புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2021

இலங்கையின் மனித உரிமை நிலை மோசம் - பிரித்தானியா கவலை

www.pungudutivuswiss.com
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரிதும் மோசமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன், போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.


இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரிதும் மோசமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன், போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் மீறி, 2020 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருப்பதாகவும் பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் சமூகக்குழுக்களின் வகிபாகங்களை வலுப்படுத்துவதற்கும் போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் உறுதியளித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தினால் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் நிலைவரம் தொடர்பில் வருடாந்தம் அறிக்கை வெளியிடப்படும்.

அந்தவகையில் குறித்த அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைப் பொறுத்தவரையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அது ஒட்டுமொத்தமாக மிகவும் மோசமடைந்திருந்தது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சுதந்திரமானதும் அமைதியானதுமான முறையில் பாராளுமன்றத்தேர்தலை நடத்தியதுடன், சர்வதேச நாடுகளில் பதிவான கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவானதாகவே காணப்பட்டது.

எதுஎவ்வாறெனினும் சிவில் சமூக அமைப்புக்களின் மீதான தொடர்ச்சியான கண்காணிப்பும் அடக்குமுறையும் காணப்பட்டது. அதுமாத்திரமன்றி சில சமூகத்தினர் அவர்களது மதநம்பிக்கையின்படி உயிரிழந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கான உரிமைக்குத் தடைவிதிக்கப்பட்டதுடன் குற்றச்சாட்டுக்களின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்தன. மேலும் போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.

அடுத்ததாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது போரின் பின்னரான நிலைமாறுகால நீதிப்பொறிமுறை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிவற்றை உறுதிசெய்வது தொடர்பில் ஏற்கனவே இலங்கையினால் இணையனுசரனை வழங்கப்பட்டிருந்த 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது. அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு உள்ளகப்பொறிமுறையைக் கையாள்வதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும், தற்போதுவரை அதில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை.

எனினும் 2020 பெப்ரவரி, ஜுன் மற்றும் செப்டெம்பரில் ஆகிய மாதங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்த நாடுகளின் சார்பில் பிரிட்டனால் (எம்மால்) வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டில் மிருசுவில் என்ற இடத்தில் ஒரு சிறுவர் உள்ளடங்கலாக 8 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2015 ஆம் ஆண்டில் மரணதண்டனை வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர் சுனில் ரத்நாயக்க கடந்த 2020 மார்ச் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டமையானது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை மேலும் கேள்விக்கு உட்படுத்தியது.

அ துமாத்திரமன்றி போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்த சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரிகள் அரசநிர்வாகக் கட்டமைப்பின் முக்கிய பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதுடன் சிவில் நடவடிக்கைளை முன்னெடுக்கும் அரச சார்பற்ற கட்டமைப்புக்களின் செயலகங்கள் பலவும் பாதுகாப்பு அமைச்சின்கீழ்க் கொண்டுவரப்பட்டன. அத்தோடு நீதிமன்றம் உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்கள் பலவற்றுக்குமான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின்கீழக் கொண்டுவரும் வகையிலான திருத்தங்களுடன் அரசாங்கத்தினால் கடந்த அக்டோபர் மாதத்தில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இது சில முக்கிய கட்டமைப்புக்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்தது. பொதுத்தேர்தலை நடத்துவதற்காகக் ஜனாதிபதியினால் கடந்த மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தேர்தல்கள் இருமுறை பிற்போடப்பட்டன.

அமைதியான முறையிலும் ஜனநாயகத்தன்மையுடனும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்களும் பிற்போடப்பட்ட மார்ச் தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்குட்பட வேண்டிய பல விடயங்கள் தவறவிடப்பட்டன. குறிப்பாக அக்காலப்பகுதியில் கொவிட் - 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பாராளுமன்றத்தில் ஆராயப்படாமல் அரசாங்கத்தினால் சில விசேட ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்பட்டன.

அதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தொற்றினால் உயிரிழக்கும் சடலங்கள் அனைத்தையும் கட்டாயமாகத் தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தை 2020 மார்ச் மாதம் அரசாங்கம் வெளியிட்டது. இந்தப் பக்கச்சார்பான நடவடிக்கையானது முஸ்லிம் சமூகத்தையும் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலரையும் வெகுவாகப் பாதிப்பது.

அரசாங்கத்தின் இத்தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் அனைத்தும் 2020 டிசம்பர் மாதத்தில் உயர்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. மேலும் முஸ்லிம்கள் கொவிட் - 19 பரவல் தடுப்பு வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்களே வைரஸ் காவிகளாகத் தொழிற்பட்டு அதனைப் பரவச்செய்கின்றார்கள் என்றும் வெளியான பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் இக்காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு வெகுவாக அதிகரித்தது.

அத்தோடு அரசாங்கத்தின் கொவிட் - 19 வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் கருத்துவெளியிடுபவர்களைக் கைதுசெய்வது தொடர்பில் ஏப்ரல் மாதத்தில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் கருத்துச்சுதந்திரத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக ஜுன் மாதமளவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் விசனம் வெளியிட்டார். நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு உதவுவதற்கு பிரிட்டன் (நாம்) முன்வந்திருந்ததுடன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்களை வெளிப்படுத்துவதற்கு ஏற்றவகையில் ஊடகங்களின் இயலுமையை விரிவுபடுத்துவதற்கும் உதவினோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியையும்மீறி, 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் தொடர்ச்சியாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவந்தது.

மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையின் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவுசெய்யப்படாமல், நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

மனிதஉரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இயங்கும் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் மீதான கண்காணிப்பு, அடக்குமுறைகள் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் என்பன இக்காலப்பகுதியில் அதிகரித்தமையினை சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் அவதானித்துள்ளன.

கொவிட் - 19 வைரஸ் பரவலை மையப்படுத்தி கடந்த 2020 நவம்பர் மாதத்தில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் 11 கைதிகள் உயிரிழந்ததுடன் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதுகுறித்து விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது, துப்பாக்கிச்சூட்டின் காரணமாகவே குறித்த கைதிகள் உயிரிழந்ததாகப் பதிவுசெய்தது.

மேலும் அதிகரித்துவரும் பொலிஸ் காவலின் கீழான மரணங்கள் தொடர்பில் நவம்பர் மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது.

மேலும் 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் சிறுபான்மையினத்தவரின் சுதந்திரம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ந்தும் வழங்கிவந்தது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் சமூகக்குழுக்களின் வகிபாகங்களை வலுப்படுத்துவதற்கும் போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும் பிரிட்டன் தயாரக இருக்கின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad