Beiträதி.மு.க., ஓட்டுகளை த.வெ.க., பிரிக்கும்; கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சென்னை: 'தி.மு.க.,வின் ஓட்டுகளை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிக அளவில் பிரிக்கும்' என, லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய, 'இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்' என்ற அமைப்பு சார்பாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதன் முடிவுகளை வெளியிட்டு, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நேற்று அளித்த பேட்டி:
கடந்த ஆண்டு அக்., 3 முதல் கடந்த 2ம் தேதி வரை, 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு, நிறைவேற்றவில்லை என 47 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் செயல்பாடு நன்றாக இருப்பதாக 37 சதவீதம் பேரும்; சரியில்லை என 54 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை மாற்றியது, அக்கட்சி தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக 54 சதவீதம் பேர் கூறினர்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம், எந்தக் கட்சியின் ஓட்டுகளை அதிகம் பிரிக்கும்' என்ற கேள்விக்கு, 'தி.மு.க.,வின் ஓட்டுகளை பிரிக்கும்' என்று அதிகம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, வி.சி., - -அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - நா.த.க., ஆகியவற்றின் ஓட்டுகளை பிரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல் நிலைப்பாடு மோசம் என 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவோர் பட்டியலில், அண்ணாமலை முதலிடத்தை பிடித்துள்ளார். அதற்கு அடுத்த இடங்களை, முறையே சீமான், விஜய், பழனிசாமி, அன்புமணி பெற்றுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதியின் செயல்பாடு மோசம் என, 39 சதவீதம் பேரும்; நன்று என 20 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், வரும் 2026ல் மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக 55 சதவீதம் பேரும்; வாய்ப்பு இல்லை என 29 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.
முதல்வருக்கான தேர்வில், ஸ்டாலினை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் விஜய், மூன்றாம் இடத்தில் பழனிசாமி, நான்காம் இடத்தில் அண்ணாமலை மற்றும் கனிமொழி, ஐந்தாம் இடத்தில் சீமான், உதயநிதி உள்ளனர்.
த.வெ.க., வலுவான கூட்டணியை அமைத்தால், இரண்டாம் இடத்தைப் பிடிக்க, அ.தி.மு.க.,வுடன் கடும் போட்டியில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.