புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2024

கதிரைக்காக அலையும் அரசியலில் கட்சி என்னடா? கொள்கை என்னடா?

www.pungudutivuswiss.com



இந்த வருடம் எழுபத்தைந்தாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடவுள்ள அகில இலங்கை தமிழரசுக் கட்சிஇ அதற்கான புதிய தலைவர் தெரிவுப் போட்டியால் பிளவுண்டு போய்விடுமோ என்ற அச்சம் அதன் உறுப்பினர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவர் மட்டத்திலும் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் ஓடித்திரிந்த ஓணானை இழுத்து வந்து மடியில் போட்டுவிட்டு கடிக்குது கடிக்குது என்றால்.....

அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்தவர்களால் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்ட அகில இலங்கை தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் பெடரல் கட்சி என்று அழைப்பர்) முதன்முதலாக ஒரு திருப்புமுனையில் இப்போது நிற்கிறது.

1949 டிசம்பர் 19ம் திகதி உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி இந்தாண்டு இறுதியில் அதன் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடவிருக்கும் வேளையில், அதன் தலைவர் தெரிவுக்கான போட்டி கட்சியின் எதிர்காலத்தை அகண்ட கேள்விக்குறியின் முன்னால் நிறுத்தியுள்ளது.

தமிழரசுக் கட்சிக்கென தனியான சில பாரம்பரியங்கள் உண்டு. கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒருபோதும் போட்டி இருந்ததில்லை. வடக்கு கிழக்கு என்ற பாகுபாடின்றி ஒருமனதாக தலைவர் தெரிவு இடம்பெறும். கட்சியின் வளர்ச்சிக்காகக் கொள்கைப் பிடிப்புடன் செயற்படுபவர்களே தலைவர்களாக தெரியப்பட்டு வந்துள்ளனர். இவ்விடயத்தில் பல விட்டுக்கொப்புகள் இடம்பெற்றுள்ளன. எந்த நெருக்கடி வேளையிலும் தலைவரின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்தக் காலம் போய்விட்டது என்பதை நிரூபிப்பது போன்று இன்று தலைமைப் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. வடக்கிலிருந்து சிவஞானம் சிறீதரனும், எம்.ஏ.சுமந்திரனும், கிழக்கிலிருந்து சீ.யோகேஸ்வரனும் அவர்களது ஆதரவாளர்களால் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சுமார் ஒரு தசாப்தமாக தலைமைப் பதவி தமிழரசின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா வசம் இருந்ததால் இம்முறை இப்பதவி கிழக்குக்கு கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியம் காட்டப்படவில்லை. இதற்கு வடக்கின் போட்டியாளர் இருவரில் ஒருவர்கூட இணக்கம் காட்டவில்லை. அதேசமயம் தலைமைப் பதவி போட்டியால் கட்சி பிளவுபடக்கூடாது என்று கருதிய யோகேஸ்வரன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து தமது ஆதரவை சிறீதரனுக்கு வழங்குவதாக பகிரங்கப்படுத்தினார்.

போட்டியாளர்களில் இருவர் ஒன்றாக இணைந்ததால், கட்சியின் ஒற்றுமையைக் கருதி சுமந்திரன் போட்டியிலிருந்து விலகி சிறீதரனை தலைவராக்க ஆதரவளிப்பாரென பலரும் எதிர்பார்த்தனர். இது நடைபெறாததால் போட்டியாளர்கள் மூவரும் ஒன்றாகக் கூடி முடிவெடுப்பரென சம்பந்தனின் கொழும்பு இருப்பிடத்தில் கடந்த பத்தாம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் பதினோராம் திகதி மூன்று போட்டியாளரும் தனிமையில் கூடினராயினும் இருபது நிமிடங்களில் கூட்டம் முடிவடைந்துவிட்டது.

சுழற்சி முறையில் முதல் இரண்டு வருடங்களை தமக்குத் தருமாறு சிறீதரன் நேரடியாக சுமந்திரனிடம் கேட்டாராயினும் அதனை அவர் அடியோடு மறுத்துவிட்டதால், இந்த மாதம் 21ம் திகதி தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

தலைவர் பதவியில் களமிறக்கப்பட்ட மூவரும் 2010ம் ஆண்டுத் தேர்தலிலேயே எம்.பிக்களானவர்கள். சிறீதரன் 2010, 2015, 2020 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். யோகேஸ்வரன் முதல் இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றாராயினும் 2020 தேர்தலில் வெற்றி பெறவில்லை. சுமந்திரன் சம்பந்தனால் கொழும்பிலிருந்து இறக்கப்பட்டு 2010ல் தேசியப் பட்டியல் ஊடாக நியமனம் ஆனவர். 2015 தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர் 2020 தேர்தலில் பெரும் சவாலை சந்தித்தவர்.

இறுதியில் சிறீதரனுடன் தோழமை கொண்டு அவரின் இரண்டாவது வாக்குகளை தமக்குப் பெற்று வெற்றி பெற்றாராயினும் 2015ம் ஆண்டுத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட ஐம்பது வீதத்துக்கும் குறைவானதையே பெற முடிந்தது. இத்தேர்தலில் சிறீதரனின் ஆதரவு கிடைத்திருக்காவிடில் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பார் என்பது கட்சியின் உள்வீட்டுக்காரர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் தெரியும்.

இத்தேர்தல் நடைபெற்றபோது சுமந்திரன் சிறீதரனுக்கு அளித்த வாக்குறுதி பரகசியமானது. கட்சியின் அடுத்த தலைவர் தெரிவின்போது தனது நன்றிக்கடனாக தமது ஆதரவை வழங்குவதாகக் கூறியதன் அடிப்படையிலேயே சிறீதரன் தலைமைப் போட்டியில் நம்பிக்கையோடு இறங்கினார். ஆனால் அந்த நன்றிக் கடனை செலுத்தத் தவறியது மட்டுமன்றி சிறீதரனுக்குப் போட்டியாக சுமந்திரன் களத்தில் இறங்கியது விருப்புக்குரியதாக அமையவில்லை.

தமிழரசுக் கட்சியின் தலைமைப் போட்டியை தமிழர் அரசியலுடன் மட்டும் இணைத்துப் பார்க்காது தெற்கின் அரசியல் போக்குடனும் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைத்து சிங்கள அரசியலை மேலெழுப்பும் முயற்சி இப்போது தீவிரமாக இடம்பெறுகிறது. இவ்விடயத்தில் இரண்டு நாடுகள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இவ்விடயத்தை தம் பொறுப்பில் எடுத்து லாவகமாக கையாண்டு வருகிறார்.

ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்பி வைத்த அறகலய போராட்டத்தில் ஜுலி சங்கின் வகிபாகம் எவ்வாறு இருந்தது என்பதை சர்வதேசமும் அறியும். விரைவில் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பிக்கு தெற்கில் ஆதரவு அதிகரித்து வருவதாக காணப்படும் சூழ்நிலையைபிட்டு அமெரிக்கா மகிழ்வடையவில்லை. இந்தப் பின்னணியில், ரணிலையும் சஜித்தையும் மீண்டும் ஒன்றாக இணைத்து இயங்க வைத்து ஜே.வி.பியை ஓரங்கட்ட வேண்டுமென்பதில் ஜுலி சங் தீவிரமாக செயற்பட்டு வருவதை பல ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

ரணிலும் சஜித்தும் ஓரணியில் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில் சஜித்தினூடாக முக்கிய அமைச்சர் பதவி ஒன்று தமக்கே என்ற நம்பிக்கையில் சுமந்திரன் இருப்பதாக கொழும்பின் உயர்மட்டங்களில் கூறப்பட்டு வருகிறது. சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக கதிர்காமர் இருந்தது போன்று, சஜித் பங்கேற்கும் ரணில் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி தமக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையில் சுமந்திரன் இயங்குகிறார். இந்த அமைச்சைப் பெற வேண்டுமென்றால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை தமக்குரியாதாக்கும் முனைப்பில் அவர் வெறி கொண்டவராக காணப்படுகிறார்.

2010ல் சுமந்திரனை கொழும்பிலிருநது இறக்கியபோதே தமிழரசின் எதிர்காலம் பற்றி அதன் உள்வட்டத்தில் அரசல்புரசலாக பல விடயங்கள் பேசப்பட்டன. தமிழரசுக் கட்சிக்குள் சட்டத்துறையும் ஆங்கிலப் புலமையும் உள்ளவர்கள் குறைவாக இருப்பதால் கட்சியின் தலைமையை குறிவைத்தே இவர் உள்நுழைவதாகக் கூறப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனின் அனுசரணை இவருக்கு இருந்ததால் குறுகிய காலத்தில் கட்சியினதும் கூட்டமைப்பினதும் முடிவுகளை தீர்மானிப்பவராகவும் இவர் தம்மைத் தாமே உயர்த்திக் கொண்டார்.

கட்சியின் தலைமைப் பதவிக்கு சட்டமும் ஆங்கிலமும் அவசியமானவை என்று சொல்ல முடியாது என்பதற்கு உதாரணமாக 1970-1977 காலத்தை எடுத்துக் கூறலாம். 1970 தேர்தலில் ஜி.ஜி.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், வி.நவரத்தினம் போன்ற அதிசிறந்த சட்டவாளர்கள் வெற்றி பெறவில்லை. அவ்வேளை தமிழரசுக் கட்சியின் குழுத்தலைவராக உடுவில் எம்.பியான வி.தர்மலிங்கம் (சித்தார்த்தனின் தந்தை) இயங்கினார். இவர் ஒரு சட்டவாளர் அல்ல. மிகுந்த ஆங்கிலப் புலமையாளரும் அல்ல. ஆனால், அவ்வேளை நாடாளுமன்றத்தின் சகல விவாதங்களையும் எதிர்க்கட்சித் தரப்பில் தொடக்கி வைத்து இவர் ஆற்றிய உரைகள் நாடாளுமன்றத்தில் பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. தமிழர் தரப்புக்கு சகல வழிகளிலும் சிறந்த தலைவராகவே இவர் கணிக்கப்பட்டார். இதனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் சட்டமும் ஆங்கில அறிவும் உள்ளவர்களே கட்சியை வழிநடத்தவும்இ தலைமை தாங்கவும் கட்டாயமில்லை என்பதற்காக.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ''புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்'' என்ற அமைப்பு கடந்த ஓரிரு நாட்களாக ஆங்கிலத்திலும் தமிழிலும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுமந்திரன் பற்றி இதில் தெரிவிக்கப்பட்டுள்ள சில வரிகள் இன்றைய காலத்தில் அவதானிப்புக்குரியவை. அவைகளை இங்கு பார்க்கலாம்:

சுமந்திரன் ஒரு கொழும்புத் தமிழர் என்பதையும் அவருக்கு சிங்கள சம்பந்திகள் இருப்பது என்பதையும் புறக்கணிக்க முடியாது. அவரது அரசியல் நிகழ்ச்சி நிரல் விக்னேஸ்வரனைப் போலவே அரை சிங்கள சந்ததியினரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகிறது.

சுமந்திரனின் சூழ்ச்சிப் போக்குகள் மற்றும் அவரது அறிக்கைகள் வெவ்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் திறன் குறித்து கவலைகள் உள்ளன. இது தமிழ் மக்கள் மீதான அவரது நேர்மை குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது.

சுமந்திரனின் தலைமைத்துவப் பண்புகளின் குறைபாடு தெளிவாகத் தெரிகிறது. அவர் ஒரு உண்மையான தலைவரை விட சிங்களவர்களுக்கு மிகவும் பொருத்தமான பண்புகளைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அவரது கவனம் முதன்மையாக சிங்கள சமூகத்தின் நலன்களைச் சுட்டியே உள்ளது.

கூட்டிக் கழித்துப் பார்க்கப்போனால் புலம்பெயர் தமிழரின் செய்திகள் சுமந்திரன் பற்றி அறிந்தவைகளை நேரடியாக சுட்டுகின்றது. தமிழரசுக் கட்சி அதன் எழுபத்தைந்தாவது வயதில் கட்சியையும் அதன் கொள்கைகளையும் கைவிட்டுக் கதிரைக்காக அலையும் திரிகரணசுத்தி அற்றவர்களின் கைகளில் சென்றுவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் இருப்பதை இந்த அறிக்கை ஊடாக பார்க்க முடிகிறது. தலைமைத் தேர்தல் முடிவு ஏதோ ஒருவகையில் தமிழரசுக் கட்சியைப் பிளந்துவிடக் கூடுமென்றே அக்கறையுள்ள பலரும் அஞ்சுகின்றனர். கொழும்பில் ஓடித்திரிந்த ஓணானை இழுத்து வந்து மடியில் போட்டுவிட்டு கடிக்குது கடிக்குது என்றால்.....

ad

ad