டெல்லி செங்கோட்டை லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே இருந்த சிக்னலில், இன்று இரவு 6.52 மணிக்கு கார் ஒன்று மெதுவாய் ஊர்ந்து சென்றபோது வெடித்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தால் அருகிலிருந்து 6 கார்களும் 2 இ-ரிக்ஷாக்களும் 1 ஆட்டோ ரிக்ஷாவும் எரிந்து நாசமாயின. இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்றும் ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில், வெடித்த கார் ஹரியானா மாநில நம்பர் பலகையைக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஹரியானா எண் தகடு கொண்ட அந்த கார் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்தது எனவும், அந்த காரின் அசல் உரிமையாளர் முகமது சல்மான் என்றும், பின்னர் அவர், அதை நதீம் என்பவருக்கு விற்றதாகவும் என்.டி.டி.வி. ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹரியானாவின் குருகிராமில் வசித்து வரும் சல்மான் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டில், 2,900 கிலோ கிராம் அளவிலான வெடிபொருட்கள் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மருத்துவர், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் ஜம்மு -காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவரின் கைது சம்பவத்திற்கும் கார் வெடிப்பு சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

