புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2022

"காந்தி கொலைக்கு உதவிய கோபால் கோட்சேவை காங்கிரஸ் விடுவித்தபோது இந்தியாவின் இதயம் எங்கே போனது..." - கு. ராமகிருஷ்ணன்

www.pungudutivuswiss.com
கடந்த பல வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்தவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் அவர்களின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றன. காலம் தாழ்த்தி இந்த தீர்ப்பு கிடைத்திருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று பலரும் கருத்து வருகிறார்கள். இதுதொடர்பாக கு.ராமகிருஷ்ணனிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு 

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருந்த ஆறு பேரையும் உச்சநீதிமன்றம் தற்போது விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் தேவையற்ற கால தாமதம் செய்த காரணத்திற்காக ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு எழுந்துள்ளது. இந்த விடுதலை தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?

 

மிக நீண்ட நாட்களாகத் தமிழக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த விடுதலை தற்போது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம், காலம் கடந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என்றாலும் இப்போதாவது அவர்கள் விடுதலை காற்றைச் சுவாசிக்கிறார்களே என்ற மகிழ்ச்சி அனைவருக்கும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் கால தாமதம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அவர் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இது மாநிலத்தை ஆளுகின்ற திமுகவின் மாநில சுயாட்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன் 

இவர்களின் விடுதலையைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றம் இந்தியாவின் ஆன்மா பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதில் உங்களின் பார்வை என்ன? 

 

அவர்கள் அவர்களுடைய தலைவரை இழந்திருக்கிறார்கள், அதற்காக இதைச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால் வரலாற்றை மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும். காந்தி படுகொலையில் குற்றவாளியான கோட்சே தண்டிக்கப்படுகிறார். அவருக்கு உறுதுணையாக இருந்த கோபால் கோட்சேவுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்து சிறையில் அடைக்கிறது. 10 ஆண்டுகள் சிறையிலிருந்த அவரை அப்போது மகாராஷ்டிராவை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி அவரை விடுதலை செய்கிறது. அப்போது இந்தியாவின் மனசாட்சி எங்கே போனது. 

 

அவர்கள் தவறு செய்தார்களா இல்லையா என்ற விவாதத்துக்குள்ளேயே தற்போது போகத் தேவையில்லை. எந்த ஒரு குற்றத்துக்காக இருந்தாலும் 32 ஆண்டுகள் என்பது மிக அதிகம் . இவர்கள் தங்கள் வாழ்க்கையே சிறையில் கழித்துள்ளார்கள். அதில் உள்ள தார்மீக தன்மையைப் பார்க்க வேண்டும். அதில் அரசியல் செய்யலாம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் கண்டிப்பாகப் பதவி விலக வேண்டும்.


ad

ad