புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 ஜன., 2020

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைபுறக்கணிக்கிறது கூட்டமைப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நாளை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்ற அதே வேளையில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் அந்த அரசில் அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் ,கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

முன்னர் அமைச்சராக இருந்த காலங்களில் கூட்டத்தை தலைமை தாங்கிய நடாத்திய ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆட்சி மாற்றத்தின் பின்னராக நடைபெற்ற இக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிலையிலேயே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.