ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் (Kola Peninsula) நிலைநிறுத்தப்பட்டுள்ள அதிநவீன அணு ஆயுத ஏவுகணைகள், ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் கிரீன்லாந்து வான்பரப்பு வழியாகப் பயணித்து வெறும் 18 முதல் 20 நிமிடங்களுக்குள் அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் டி.சி. மற்றும் சிகாகோ போன்ற முக்கிய நகரங்களைச் சென்றடையக்கூடும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஒருவேளை 800 கிலோடன் எடையுள்ள அணுக்கரு ஏவுகணை மன்ஹாட்டன் பகுதியில் வெடித்தால், சூரியனின் மையப்பகுதியை விட 5 மடங்கு அதிகமான வெப்பம் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) உருவாகி, ஒரு நொடிக்குள் ஒட்டுமொத்தப் பகுதியையும் ஆவியாக்கிவிடும். இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் 'நியூக்ளியர் ஃபுட்பால்' (Nuclear Football) எனப்படும் கருப்புப் பெட்டி மற்றும் அணு ஆயுதக் குறியீடுகள் கொண்ட 'பிஸ்கட்' கார்டு ஆகியவை மட்டுமே உலக அழிவைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.

இந்த அபாயகரமான புவிசார் அரசியல் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து (Greenland) தீவை வாங்குவதற்கு அல்லது தன்வசப்படுத்துவதற்குப் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். "தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம்" என்று கூறும் டிரம்ப், டென்மார்க் நாட்டிற்கு இது தொடர்பாக கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார். ரஷ்யா மற்றும் சீனாவின் ஆர்க்டிக் ஆதிக்கத்தைத் தடுக்க கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டை அதிகரிப்பதே டிரம்பின் முக்கிய நோக்கமாகும். இதற்காக அவர் டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பு (Tariffs) உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளையும் எச்சரிக்கையாக விடுத்துள்ளார். கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அமெரிக்காவின் பாதுகாப்பு அரணாக அமையும் என்று டிரம்ப் தரப்பு வாதிடுகிறது.

ரஷ்யாவின் அணு ஆயுத ஏவுகணைகள் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை என்பதால், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பதிலடி கொடுக்க மிகக் குறைந்த நேரமே கிடைக்கும். ஒருமுறை ஏவுகணை ஏவப்பட்டால், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகை, வாஷிங்டன் நினைவுச்சின்னம் போன்றவை சில நொடிகளில் தரைமட்டமாகும் என்றும், சுமார் 13 லட்சம் மக்கள் உடனடியாக உயிரிழக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ரஷ்யாவுடனான 'புதிய ஸ்டார்ட்' (New START) அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவது, உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் மற்றும் புடின் இடையிலான இந்த 'ஆர்க்டிக் ஆடுபுலி ஆட்டம்' மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.