புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2021

கால்பதிக்கும் சீனா; தாலிபன்களால் ரத்த பூமியான ஆப்கானிஸ்தான்! – என்ன நடக்கிறது?வெளியேறிய அமெரிக்கா

www.pungudutivuswiss.com

தினசரி ஆப்கன் ராணுவமும், தாலிபன்களும் மோதிக்

கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இருதரப்பின் மோதலால் மீண்டும் ரத்த பூமியாக மாறியிருக்கிறது ஆப்கன் மண்! – என்ன நடக்கிறது அங்கே? ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி பதவியிலிருந்து நீக்கப்படும் வரை ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பாது” என்று முன்னரே அறிவித்திருந்தது தாலிபன் அமைப்பு. அதேபோலக் கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் அமைதி என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் உள்நாட்டுப் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தினசரி ஆப்கன் ராணுவமும் தாலிபன்களும் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இருதரப்பின் மோதலால் மீண்டும் ரத்த பூமியாக மாறியிருக்கிறது ஆப்கன் மண்!

வெளியேறி வரும் அமெரிக்கா!

11 செப்டம்பர், 2001 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தது அல்-கொய்தா அமைப்பு. இதில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். அந்தச் சமயத்தில் அல்-கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததாகச் சொல்லி ஆப்கனில் குவிக்கப்பட்டன அமெரிக்கப் படைகள். இதனால், அப்போது ஆப்கனை ஆட்சி செய்த தாலிபன் அமைப்பு அதிகாரத்தை இழந்தது. ஆஸ்திரேலியா, கனடா, நேட்டோ படைகள் ஆகியவற்றின் உதவியோடு தாலிபன்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றியது அமெரிக்கா.

தீவிரவாதிகளுக்கு எதிரான போர்’ எனச் சொல்லி, அப்போதிலிருந்து 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்தன அமெரிக்கப் படைகள். ஆப்கானிஸ்தான் அரசியலில் பல்வேறு இனக்குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. அவர்களில் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் இனக்குழுக்களை ஒன்றிணைத்து ஆப்கன் அரசியலை மாற்றியமைக்க முயன்றது அமெரிக்கா. ஆனால், இனக்குழுக்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னையால் இன்றுவரை அமெரிக்காவால் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் பிரெளன் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், `கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் 1,74,000 பேர் போர் காரணமாக உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் 2,300 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள். இந்தப் போருக்காக அமெரிக்கா சுமார் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரைச் செலவழித்திருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த சூழலிலும், ஆப்கனின் 407 மாவட்டங்களில் 140 மாவட்டங்களை தாலிபன்கள் தன்னகத்தே வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இந்த 20 ஆண்டுக்கால போரில் அமெரிக்காவால் வெல்ல முடியவில்லை என்பதே உண்மை.

இந்தநிலையில், “வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கப் படைகள் விலகப்பட்டுவருகின்றன. அமெரிக்கப் படைகள் விலகத் தொடங்கிய நாள் முதலே தங்களது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது தாலிபன் அமைப்பு. ஆப்கன் அரசு வசமிருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி, அந்தப் பகுதியை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது தாலிபன். குறுகிய காலகட்டத்தில் மிக வேகமாக ஆப்கானிஸ்தானில் முன்னேறிவருகிறது தாலிபன் படை.

தாலிபனைப் பொறுத்தவரை, `ஆப்கனின் ஆட்சிப் பொறுப்பெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. தற்போது அதிபராக இருக்கும் அஷ்ரஃப் கானி பதவி விலக வேண்டும். நாங்கள் தேர்வு செய்யும் நபர் அதிபராக வேண்டும். நாங்கள் சொல்லும் சட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும்’ என்பதுதான் அவர்களது கோரிக்கை எனச் சொல்லப்படுகிறது. கடந்த மூன்று நாள்களில் ஆப்கனின் முக்கியமான ஐந்து நகரங்களைத் தங்கள் வசமாக்கியிருக்கிறது தாலிபன். ஞாயிற்றுக்கிழமை (ஆக. 8) அன்று மட்டும் மூன்று நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் பலம் பொருந்திய இடமான குண்டூஸ் நகரைக் கைப்பற்றியிருக்கிறது. ஆப்கனின் வடக்கு மாகாணங்களின் தலைநகர்களான சார்-இ-புல், தலோகான் ஆகிய நகரங்களையும் கைப்பற்றியிருக்கிறது.

வேகமாக முன்னேறிவரும் தாலிபன்களைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது ஆப்கன் அரசு. ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில், ஆப்கனின் 18 மாகாணங்களில், 572 தாலிபன்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அறிவித்திருக்கிறது. மேலும் சில இடங்களில் பதுங்கியிருந்த அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள், தாலிபன்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஆப்கன் ராணுவத்தால் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஆப்கன் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

“ஆப்கானிஸ்தான் அரசு திருப்பி அடித்தாலும், தாலிபன்கள் வேகமாக முன்னேறிவருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. 20 ஆண்டுகளாக அடக்கிவாசித்த தாலிபன்கள் இவ்வளவு பலம்கொண்டவர்களாக இருப்பார்கள் என ஆப்கன் அரசு நினைக்கவில்லை. அதனால் அவர்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிவருகிறது ஆப்கன் ராணுவம் என்பதுதான் உண்மை” என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். 2001-ம் ஆண்டுக்கு முன்பு தாலிபன்கள் ஆட்சியிலிருந்தபோது, `இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான்’ என்ற பெயரில் தங்களின் ஆட்சியை எதிர்ப்பவர்களைச் சுட்டு வீழ்த்திவந்தது தாலிபன். பெண்கள் வேலைக்குச் செல்வது, படிக்கச் செல்வதை தாலிபன்கள் அறவே விரும்பாதவர்கள். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இது போன்று என்னென்ன அடக்குமுறைகள் இருக்குமோ என்கிற அச்சத்தில் ஆப்கன் மக்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தாலிபன்கள் நடத்தும் தாக்குதல்களில் ஆப்கன் ராணுவத்தினர் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துவருகின்றனர். தாக்குதல்களைத் தாண்டி, தனிப்பட்ட முறையிலும் சிலரைக் கொலை செய்துவருகிறது தாலிபன்.சமீபத்தில் ஆப்கன் மக்களைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த நகைச்சுவைக் கலைஞர் நாசர் முகம்மது காஸாவை கொலை செய்தது தாலிபன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கன் மக்கள், “தாலிபன்களுக்கு, இஸ்லாமியர்கள் பாடுவதோ, சிரிப்பதோ, நடனமாடுவதோ, மகிழ்ச்சியாக இருப்பதோ பிடிக்காது. மூளைச்சாவு அடைந்த இஸ்லாமியர்கள்தான் அவர்களுக்கு வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தனர்.

அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர், இறுக்கமான உடை அணிந்திருந்ததாலும், வெளியே செல்லும்போது ஆண் துணை இல்லாமல் சென்றதாலும் 21 வயது பெண் ஒருவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது தாலிபன் அமைப்பு. அந்தப் பெண் தான் அணிந்திருந்த ஆடையின்மீது புர்கா அணிந்திருந்தும், அவர் கொல்லப்பட்டிருப்பது ஆப்கன் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தாலிபன்களுக்கு நாங்கள் ஆதரவு தரவில்லை’ என்று தொடர்ந்து பாகிஸ்தான் சொல்லி வந்தாலும், அந்த நாட்டின் செயல்பாடுகள் அனைத்தும் அவர்களுக்கு ஆதரவானதாகவே இருந்திருக்கின்றன. கடந்த மாதம் தாலிபன்கள் ஆப்கனில் கடும் தாக்குதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில், “தாலிபன்கள் ராணுவ அமைப்பு கிடையாது. அவர்களும் சாதாரண பொதுமக்கள்தான்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார்.

“பாகிஸ்தான், தாலிபன்கள் பக்கம் நிற்பதாலேயே இந்தியாவுக்கு அவர்கள் சிக்கலாகத்தான் அமைவார்கள். அதுமட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கைக்கு வந்துவிட்டால், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு இந்தியாவுக்குத் தலைவலி ஏற்படுத்தக்கூடும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.ஆப்கனிலிருந்து அமெரிக்கா வெளியேறிவரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கு கால்பதிக்கத் திட்டமிட்டிருக்கிறது சீனா. ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் சீனாவுக்கு தாலிபன்கள் குழு ஒன்று கடந்த ஜூலை மாத இறுதியில் சென்றது. அங்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-யை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது தாலிபன் குழு.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், “வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் அரசியல், பொருளாதாரம், இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசப்பட்டன. ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை குறித்தும், சமாதானப் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டன” என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் தெரிவித்தார்.

மேலும், “சீனாவுக்கு எதிராக ஆப்கனின் மண்ணைப் பயன்படுத்த யாரையும் தாலிபன்கள் அனுமதிக்க மாட்டோம் என சீனாவுக்கு உறுதியளித்தோம். ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்னையில் சீனா தலையிடாது. ஆனால், பிரச்னைகளைத் தீர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் சீனா உதவி செய்யும்” என்றார் முகமது நயீம்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் சீனா, “ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், அந்த நாட்டைச் சீரமைப்பதிலும் தாலிபன்கள் முன் நிற்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தது. இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த சமயத்தில், ஆப்கனில், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சீனா சில திட்டங்களைச் செயல்படுத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad