-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

6 ஜூன், 2020

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பு

கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கவலை வெளியிட்டுள்ளார்.

பிழையான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் அளவுக்கதிகமானதாக காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் பல நாடுகள் ஏற்கனவே போலியான செய்திகள் மற்றும் இணைய ஊடகங்கள் தொடர்பான சட்டங்களை கொண்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட், இந்தச் சட்டங்கள் காரணமாக மனித உரிமைகள் குறித்த கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டங்கள் வேறு சூழமைவுகளில் நியாயபூர்வமான பேச்சுக்களை தடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர், குறிப்பாக பொதுவிவாதம், அரசாஙகத்தின் கொள்கைகள் குறித்த விமர்சனம் போன்றவற்றை தடுப்பதற்கு இந்த சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு போலியான செய்திகள் மற்றும் இணைய ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 காரணமாக பல நாடுகளில் தணிக்கைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ள என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையாளர், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கண்மூடித்தனமாக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமி குறித்த தகவல்களை தங்கள் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிருப்தியை வெளியிட்டமைக்காக பத்திரிகை அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பிழையான தகவல்களை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறீலங்காப் பதில் காவல்மா அதிபர் கொரோனா கிருமி தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை விமர்சிப்பவர்கள் அல்லது சிறிய குறைபாடுகளை சுட்டிக்காட்டுபவர்களை கைதுசெய்யப்போவதாக மிரட்டினார் என மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போலியான அல்லது தீங்குவிழைவிக்கும் செய்திகளை பரப்புபவர்களையும் கைதுசெய்யப்போவதாக அவர் எச்சரித்தார் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளை அல்லது கொள்கைகளை விமர்சிப்பதற்காக கைதுசெய்வது என்பது அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கை என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு சிறீலங்காக் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது எனவும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

முகநூல் பதிவுகளிற்காக பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்

விளம்பரம்