2022 மே 9 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தூதுவர் கருத்து தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது. இரண்டு வாரங்களிற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் குழுவின் தலைவர் உறுப்பினர்கள் முப்படை தலைவர்கள் பாதுகாப்பு செயலாளர் உட்பட்டவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார். ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து வெளிப்படையான விசாரணையை அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார், ஆர்ப்பாட்டங்களிற்கான மக்களின் உரிமையை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் என தனது கடிதத்தில் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். டயர்களை எரிப்பது வீதிகளை புகையிரத பாதைகளை மறிப்பது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அழிப்பது பொலிஸார் மீது கற்களை வீசி எறிவது போன்றவற்றை ஆர்ப்பாட்டங்களாக அமைதியான நடவடிக்கைகளாக கருதமுடியுமா என சரத் வீரசேகர தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தூதுவருக்கு இதனை கிரகிப்பதற்கான ஆற்றல் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை குறித்து அறிக்கை வெளியிடுவதற்கு தனிநபருக்கு உள்ள உரிமை குறித்து அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள சரத் வீரசேகர பொலிஸார் ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டனர் என தெரிவித்ததன் மூலம் தற்போது எங்கள் நாட்டில் வசிக்கும் தூதுவர் இலங்கை குறித்து உலகிற்கு பாதகமான செய்தியை அனுப்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களின் போது அமெரிக்க இராணுவம் எவ்வாறு நடந்து கொண்டது அவர்களை கட்டுப்படுத்தியது என்பதையும் சரத் வீரசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தனது அறிக்கைகள் மூலம் ஜூலி சங் அரசாங்கத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்தார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். |