-

4 நவ., 2025

சட்டரீதியான உரிமை மறுக்கப்பட்டது! [Tuesday 2025-11-04 06:00]

www.pungudutivuswiss.com

மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவற்றுக்கு பதில் கிடைக்கவில்லை. உரிமைக்கான தனது கோரிக்கை மறுக்கப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவற்றுக்கு பதில் கிடைக்கவில்லை. உரிமைக்கான தனது கோரிக்கை மறுக்கப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற அவருக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, மிகவும் உருக்கத்துடன் அவர் இதனைத் தெரிவித்திருந்தார். குறித்த நிகழ்வில் இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 50 ஆண்டு கால வரலாற்றில் ஒரேயொரு தமிழனாக ஏகமனதாக அதன் தலைவராக நியமிக்கப்பட்டேன். 2024ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா என் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக எனது நிறைவேற்றுக்குழு அவரை சந்திக்க விரும்புவதாக அவருக்கு கடிதம் எழுதினேன்.

கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனது தலைமையில் 10 நீதிபதிகள் அந்த சந்திப்பில் பங்கேற்றோம். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அந்த சந்திப்பில் ஒரேயொரு தமிழராக நான் பங்கேற்றிருந்தேன். என்னுடன் குறித்த சந்திப்பில் பங்கேற்ற சிங்கள சகோதரர்கள், உன்னுடைய ஓய்வு தொடர்பில் நாம் பேசுகின்றோம் எனக் கூறினர். 2025 ஜனவரி 20ஆம் திகதியுடன் 60 வயதாகிறது.

ஒட்டுமொத்தமாகவுள்ள 90 நீதிபதிகளில் முதலாவதாக நீதிபதி இளஞ்செழியன் காணப்படுகிறார் எனக் கூறி, வருட இறுதி விடுமுறை என்பதால் எனது நியமனத்தை நினைவுபடுத்துவதாக ஜனாதிபதியிடம் கூறினார்கள். அன்று ஜனாதிபதி என்னுடன் நின்றி புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டார். இன்றும் அந்த புகைப்படம் என்வசம் இருக்கிறது. மகிழ்ச்சியோடு அன்று எம்முடன் உரையாடினார்.

2025 ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து 4 நீதிபதிகள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றனர். மேல் நீதிமன்றங்களில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். 61 வயது பூர்த்தியாவதற்கு 8 நாட்களே காணப்பட்டது. 61 வயது நிறைவடைவதற்குள் பதவியுயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே சட்டமாகும். ஜனவரி 13ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனா சென்று, 18ஆம் திகதி சனிக்கிழமை நாடு திரும்பினார்.

19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. 20ஆம் திகதி நான் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினேன். எனக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால், இன்னும் 4 ஆண்டுகள் சேவையில் நீடித்திருப்பேன். இரண்டு ஆண்டுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இரண்டு ஆண்டுகள் உயர் நீதிமன்றத்திலும் சேவையாற்றியிருப்பேன். நான் விரும்பி ஓய்வு பெறவில்லை. கட்டாயப்படுத்தி ஓய்வில் அனுப்பப்பட்டேன் என்பதை தெரிவித்து நான்கு கடிதங்கள் அனுப்பியிருக்கின்றேன்.

ஆனால் எந்தவொரு கடிதத்துக்கும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. ஒரு நீதிபதியாக என்னால் யாரையும் குறைகூற முடியாது. எனது விடயத்தில் எங்கு தவறு இடம்பெற்றது? அந்த தவறு ஏன் நிவர்த்தி செய்யப்படவில்லை? இன்று கூட அந்த தவறு நிவர்த்தி செய்யப்படலாம். ஆனால் அந்த சிந்தனை யாருக்கும் இல்லை. ஆனால் நான் அதன் பின்னால் செல்லவில்லை. நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய 4 விடயங்களுக்கு மாத்திரமே நான் தலை குனிந்தேன். வேறு எதற்கும் நான் தலைகுனியவில்லை.

வேறு எதற்காகவும் தலைகுனிந்ததாக எனது வரலாற்றில் இல்லை. அவ்வாறானதொரு வரலாறு எழுதப்படவும் கூடாது. சட்ட ரீதியாக எனக்கு கிடைக்க வேண்டிய உரிமையைக் கோரினேன். அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதற்காக யார் மீதும் குறைகூற நான் விரும்பவில்லை. எனது நீதித்துறை புனிதமானது என்றார்.

ad

ad