புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2024

சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைந்த காலம் முதலே பிரச்சினைகள் முளைவிடத் தொடங்கின.

www.pungudutivuswiss.com
-------------------------------------------------------------
-எஸ்.ஆர்.ரமணன்)
-------------------------
தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டமானது கடந்த 70 வருடங்களுக்குமேல் இடம்பெற்று வரும் நிலையில் அதில் பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்கள் வெற்றிபெறமுடியாது போனதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சுமார் 30 வருடங்களில் அப் போராட்டமானது பல நயவஞ்சகர்களின் - நாடுகளின் துணையுடன் மௌனிக்கப்பட்டது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் போராட்ட களத்தில் வலுவாகக் காணப்பட்டபோது தமிழ் மக்களின் சார்பில் அரசியல் ரீதியான ஒரு வகிபாகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர்களினால் அப்போது காணப்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளையும் ஓர் அணியில் இணைத்து (ஈ.பி.டி.பி தவிர்ந்த) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்திலும் பின்னல் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பின்னர் காணப்பட்ட கருத்துவேறுபாடுகள் மற்றும் சுயநலம் - தலைமைத்துவப் போட்டி – நயவஞ்சக நோக்கம் போன்றவற்றினால் பலர் வௌ;வேறு காரணங்களை குறிப்பிட்டு வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்தனர். கடிவாளம் இல்லாத குதிரையாக திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரன் அவர்கள் சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் இணைக்கப்பட்டார். இவர் தொடர்பாகவும் இவரின் தீர்மானங்கள் தொடர்பாகவும் தற்போது கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் அதிகளவு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் ஒவ்வொன்றின் போதும் அவரினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் அவரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் சிறந்த கருத்து எவருக்கும் காணப்படவில்லை என்பது உண்மையே.
ஆரம்ப காலங்களில் சுமந்திரனின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்திற்கு தேவையானதாகவும் அவரின் பங்களிப்பு முக்கியமானதாக காணப்பட்ட போதிலும் காலம் கடந்து செல்லச் செல்ல அவரின் சுயரூபம் வெளிவர ஆரம்பித்தது. ஆரம்பம் முதல் கட்சியின் தலைமைத்துவத்தின் மீது கண்வைத்து வந்த அவர் தன்;னிச்சையாக சில முடிவுகளை எடுத்த போதிலும் தலைவர் சம்பந்தன் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளாமை இருந்ததன் விளைவாக காலப் போக்கல் அவர் ஒரு நிழல் தலைவர் போன்று செயற்பட்டு வந்தார். இது தொடர்பில் அப்போது பலர் முறைப்பாடுகளைச் செய்த போதிலும் கட்சியில் காணப்பட்ட செல்வாக்கும் தலைவரின் பக்கச்சார்பும், அரசியல் சட்டப் புலமையும் அவரின் மீதான விமர்சனங்களை கவனத்தில் கொள்ளாது விடக் காரணமாகியது. எனினும் சம்பந்தன் அவர்களின் இறப்பிற்குப் பின்னர் இவரின் முழு சுயரூபம் தெரியவந்ததாக ஆதரவாளர்கள் குறைப்பட்டுக் கொண்டனர்.
இதேவேளை, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இவரின் சுத்துமாத்துக்கள் பரவலாக பேசப்பட்ட போதிலும் அப்போது முழுமையான புரிதல் இன்மையால் யாரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. கடந்த பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி வெற்றிபெற்றதாகவும் சுமந்திரம் தோல்வி அடைந்தாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் பின்னர் சுமந்திரனும், தர்மலிங்கம் சித்தாத்தனும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கதை உலாவியது எனினும் பின்னர் இதில் பல மாற்றங்கள் - கள்ள வேலைகள் செய்யப்பட்டதாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைந்து காலம் முதல் சிறு சிறு பிரச்சினைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது காலப்போக்கில் இவ்வாறு கூட்டமைப்பினைச் சின்னாபின்னமாக்கி குறுகிய அரசியல் கட்சி ஒன்று என்று கூடக் கூடமுடியாத அளவிற்கு அதனைக் கொண்டுவந்து விட்டுள்ளதாகவும் இது கழுதை தேய்ந்து கட்டெறுப்பாகிய கதையானது உள்ளது எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதுவரை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா வயது மூப்பின் காரணமாக கட்சித் தலைமைத்துவத்தை பிறிதொருவரிடம் ஒப்படைக்க முடிவெடுத்து தலைமைத்துவ பதவியில் ஸ்ரீதரன் அவர்களை அமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டபோது, தலைமைத்துவத்திற்கு தனது ஆட்களை வைத்து தனது பெயரைக் குறிப்பிடுமாறு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் தலைமைத்துவத்திற்கு போட்டி ஏற்பட்டது. இதன்போது வாக்களிப்பின் மூலம் தலைவர் ஒருவரை தெரிவு செய்வது என்ற முடிவு எட்டப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் தனக்கு தெரிந்த – தனக்குச் சார்பானவர்களை கொண்டு தனக்கான வாக்குவங்கியை அதிகரித்துக் கொள்ள முடிவு செய்தார். எனினும் இவரின் சுயரூபத்தினைத் தெரிந்து கொண்ட கட்சி உறுப்பினர்களும், புலர்பெயர் தேசத்தில் உள்ள ஆதரவாளர்களின் புரிதலின் காரணமாக கட்சிக்குள் ஸ்ரீதரன் அவர்களுக்கு ஆதரவு அதிகமானதன் காரணமாக வாக்களிப்பின் மூலம் ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதனைப் பொறுக்கான சுமந்திரன் தனது ஆட்களைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் வழக்குத் தாக்கல் செய்து கட்சியின் தலைமைத்துவப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு இடைக்கால தடையுத்தரவும் பெற்றுக்கொண்டார்.
இவ் வெற்றியின் மூலம் தனது ஆட்டத்தினை மேலும் அதிகரித்துக் கொண்ட அவர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட அரியநேந்திரன் அவர்களை ஆதரிக்கவேண்டும் வடக்கு கிழக்கில் உள்ள அனைவரும் முன்வரவேண்டும் என சமூக அமைப்புக்கள் - மதத்தலைவர்கள் - கல்விசார் சமுகங்கள் - ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டமைப்பில் உள்ள பெரும்பாண்மையானவர்கள் முடிவெடுத்த போதிலும் அதனைக் கருத்தில் கொள்ளாது தனது எண்ணத்தை நிறைவேற்றும் நோக்குடன் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு கூட உரியமுறையில் அறிவிக்காது தனது சகாக்களின் உதவியுடன் கூட்டத்தினை கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஊடகங்களின் முன்பாக பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தில் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாஸாவினை ஆதரிக்க ஏகமனதாக முடிவெடுத்தாக அறிவித்தார்.
எனினும் அத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போது கொழும்பு கிளையின் தலைவராக இருந்த சட்டத்தரணி தவராசா அவர்கள் வெளிநடப்புச் செய்ததுடன் வெளிநாடு சென்றிருந்த ஸ்ரீதரன் அவர்கள் இத் தீர்மானம் தொடர்பில் தனக்கு உடன்பாடு காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். பின்னர் இறுதியாக கூட்டத்தில் கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்றும் தமது விரிசலை குறைப்பதற்கு என்றும் கடந்தமுறை எடுக்கப்பட்ட கூட்டத்தின் முடிவினை ஆதரிப்பது என்ற முடிவுக்கு விருப்பமின்றி அனைவரும் ஒப்புக் கொண்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தினைக் கலைத்து பாராளுடன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து 11.10.2024 நண்பகல் 12 மணிவரை வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியும் என்ற அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுச் சின்னத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்டது.
தென்னிலங்கையில் மக்கள் மாற்றத்திற்காக புதிய தலைமைத்துவத்திற்கு வாக்களித்தனர். இதேபோன்று தமிழ் மக்கள் மத்தியிலும் புதிய மாற்றம் ஒன்று தேவை என்பதன் காரணமாக அனைவரும் ஒன்றிணைந்து இளம் வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தினை உருவாக்கலம் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டதன் காரணமாக சிலர் தாம் அரசியலில்ருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும் இளைஞர்களுக்கு வழி விடுவதாகவும் அறிவித்த போதிலும் மூத்த பெரும் பல அரசியல் வாதிகள் இன்னமும் கதிரையை கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி பெண்களுக்கு இடம்கொடுக்கவேண்டும் என்ற கருத்து அதிகம் முன்வைக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெண்கள் எவரும் முன்வரவில்லை என்றும் தான் காடு, மேடு, பள்ளம் எங்கும் தேடியும் எவரும் கிடைக்கவும் இல்லை யாரும் விண்ணப்பிக்கவும் இல்லை என்று ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி கருத்துத் தெரிவித்தார். அத்துடன் வேட்புமனுவில் தனக்குத் தெரிந்த – நெருக்கமான – தனது முக்கியத்துவமான சிலரின் பெயரை தன்னிச்சையாக அதில் இணைத்துக் கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கட்சியில் பெண் ஆளுமைகள் பலர் இருக்கின்ற போது கட்சிக்கு யார் என்று தெரியாத பெண்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்கியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தீவக தொகுதி தலைவர் மாணிக்கவாசகர் இளம்பிறையனும் தெரிவித்திருந்தார்.
அதேபோல், தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு பல பெண்கள் விண்ணப்பித்ததாகவும் குறிப்பாக கடந்தமுறை சுமந்திரனுக்கு சவாலாக அமைந்த ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா விண்ணப்பித்தபோதும் இவர்களின் விண்ணப்பங்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை. இதனால் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா மாற்றுக் கூட்டமைப்பில் போட்டியிடுவதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் தான் முன்னரே போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை தான் சமர்ப்பித்த போதிலும் தமிழரசுக் கட்சியின் தேர்வாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாமையினால் தான் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியில் காணப்படும் முரண்களையும் பக்கசார்பான செயற்பாடுகளையும் ஆதங்கங்களாக வெளிப்படுத்தியுள்ளார். இதில் குறிப்பாக, 2020 ஆண்டு இடமாற்ற நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பெண் பிரதிநிதியான சசிகலா ரவிராஜ் 24000 வாக்குகளை தமிழரசுக்கட்சியின் சார்பில் பெற்றிருந்த போதும் அவருக்கான இடம் கட்சியில் ஒதுக்கப்படாமை பின்னடைவான போக்கை எடுத்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கான முகவர்களை வைத்து அரசியலை நகர்த்த நினைக்கும் எம்.ஏ.சுமந்திரன் ஒதுக்கப்படவேண்டியவர்களை ஒதுக்கி சசிக்கலா போன்றோரை வெளியேற்றியமை அவரின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
எனவே, இம்முறைத் தேர்தலில் மக்கள் சிறந்தமுறையில் சிந்தித்து சரியான தீர்மானத்தினை மேற்கொண்டு தேசிய உணர்வும், நேர்மையும், சிறந்த கல்விப் பின்புலமும் உடைய இளம் தலைமுறையினை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது சாலச் சிறந்தது.

ad

ad