புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2019

புலம்பெயர் தமிழர்களை தாயகம் வர அழைப்பு விடுக்கும் செல்வம் அடைக்கலநாதன்

வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து அந்த அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் கூட்டம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் குடியுரிமையச் சட்டத் திருத்தத்தில் ஈழத் தமிழ் மக்கள் உள்வாங்கப்படவில்லை.

அந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவும் அதேநேரம் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறுபட்ட கோரிக்கைகளை இந்த விடயத்தில் விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனூடாகவே அவர்களது காணிகள் பறிபோவதை தடுத்து பாதுகாக்க முடியும்

இன்றைய நிலைமையில் அந்த மக்களின் காணிகள் எல்லாம் அத்தீமீறி களவாடப்படுகிறது. ஆகையினால் இங்கிருந்து சென்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கின்ற மக்கள் அங்கே குடியுரிமையைப் பெற்று இருப்பார்களானால் அவர்களுடைய அந்த நிலங்கள் தொடர்ந்து களவாடப்படும்.

ஆனாலும் திரும்பி வர விரும்பாதவர்களை வற்புறுத்த முடியாது. அவர்கள் அங்கேயே குடியுரிமையைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்தவர்கள் இங்குள்ள தமது நிலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே நிலத்தைக் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அவர்கள் வரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதனைக் காப்பாற்றி பாதுகாக்கின்ற வாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்

ad

ad