-

21 ஜன., 2026

தமிழக சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர்:

www.pungudutivuswiss.com
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல்
கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமலேயே வெளியேறினார். ஆளுநரின் இந்த செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் முயற்சி எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது. அதன்படி இந்தாண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக எம்எல்ஏக்கள் காலை 9 மணியில் இருந்து சட்டப்பேரவைக்கு வர தொடங்கினர். காலை 9.22 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவைக்கு வந்தார். அவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து இருக்கையில் அமர்ந்தார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காலை 9.27 மணிக்கு பேரவைக்கு வந்தார். இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் நடைபெறுவது மரபு. அதன்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வளாகத்திற்கு வந்தடைந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு மலர்க்கொத்து கொடுத்தும், கலைஞர் வரலாறு புத்தகத்தை கொடுத்து வரவேற்று சட்டப்பேரவை வளாகத்திற்கு அழைத்து வந்தார். சரியாக 9.30 மணி தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சரியாக காலை 9.31 மணி ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் உரையை படிக்க எழுந்தார்.Rail Freight
அவர் பேசிய போது, சபாநாயகர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று கூறினார். இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் உரையை படிக்காமல் சொந்தமாக சில கருத்துகளை பதிவு செய்தார். அப்போது, சட்டப்பேரவையில் தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்ற கருத்தை பதிவு செய்தார். ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்து பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் முதலில் தமிழ் தாய் வாழ்த்தும், கூட்டம் முடியும் போது தேசிய கீதம் பாடப்படுவதும் தான் கடைபிடிக்கப்படும் மரபு. தயவு செய்து இந்த மரபை மாற்ற வேண்டாம். எனது அன்பான வேண்டுகோள் நீங்கள் ஆளுநர் உரையை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும், சபாநாயகர் அப்பாவும் தங்கள் விளக்கங்களை மாறி, மாறி பகிர்ந்து கொண்டனர். ஆனாலும், ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்து சரியாக 9.36 மணிக்கு பேரவையில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் அவர், 4வது ஆண்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அதிமுகவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் வெளியேறினர். இதே காரணத்தை தெரிவித்து பாஜவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது

ad

ad