புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 பிப்., 2020

காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை: சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல்
போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும் இப்போது உயிருடனில்லை என்ற சிறிலங்கா அரசுத் தலைவர் கோத்தபய ராஜபட்சே கூற்று தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும் இப்போது உயிருடனில்லை என்ற சிறிலங்கா அரசுத் தலைவர் கோத்தபய ராஜபட்சே கூற்று தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

2009ல் தமிழின அழிப்பு போரின் போது, சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளின் கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதோடு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் நிரந்தரச் செயலராக இருந்த கோத்தபய ராஜபட்சே கடந்த ஜனவரி 20ம் நாளன்று பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும் இப்போது உயிருடனில்லை எனத் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அதிபரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாக வைத்து ஏழு கோரிக்கைகளை ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது :

1. சிறிலங்கா அரசாங்கம் கொல்லப்பட்டவர்களின் மிச்சங்களை நல்லடக்கம் செய்வதற்காக அவர்தம் குடும்பத்தினரிடம் உடனடியாக மீட்டளிக்க வேண்டும் அல்லது சிறிலங்கா இராணுவம் அவர்களின் உடலங்களைப் புதைத்த இடத்தை வெளிப்படுத்த வேண்டும்.

2. இறந்து விட்டார்களென கோத்தபயா அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்து போன சூழல்கள் பற்றிய விவரங்களைத் தரும் படி மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் மிசேல் பசலே சிறிலங்காவைக் கோர வேண்டும். தெரிந்து கொள்ளும் உரிமையின் படியும், உண்மையறியும் உரிமையின் படியும் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை குடும்பத்தினர்க்குண்டு. தெரியாமலிருக்கும் தொடர் வேதனையை இவ்விதம் தணித்துக்கொள்ள இயலும்.

3. காணாமற்போனவர்கள் உயிருடனில்லை என்ற கோத்தபயாவின் அறிவிப்புக்கு ஐ.நா உயர் ஆணையாளர் பசலே 2020-பிப்ரவரி-மார்ச்சில் நடைபெறும் 43ஆம் அமர்வுக்கான தம் வாய்மொழி அறிக்கையில் மறுவினையாற்ற வேண்டும்.

4. கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு (WGEID) இன்னமும் தன்முன்னிருக்கும் காணாமற்போன தமிழர்களின் ஆயிரக்க்கணக்கான வழக்குகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

5. கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு (WGEID) பரிந்துரைத்தபடி 'போர்க்குற்றங்களையும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்குரிய கட்டளையோடு பன்னாட்டு நீதிபதிகளையும் வழக்குத் தொடுநர்களையும், சட்டத்தரணிகளையும், புலனாய்வாளர்களையும் ஒருங்கிணைத்து தனிநோக்குக் கலப்புச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென உயராணையர் அலுவலகப் புலனாய்வு OISL) தந்த அழைப்பைப் புதுப்பிக்க வேண்டும்.' (A/HRC/30/CRP.2> பரிந்துரை# 20)

6. கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு (WGEID) பரிந்துரைந்தபடி, ஆகக் கடைசியில் இப்போதாவது முந்தைய ஐநா மனிதவுரிமை உயராணையர் செய்து அல் உசைன் மனிதவுரிமைகளை வலுவாக்கவும் குற்றங்கள் தண்டிக்கபடா நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் புரிந்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் அளித்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளும்படி ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

7. ஐநா பாதுகாப்புப் பேரவை சென்ற ஆண்டு நிறைவேற்றிய ஒரு தீர்மானம் ஆயுதத மோதலின் சூழலில் கட்டாயக் காணாமற்போதலை ஒரு போர்க்குற்றமாக வரையறுத்ததைக் கருத்தில் கொண்டு, குற்றங்கள் தண்டிக்கப்படா நிலை தொடர்வது பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது என்ற அடிப்படையில் ஐநா பாதுகாப்புப் பேரவை ஐநா சாசனத்தின் அத்தியாயம் 7 தரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா நிலைமையைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை ஐ.நாவை நோக்கி முன்வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஏழு கோரிக்கைகளையும் ஏற்றுத் தொடர் நடவடிக்கை எடுப்பதன் மூலம் பன்னாட்டுலக நீதி செத்து விடவில்லை என்ற திட்டவட்டமான அவசரச் செய்தியை பன்னாட்டுலகச் சமுதாயத்தால் விடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்காக காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை என்று கோத்தபயா அறிவித்திருப்பது தானும் சிறிலங்கா அரசும் பன்னாட்டுச் சட்டத்தை மோசமாக மீறியுள்ளோம் என்ற குற்ற ஒப்புதலுக்குச் சற்றும் குறைந்ததன்று. என்ன செய்தாலும் சிறிலங்கப் படைகளால் கொல்லப்பட்ட பல்லாயிரம் தமிழர்களையும் உயிர்மீட்க முடியாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் திறமான அலுவலகம் அமைப்பதாகத் தரப்பட்ட உறுதிமொழி பன்னாட்டுலகச் சமுதாயத்தை ஏமாற்றும் நோக்கமுடைய நாடகமே தவிர வேறன்று என்பது கோத்தபயாவின் ஒப்புதலிலிருந்து தெளிவாகிறது என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.