
கொழும்பு – நுகேகொட, பாகொடை வீதியில் உள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு
துளைக்காத (Bulletproof) பென்ஸ் ரக சிற்றூந்து ஒன்றை மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் மீட்டனர்.சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் குறித்த பழுதுபார்க்கும் நிலையத்தில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட, இலக்கத்தகடுகள் இல்லாத இந்தச் சிற்றூந்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குண்டு துளைக்காத வகையைச் சேர்ந்த வாகனம் என உறுதிசெய்யப்பட்டது.
இந்த பென்ஸ் ரக சிற்றூந்து 2008 ஆம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேவைக்காக, குறித்த வாகனத்தை இறக்குமதி செய்த டிமோ நிறுவனத்துக்கு மீண்டும் கொண்டு வரப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுங்கம் மற்றும் டிமோ நிறுவனத்திடம் அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், இந்த வாகனம் 2008 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் (இந்தியத் தூதரகம்) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை வாகனம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாகனம் ஒரு முக்கிய நபருக்காகப் பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறியும் நோக்கில் பல கோணங்களில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்கிசையில் வசிக்கும் (43) வயதுடைய குறித்த வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்தின் உரிமையாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.