உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தியது. தோகா, உலக கோப்பை கால்பந்து போட்டியில் ராஸ் அபு அபுடில் உள்ள ஸ்டேடியம் 974 இல் 'ஜி' பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. பிரேசில் , சுவிட்சர்லாந்து அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தன. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக ஆடவில்லை. இந்நிலையில் இன்று இரவு தொடங்கிய போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியில் 83-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் கேஸ்மிரோ தனது அணிக்கான கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டபோதும் சுவிட்சர்லாந்து அணியினரின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் அணி 1/8 வது சுற்றுக்கு தகுதி பெற்றது