புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2024

19 வயதின் கீழ் ஆஸி. அணியை 7 ஓட்டங்களால் 19 வயதின் கீழ் இலங்கை அணி வெற்றிகொண்டது

www.pungudutivuswiss.com

(நெவில் அன்தனி)

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை தொடரின் ஆரம்பப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 7 ஓட்டங்களால் வரவேற்பு நாடான இலங்கை வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை யுவதிகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் 117 ஓட்டங்கள் என்பது சிறந்த ஒரு மொத்த எண்ணிக்கையாகும்.

தெவ்மி விஜேரத்னவும் சஞ்சனா காவிந்தியும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தெவ்மி விஜேரத்ன 15 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் நுழைந்த நெத்மி பூர்ணா 2 ஓட்டங்களை மட்டும் பெற்றபோதிலும் 2ஆவது விக்கெட்டில் சஞ்சனாவுடன் 20 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சஞ்சனா 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து ஜோடி சேர்ந்த அணித் தலைவி மானுதி நாணயக்காரவும் ரஷ்மி நேத்ராஞ்சலியும் 4ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது இலங்கை அணியில் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

ரஷ்மி நேத்ராஞ்சலை 14 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து மானுதி நாணயக்கார 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

ரஷ்மிக்கா செவ்வந்தியுடன் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சுமுது நிசன்சலா 28 ஓட்டங்களைப் பகிர்ந்து 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ரஷ்மிக்கா செவ்வந்தி 12 ஓட்டங்களுடனும் ஹிருனி ஹன்சிகா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஹாஸ்ரட் கில் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் எலினோ லரோசா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

118 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஐனஸ் மெக்கியொன் (1), கேட் பெல்லே (2), ஹாஸ்ரத் கில் (8), அமி ஸ்மித் (10) ஆகிய நால்வரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலிய யுவதிகள் அணி 8ஆவது ஓவரில் 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனால், எலினோ லரோசாவும் அணித் தலைவி லூசி ஹெமில்டனும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை நல்ல நிலையில் இட்டனர்.

லூசி ஹெமில்டன் 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (88 - 5 விக்.)

அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி 22 பந்துகளில் மேலும் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆனால்,  தெவ்மி விஜேரத்ன அடுத்த 4 பந்துகளில் 3 ஓட்டங்களையும் 18ஆவது ஓவரில் ஹிருணி ஹன்சிகா 7 ஓட்டங்களையும் 19ஆவது ஓவரில் ரஷ்மிக்கா செவ்வந்தி 5 ஓட்டங்களையும் கடைசி ஓவரில் தெவ்மி விஜேரத்ன 7 ஓட்டங்களையும் கொடுத்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

எலினோ லரோசா 44 ஓட்டங்களுடனும் க்றிஸ் லயன்ஸ் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் தெவ்மி விஜேரத்ன 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் மற்றைய அணியான இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் நடைபெறவுள்ள போட்டியில் அவுஸ்திரேலியா எதிர்த்தாடும்.

ad

ad