-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 மார்., 2021

ஐ.நா தீர்மானத்தால் ஸ்ரீலங்காவிற்கு பொருளாதாரத் தடை? விளக்கும் அமைச்சர்!

www.pungudutivuswiss.com
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக பொருளாதார தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இல்லையென்று ஸ்ரீலங்கா அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலேயே பொருளாதார தடை தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக ஸ்ரீலங்கா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது என்றும் இவ்வாறான தடை விதிக்கப்பட வேண்டுமாயின், ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பாதுகாப்பு சபையில் வீடோ அதிகாரத்தை கொண்ட பல நாடுகள் உள்ளதாகவும் அவை ஸ்ரீலங்காவிற்கு ஆதரவு வழங்கும் என்று கூறினார்.

ஸ்ரீலங்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்துள்ளதுடன் 11 நாடுகள் எதிராக வாக்களித்த நிலையில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது

விளம்பரம்