புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2022

அயர்லாந்துக்கு எதிராக இலங்கை இலகு வெற்றி

www.pungudutivuswiss.com
T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியினை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

முன்னதாக அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டியில் உபாதைச் சிக்கல்கள் கருதி ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பெதும் நிஸ்ஸங்கவிற்கு இலங்கை அணி ஓய்வு வழங்க அஷேன் பண்டார அணிக்குள் அழைக்கப்பட்டிருந்தார். அதேநேரம் ப்ரமோத் மதுசானிற்கும் இன்றைய போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை XI – தசுன் ஷானக்க (தலைவர்), அஷேன் பண்டார, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ

அயர்லாந்து XI – போல் ஸ்டெர்லிங், அன்டி பல்பைர்னி (தலைவர்), லோர்கன் டக்கர், ஹர்ரி டெக்டர், கேர்டிஸ் கேம்பர், ஜோர்ஜ் டொக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடைர், சிமி சிங், பெர்ரி மெக்கார்த்தி, ஜோஸ் லிட்டில்

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அயர்லாந்து அணிக்கு போட்டியின் ஆரம்பத்திலேயே லஹிரு குமார நெருக்கடியினை உருவாக்கினார். இதனால் அணித்தலைவர் அன்டி பல்பைர்னியின் விக்கெட் அவர் போல்ட் செய்யப்பட்டு ஒரு ஓட்டத்தினை மாத்திரம் பெற்ற நிலையில் பறிபோனது.

தொடர்ந்து இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர்களும் அயர்லாந்து அணிக்கு சிக்கலைத் தோற்றுவித்தனர். எனினும் ஏனைய ஆரம்பவீரர்களில் ஒருவரான போல் ஸ்டேர்லிங் சீரான முறையில் அணியின் ஓட்டங்களை அதிகரிக்கத் தொடங்கி ஆட்டமிழந்தார். போல் ஸ்டேர்லிங் 25 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போல் ஸ்டேர்லிங்கின் பின் இலங்கை பந்துவீச்சாளர்களால் அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தில் தடுமாறிய போதும் ஹர்ரி டெக்டர் சற்று ஆறுதல் கொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் அவ்வணி 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்கள் எடுத்தது.

அயர்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹர்ரி டெக்டர் 42 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை வீரர்கள் சிறந்த மனநிலையுடன் உள்ளனர் – மஹேல ஜயவர்தன

இலங்கை பந்துவீச்சு சார்பில் மகீஷ் தீக்ஷன, வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, சாமிக கருணாரட்ன, பினுர பெர்னாண்டோ, தனன்ஞய டி சில்வா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 129 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி தனன்ஞய டி சில்வா – குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம் மூலம் வலுப்பெற்றது. இந்த வீரர்கள் இருவரும் இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.

பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக கரேத் டெலானியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த தனன்ஞய டி சில்வா 25 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார்.

தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டின் பின்னர் சரித் அசலன்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தை அடுத்து இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த குசல் மெண்டிஸ் தொடரில் தன்னுடைய இரண்டாவது தொடர் அரைச்சதத்தினைப் பதிவு செய்து 43 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற, சரித் அசலன்கவும் ஆட்டமிழக்காது 2 பௌண்டரிகள் அடங்கலாக 22 பந்துகளுக்கு 31 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் அயர்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் கரேத் டெலானி ஒரு விக்கெட்டினை சாய்த்தும் அது பிரயோசனமாகவிருக்கவில்லை.

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவாகினார். இனி சுபர் 12 சுற்றில் இலங்கை ஆடும் அடுத்த போட்டி அவுஸ்திரேலிய அணியுடன் பேர்த் நகரில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பமாகின்றது.

ad

ad