தற்போது காஸாவில் பதிவாகிவரும் படுகொலைகளையும், இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற படுகொலைகளையும் ஒப்பிட்டு பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இதுபற்றிக் கருத்துவெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மேற்குலக நாடுகளைப் பொறுத்தமட்டில் மனித உரிமைகள் என்பது வெறுமனே பேரம்பேசுவதற்கான கருவி மாத்திரமே என்பதையே இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் செயற்பாடுகள் தெளிவாக உணர்த்துவதாகத் தெரிவித்தார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் மேற்குலக நாடுகளின் நகர்வுகளுக்கு ஏற்ப நாமும் காய்களை நகர்த்தவேண்டுமே தவிர, வெறுமனே அவர்கள் கூறுவதை மாத்திரம் செய்பவர்களாகவோ, அவதானிப்பாளர்களாகவோ இருக்கக்கூடாது எனவும் அவர் அவர் வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அனைத்து அமர்வுகளிலும் பலஸ்தீன விவகாரம் குறித்துப் பேசப்படுகின்ற போதிலும், அதனால் என்ன பயன் அடையப்பட்டிருக்கின்றது?' எனக் கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதும் இதனை ஒத்தது தான் என்று குறிப்பிட்டார். 'இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் எக்காலத்திலும் நீங்கப்போவதில்லை. எனவே இலங்கை விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேசுபொருளாக வைத்திருக்கவேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு உண்டு. அதன்மூலம் எதிர்காலத்தில் சீனசார்பு அரசாங்கமொன்று ஆட்சிபீடமேறினால், அதன்மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு இவ்விவகாரத்தைப் பயன்படுத்தமுடியும். எனவே பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வும் கிட்டாது' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நாடுவதாக இருந்தால், இவ்விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதன் ஊடாக மாத்திரமே அதனை அடைந்துகொள்ளமுடியும் என்று அவர் தெரிவித்தார். |