மக்களில் பெருமளவிலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற முடிவிற்கு வரமுடியும். வரும் ஜனவரி 31ம் திகதி விலகுதலுக்கான காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அது நடந்தேறுமா என்ற ஐயமிருந்தது. தேர்தல் முடிவுகள் இவ் ஐயப்பாட்டை நீக்கியுள்ளது.

குடியேறிகள் தொடர்பான பிரச்சனையும் தேர்தல் முடிவுகளின் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேரந்தவர்கள் தங்கு தடையின்றி பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதனை எதிர்க்கும் கொன்சவேர்ட்டிவ் கட்சி இவ்விடயத்தையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுதியது.

தொழிற்கட்சியின் தோல்விஉழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் கட்சி எனக் கருதப்பட்டுவந்த தொழிற்கட்சி, பாராம்பரியமாக வெற்றிபெற்று வந்த பல தேர்தல் தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தின் வடகிழக்கு, வடமேற்கு பிரதேசங்களில் அக்கட்சி பாரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது. இருப்பினும் லண்டன் பெரும்பாகத்தில்தொழிற்கட்சி ஒரு தேர்தல் தொகுதி தவிர ஏனைய இடங்களில் தனது ஆசனங்களைத் தக்க வைத்துள்ளது.

குடியேறிகளினால் தங்களது தொழில் வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன என உள்ளுர்வாசிகள் கொண்ட பீதியும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு காரணமாக அமைந்தது.

வலதுசாரி ஊடகங்களின் தொடர்ச்சியான பரப்புரைகளின் காரணமாக தொழிற்கட்சி தொடர்பில் வாக்காளர்களின் ஒருபகுதியினர் அக்கட்சியின் தலைமையின் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். கட்சிக்குள்ளும் வலதுசாரி நிலைப்பாடுகொண்ட முன்னாள் பிரதமர் ரோனி பிளேயரின் ஆதரவாளர்கள் தலைமையுடன் முரண்பாடு கொண்டிருந்தனர். இத்தகைய பின்னணியில் இடதுசாரியான ஜெரமி கோர்பின் பல சவால்களுக்கு மத்தியில் இத்தேர்தலை எதிர்கொண்டார். தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அவர் தனது பதவியிலிருந்து விலகவிருப்பதாக அறிவித்துள்ளார். உடனடியாக அவரது விலகல் நடைபெறாவிட்டாலும் இன்னமும் சிலமாதங்களுக்கிடையில் புதிய தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கொற்லாந்து

ஐம்பத்தொன்பது தேர்தல் தொகுதிகள் கொண்ட ஸ்கொற்லாந்து தேசத்தில் 48 இடங்களில் பிராந்தியக் கட்சியான ஸ்கொற்லாந்து தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பிரித்தானியாவிலிருந்து ஸ்கொற்லாந்து பிரிந்து சென்று தனிநாடாக அமையவேண்டும் என வலியுறுத்தி வரும் இக்கட்சியின் வெற்றியானது பிரித்தானியா தொடர்ந்து ஐக்கிய இராட்சியமாக நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அடுத்த ஆண்டில் பிரிந்து செல்வது தொடர்பான ஒப்பங்கோடல் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரும் இக்கட்சியின் கோரிக்கையை தேர்தல் முடிவுகள் வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும் இக்கோரிக்கையை நிராகரிக்குமளவிற்கு பொறிஸ் ஜோன்சன் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைகொண்டிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதனை இத்தேர்தல் உறுதிப்படுத்தியிருந்தாலும். அதன் தேசங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலவீனப்படுத்தியிருக்கிறது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்-கோபி இரத்தினம்.!