புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2020

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை யாரிடமும் தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்- சாணக்கியன்

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று,(வியாழக்கிழமை) வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள தலைமைகள் தங்களால் முடிந்த வரை தமிழ் தேசியத்தின் இலக்கினை நோக்கி உச்சளவு பயணித்து விட்டு அடுத்த சந்ததியினரிடம் அவ் இலக்கினை கொடுத்துள்ளார்கள்.

கடந்த 70 வருடத்திற்கு முன்னர் சி.மூ.இராசமாணிக்கம் ஐயா மற்றும் ஏனைய தலைமைகள் தமிழ் தேசிய இலட்சியத்தினை அடைவதற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். அதற்கு பின்னர் வந்த தமிழ் தேசியப்பற்றாளர்களிடம் சரியான முறையில் கையளித்ததன் பிரகாரமே வெல்லாவெளி போன்ற பிரதேசங்களில் இன்றும் தமிழ் தேசியப்பற்றுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்றையகால சந்ததியினரும் தமிழ் தேசிய இலட்சிய பாதையில் பயணித்து எம்மால் முடியுமான வரை தமிழ் தேசியத்திற்கு பணியாற்றி விட்டு எம்மால் அடையமுடியாமல் போன இலக்கினை வரும்கால சந்ததியினருக்கு கையளிப்பதனூடாக எமது இலட்சியத்தினை அடையக்கூடியதாக இருக்கும்.

இதனை திசை திருப்புவதற்காக ஆளும் கட்சியினர் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை மக்களிடையே திணிப்பதன் ஊடாக தக்க வைக்கலாம் என நினைக்கின்றார்கள். அவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது மக்கள் அடிபணியப் போவதுமில்லை. சோரம் போகப் போவதுமில்லை.

அவ்வாறு செல்வோமாயின் மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு போன்று நாமும் ஏமாற்றமடைய வேண்டியவர்களாகி விடுவோம்.

இந்த நாட்டில் தமிழர்களாகிய நாம், இரண்டாம் தர பிரஜைகள் அல்லர். நாமும் இந்த நாட்டில் சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ வேண்டியவர்கள்.

எதிர்வரும் தேர்தலில் தமிழர் பிரதேசங்களில் வாக்களிப்பினை அதிகரித்து ஆசனங்களை அதிகம் பெற வேண்டும். அப்போதுதான் இந்த அரசிடமிருந்து நாம் உரிமை, சம அந்தஸ்து போன்றவற்றை வெகுவாகப் பெறலாம்” என குறிப்பிட்டுள்ளார்

ad

ad