-

30 ஜன., 2026

கடலூரில் அதிமுக நிர்வாகிகள் மோதல்: துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த ஐடி விங் செயலாளர் கைது!

www.pungudutivuswiss.com
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு இடையே செம்மண் குவாரி தொடர்பாக நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

கடலூர் மேற்கு அதிமுக ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளரான கிருஷ்ணமூர்த்தி, தனது குவாரிக்கு அருகே உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் வினோத்திற்குச் சொந்தமான நிலத்திலும் செம்மண் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மதியம் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் மகனும், கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) இணைச் செயலாளருமான கோபால் (36), தான் வைத்திருந்த உரிமம் பெற்ற பிஸ்டல் துப்பாக்கியை எடுத்து வினோத்தை நோக்கி நீட்டி, கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

சக கட்சி நிர்வாகி என்றும் பாராமல், பொது இடத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன் வினோத்தைத் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

பாதிக்கப்பட்ட வினோத் அளித்த புகாரின் பேரில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி, நடுவீரப்பட்டு போலீசார் கோபால் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

தலைமறைவாக முயன்ற கோபாலை உடனடியாகக் கைது செய்த போலீசார், மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். ஒரே கட்சியைச் சேர்ந்த இரு நிர்வாகிகள் நிலப் பிரச்சனையில் துப்பாக்கி முனையில் மோதிக்கொண்ட சம்பவம் கடலூர் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad