-

26 நவ., 2025

செங்கோட்டையன் விஜயின் நீலாங்கரை வீட்டில்: விஜய்யுடன் நேரடியாக பேச்சுவார்த்தை

www.pungudutivuswiss.com

சென்னை:

சற்று முன்னர் செங்கோட்டையன் விஜய் அவர்களின் நீலாங்கரை வீட்டில் இருப்பதாகவும், அங்கே விஜயுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதிமுக-வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை இன்று ராஜினாமா செய்துள்ள நிலையில், நாளை அவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அதிமுகவில் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த செங்கோட்டையன் திடீரென தவெக-வில் இணைவது, கொங்கு மண்டல அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

தி.மு.க.வின் புதிய இணைப்பு: எப்படி சாத்தியமானது?
முன்னர் எடப்பாடி பழனிசாமியின் அதிருப்தியாளர்களாக இருந்த பலர், அண்மையில் தவெக-வில் இணைய முயற்சித்தபோது, விஜய்யைச் சுற்றியிருந்த புஸ்ஸி ஆனந்த்சி.டி.ஆர். நிர்மல் குமார் போன்றோர் அடங்கிய குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், மருது அழகுராஜ் போன்ற பல நிர்வாகிகள் விஜய்யைச் சந்திக்க முடியாமல் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்தச் சூழலில், நீண்டகாலமாக டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வந்த செங்கோட்டையன் மட்டும் எப்படி விஜய்யை நேரடியாகச் சந்திக்க முடிந்தது என்ற கேள்வி தவெக நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.

ரகசியச் சந்திப்பின் இணைப்புப் பாலம்
கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்திற்குப் பிறகு, விஜய்க்கு தனது உடனடி சகாக்கள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் கட்சியின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒருங்கிணைப்புக் குழு மற்றும் வழிகாட்டுதல் குழு ஆகியவற்றை அமைத்தார்.

இந்த வழிகாட்டுதல் குழுவில் இருந்த சில முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மூலமாகச் செங்கோட்டையனுக்குத் தகவல் பரிமாற்றப்பட்டுள்ளது. அதன் பின்னரே, வழிகாட்டுதல் குழுவில் உள்ள முக்கிய உறுப்பினரான ஜான் ஆரோக்கியசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்தச் சந்திப்பின் மூலம், செங்கோட்டையன் நேரடியாக விஜய்யைச் சந்தித்துப் பேசி, தவெக-வில் இணையும் முடிவுக்கு வந்துள்ளார்.

கொங்கு மண்டலத்தை நோக்கிய விஜய் வியூகம்
செங்கோட்டையனின் வருகையை விஜய் ஒரு முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கிறார். ஏற்கனவே கோவைப் பகுதியில் தவெக-வுக்கு கணிசமான ஆதரவு இருப்பதாகக் கருதப்படும் நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய அதிமுக அடையாளமாக உள்ள செங்கோட்டையன் இணைவது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூடுதல் பலமாக அமையும் என்று விஜய் கணக்கு போட்டுள்ளார்.

செங்கோட்டையனுக்குத் தகுந்த மரியாதையும், முக்கியப் பதவியும் அளிக்கப்படும் என்று விஜய் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளையே செய்திகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது

ad

ad