புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2019

சுவிஸ் தூதரக ஊழியரின் தாயார் ,பிள்ளைகள் சுவிற்சர்லாந்திலா? சிங்கப்பூரிலா? யார் சொல்வது உண்மை ?

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுவிற்சர்லாந்து தூதரகத்தின் விசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸின் தாயார் மற்றும் மூன்று பிள்ளைகள் வெளிநாடு சென்றமை தொடர்பில் நேற்று நீதிமன்றில் விஷேட வெளிப்படுத்தல்கள் இடம்பெற்றன.

கானியா பெனிஸ்டர் பிரன்சிஸுக்கு பிணை வழங்குவது தொடர்பில் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆராயப்பட்ட போது, விசாரணையாளர்களான சி.ஐ.டி.யின் ஆலோசனை பிரகாரம் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார, பிணை வழங்க எதிர்ப்பு வெளியிட்டு முன்வைத்த வாதங்களின் போதும் அதற்கு சந்தேகநபரின் சட்டத்தரணி உபுல் குமரப்பெருமவின் பதில் வாதத்தின் போதுமே இவை வெளிப்பட்டன.

முதலில் பிணைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அரச சட்டவாதி ஜனக பண்டார மன்றில் வாதிடும் போது ஒரு கட்டத்தில் பின்வருமாறு கூறினார்.

‘ இவருக்கு பிணையளித்தால் இவர் அரசியல் தஞ்சம் கோரியோ அல்லது வேறு ஒரு வகையிலோ சுவிட்ஸர்லாந்துக்கே செல்ல வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த விசாரணைகளில் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்தையும் வைத்து பார்க்கும் போது இது தெளிவாகிறது. அவருக்கு அந்த இயலுமை உள்ளது.

இப்போது, இந்த சந்தேக நபரான கானியாவின் தாயாரும் மூன்று பிள்ளைகளும் சுவிற்சர்லாந்துக்கு சென்றுவிட்டனர். தாய்ப்பால் குடிப்பதாக கூறப்பட்ட குழந்தையைக் கூட சுவிற்சர்லாந்துக்கு, சந்தேக நபரின் அம்மா அழைத்துச் சென்றுள்ளார். ‘ என தெரிவித்தார்.

இதன்போது அதற்கு கானியாவின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

‘ இது முற்றிலும் பொய்யானது. அவர்கள் சுவிற்சர்லாந்து செல்லவில்லை. சிங்கப்பூருக்கே விடுமுறையை கழிக்க சென்றனர். தாய் விளக்கமறியலில் உள்ள நிலையில் பிள்ளைகளின் மன நிலைமையை வேறு திசைக்கு திருப்ப இந்த சுற்றுலாவை அவர்கள் சென்றனர். பிணைப் பெறுவதை தடுக்க இப்படி முறையற்ற விதத்தில் எந்த அடிப்படையும் இன்றி கூறக் கூடாது.’ என்றார்.

இதன்போது மீள அரச சட்டவாதி ஜனக பண்டார, தனக்கு சி.ஐ.டி.யினரிடமிருந்து கிடைக்கும் ஆலோசனைக்கு அமையவே தான் அதனை தெரிவித்ததாக கூறினார்.

அப்போது தலையீடு செய்த நீதிவான் லங்கா ஜயரத்ன, மன்றில் இருந்த சி.ஐ.டி.யின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.திலகரத்னவிடம், குறித்த விடயம் தொடர்பில் வினவினார்.

‘ கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி. பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சரே அந்த தகவலை எனக்கு தந்தார். அதனையே நான் அரச சட்டவாதிக்கு தெரிவித்தேன் என்றார்.’

மீளவும் பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளரை நோக்கி , அந்த தகவலை உறுதி செய்து கொண்ட பின்னரா மன்றுக்கு தெரிவிக்க ஆலோசனை வழங்கினீர்கள் என வினவினார்.

அதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ. திலகரத்ன, ‘ அரச புலனாய்வுப் பிரிவிடம் இருந்தும் அந்த தகவல் கிடைத்தது. ‘ என கூறினார். அப்போது மீளவும் நீதிவான் எழுத்து மூலம் அந்த தகவல் கிடைத்ததா என வினவினார்.

அதற்கு பதிலளித்த சி.ஐ.டி. பணிப்பாளர் இல்லை. வாய்மொழி மூலம் கூறப்பட்ட தகவலே அது என்றார்.

இதன்போது திறந்த மன்றில் நீதிவான், ‘ இது பாரிய மாறுபட்ட தகவல். சிங்கப்பூருக்கும், சுவிட்சர்லாந்துக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. விமான நிலையத்தில் சி.ஐ.டி. பிரிவொன்று உள்ளது. உளவுத் துறை, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகள் உள்ளனர். அப்படியிருக்கையில், உண்மையிலேயே அப்படி சிங்கப்பூருக்கு சென்ற ஒருவரை சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட்டார் எனக் கூறுவது பாரதூரமான விடயம். பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்’ என சி.ஐ.டி. பணிப்பாளருக்கு நீதிவான் தெரிவித்தார்.

இதனையடுத்து அது குறித்து மீள விமான நிலைய சி.ஐ.டி.பிரிவில் விசாரித்து தகவல் அளிப்பதாக பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன மன்றுக்கு தெரிவித்தார்.

இந் நிலையில் மீள கானியாவுக்கு பிணையளிக்கப்பட்ட பின்னர், மன்றில் சிரேஷ்ட அரச சட்டவாதி சி.ஐ.டி. சார்பில் மீள இந்த விடயத்தை தெளிவுபடுத்தினார்.

‘ கனம் நீதிவான் அவர்களே, இவர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். விமான நிலையத்துக்கு தூதரக வேன் ஒன்றிலியே அழைத்து செல்லப்பட்டு இறக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி.யினரிடம் தற்போது விசாரித்ததில், சிங்கப்பூருக்கு அவர்கள் சென்ற போது, அவர்களின் பெயர்களில் சிங்கப்பூரில் இருந்து – சுவிற்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான டிக்கட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளாமை தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் சுவிற்சர்லாந்து சென்றுள்ளதாக நான் முன்வைத்த விடயங்களை வாபஸ் பெறத் தேவையில்லை.’ என்றார்.

இதன்போது மீளவும் பதிலளித்த கானியாவின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, இது முற்றிலும் பொய்யானது. அடுத்த வழக்குத் தவணையில் அவர்களது பயணம் தொடர்பில் பூரண பயண விபரங்கள் அடங்கிய ஆவணத்தை மன்றுக்கு சமர்ப்பிப்போம்.’ என்றார்

ad

ad