புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2023

இங்கிலாந்து வெளியேற்றம்: ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து நான்காவது வெற்றி - 1999 வரலாறு திரும்புகிறதா?

www.pungudutivuswiss.com
உலகக்கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வெளியேற்றி ஆஸ்திரேலியா தனது அரையிறுதி வாய்ப்பை எளிதாக்கிக் கொண்டுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை 33 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்தை முந்தி மூன்றாவது இடத்திற்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

வார்னர், ஹெட் ஏமாற்றம்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை, ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், மார்ஷ்க்கு பதிலாக கேமரூன் கிரீன், ஸ்டாய்னிஷ் சேர்க்கப்பட்டனர்.

டேவிட் வார்னர், டிராவிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் பவுண்டரியுடன் 9ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. வோக்ஸ் வீசிய 2வது ஓவரில் ஹெட் 11 ரன்கள் சேர்த்தநிலையில் ஸ்லிப்பில் நின்றிருந்த ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஸ்மித், வார்னருடன் இணைந்து ஆடினார். வார்னரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 6-வது ஓவரைவீசிய வோக்ஸ் பந்துவீச்சில் மிட்விக்கெட் திசையில் வில்லேயிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பவர்ப்ளே ஓவருக்குள் ஆஸ்திரேலியா 2விக்கெட்டுகளை இழந்து, 48 ரன்கள் சேர்த்தது.

விளம்பரம்

7-வது முறையாக ரஷித்-ஸ்மித்
3வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுஷேன் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். ஸ்மித் பவுண்டரிகள் பெரிதாக அடிக்காமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார், ஆனால், லாபுஷேன் சில பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்தது.

அரைசதத்தை நோக்கி நகர்ந்த ஸ்மித் 44 ரன்கள் சேர்த்தநிலையில் ரஷித் வீசிய 22-வது ஓவரில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக அதில் ரஷித் பந்துவீச்சில் ஸ்மித் விக்கெட்டை பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுஷேன் கூட்டணி 75 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 3 ரன்கள் சேர்த்தநிலையில் ரஷித் பந்துவீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக ஆடிவந்த லாபுஷேன் 63 பந்துகளில் அரைசதம் அடித்தார். 30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதி ஓவர்களை கட்டுக்கோப்புடன் வீசியதால், லாபுஷேன், கேமரூன் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். இருப்பினும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்களைச் சேர்த்தனர்.

மார்க் உட் வீசிய 33-வது ஓவரில், லாபுஷேன் கால்காப்பில் வாங்கி 71 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்தனர். ்டுத்து வந்த ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஷ், கேமரூனுடன் சேர்ந்தார். இருவரும் அடித்து ஆட முற்பட்டாலும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியதால், ரன் சேர்க்க கடும் சிரமப்பட்டனர். 40ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்தது.

41-வது ஓவரை வீசிய வில்லேயின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி கேமரூன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களில் அடித்து ஆட ஸ்டாய்னிஷ் முற்பட்டு விக்கெட்டை இழந்தார். லிவிங்ஸ்டோன் வீசிய 44வது ஓவரில் ஸ்டாய்னிஷ் பவுண்டரி, சிக்ஸர் அடித்து, கடைசிப்பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 35 ரன்களில் வெளியேறினார். கேப்டன் கம்மின்ஸ் 10 ரன்கள் சேர்த்தநிலையில் மார்க்வுட் வீசிய 45ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
டெய்லெண்டர்களின் போராட்டம்
41 முதல் 45ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டெய்லண்டர்கள் ஆடம் ஸம்பா, ஸ்டார்க் இருவரும் கடைசி நேரத்தில் சில பவுண்டரிகள் அடித்து ரன் சேர்க்கப் போராடினர். மார்க்வுட் வீசிய 47-வது ஓவரில் ஸம்பா 2 பவுண்டரிகளை விளாசினார்.

முக்கிய வீரர்களை வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடைசி வரிசையில் டெய்லண்டர்கள் விக்கெட்டைச் சாய்க்க கடுமையாகப் போராடினர். ஆனாலும், ஸம்பா, ஸ்டார்க் இருவரும் ரன் சேர்க்கப் போராடினர்.

வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் ஸம்பா 29 ரன்னில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 3வது பந்தில் ஸ்ட்ராக் 10 ரன்கள் சேர்த்தநிலையில் மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார்.

49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோர்ஸ் 4 விக்கெட்டுகளையும், அதில் ரஷித், மார்க் உட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
பேர்ஸ்டோ, ரூட் ஏமாற்றம்
287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆரம்பமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் பேர்ஸ்டோ ரன் ஏதும் சேர்க்காமல் விக்கெட் கீப்பர் இங்கலிஸிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்துவந்த ஜோ ரூட், மலானுடன் சேர்ந்தார். ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் ஜோ ரூட் அடித்த பந்து கவர் திசையில்நின்றிருந்த ஸ்டாய்னிஷ் கைகளுக்குச் சென்றும் அவர் பிடிக்காமல் கோட்டைவிட்டார்.

ஸ்டார்க் வேகப்பந்துவீச்சுக்கு திணறிய ரூட் 13 ரன்னில் இங்கிலிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ஸ்டோக்ஸ், மலான் நிதான ஆட்டம்
மலான், பென் ஸ்டோக்ஸ் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் பேட் செய்ததால், ரன்ரேட் மெல்ல உயர்ந்தது. 11வது ஓவரிலிருந்து 15வது ஓவர்கள் வரை ஒரு பவுண்டரிகூட இங்கிலாந்து அடிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள்தான் சேர்த்திருந்தது.

21 ஓவர்களுக்குப்பின் மலான், ஸ்டோக்ஸ் அதிரடியில் இறங்கி பவுண்டரி, சிக்ஸர் விளாசியதால் 22வது ஓவரில் இங்கிலாந்து 100 ரன்களை எட்டியது. 63 பந்துகளில் அரைசதம் அடித்த டேவிட் மலான் நீண்டநேரம் நிலைக்கவில்லை.

கம்மின்ஸ் வீசிய 23-வது ஓவரில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து 50 ரன்னில் மலான் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 84 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
பட்லருக்கு என்னாச்சு!
அடுத்துவந்த பட்லர், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். இந்தத் தொடர் முழுவதுமே பட்லர் தனது இயல்பான ஆட்டத்துக்கு வரமுடியாமல் சிரமப்பட்டு வருகிறார். கேப்டன் பொறுப்பு சமையாக மாறிவிட்டதா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த போட்டிகளைப் போன்று இந்த ஆட்டத்திலும் பட்லர் ஏமாற்றினார்.

ஆடம் ஸம்பா வீசிய 25-வது ஓவரில் பட்லர் ஒரு ரன்னில் கேமரூன் கீரீனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிதானமாக ஆடினார். 30 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
ஸ்டோக்ஸ் அரைசதம்
பொறுமையாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸுக்கு துணையாக மொயின் அலியும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தார்.

ஆடம் ஸம்பா வீசிய 36-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 64 ரன்களில் ஸ்டாய்னிஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக ஆடக்கூடிய லிவிங்ஸ்டோன் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆடம் ஸம்பா வீசிய 40-வது ஓவரில் மொயின் அலி 42 ரன்னில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டேவிட் வில்லே, வோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காகப் போராடினர். 42 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிக்கு 75 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசிவரிசை பேட்டர்கள் மட்டுமே இருந்ததால், வெற்றி விலகிச் சென்றது.

ஹேசல்வுட் வீசிய 44-வது ஓவரில் வில்லே 15 ரன்களில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 216 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கித் தடுமாறியது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
டெய்ல் எண்டர்கள் போராட்டம்
ஸ்டாய்னிஷ் வீசிய 48-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 32ரன்கள் சேர்த்திருந்த நிலையில் லாபுஷேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹசல்வுட் வீசிய 49-வது ஓவரில் ரஷித்20 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

48.1ஓவர்களில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

1999 வரலாறு திரும்புகிறதா?
1999-ம் ஆண்டு உலகக்கோப்பையில் லீக் சுற்றில் தட்டுத்தடுமாறி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த ஆஸ்திரேலியாவுக்கு அதன் பிறகு அனைத்துப் போட்டிகளையும் வென்றால்தான் அரையிறுதி என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் இருந்து அந்த அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் 3 போட்டிகள், அரையிறுதி, இறுதி என அனைத்திலும் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. ஸ்டீவ வாக் தலைமையில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றி, அடுத்த 12 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அணியாக அதனை மாற்றியது. 3 உலகக்கோப்பைகளை அந்த அணி வரிசையாக வென்றது.

அதேபோல், நடப்பு உலகக்கோப்பையின் தொடக்கத்தில் தோல்விகளால் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, தற்போது அதிலிருந்து மீண்டு தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 1999 வரலாற்றை ஆஸ்திரேலியா மீண்டும் நிகழ்த்திக் காட்டுமா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதிக்கின்றனர்

ad

ad