-

14 ஜன., 2026

"திருமண ஆசையில் விபரீதம்: யாழ். நகைக்கடையில் 10 கோடி தங்கம் அபேஸ்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக அதே கடையின் முன்னாள் ஊழியரான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஊழியராக இருந்துகொண்டே இவ்வளவு பெரிய தொகையிலான நகைகளைத் திருடியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் அந்த நகைக்கடையில் ஒன்றரை வருடங்களாகப் பணியாற்றி வந்துள்ளார். ஜனவரி 21 ஆம் திகதி தனக்குத் திருமணம் என்று கூறி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே அவர் பணியிலிருந்து விலகியுள்ளார். அவர் பணியை விட்டுச் சென்ற பின்னர் கடையில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த கணக்கெடுப்பின் போதே, பெருமளவிலான தங்க நகைகள் காணாமல் போயிருப்பது நிர்வாகத்தினரால் கண்டறியப்பட்டது.

இது குறித்து யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர் தான் பணியாற்றிய காலத்தில் சிறுகச் சிறுக இந்த நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். திருடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை அடகு வைத்ததுடன், சிலவற்றை விற்பனை செய்துள்ளதாகவும், மீதி நகைகளை நிலத்தினடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது அந்தப் பெண் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதைக்கப்பட்ட நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன், இந்தச் சம்பவத்தில் அவருக்கு வேறு எவராவது உடந்தையாக இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ad

ad