புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2016

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300-வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், கிராண்ட்ஸ்லாம்
தொடரில் 300 ஆட்டங்களில் வெற்றி கண்ட முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

பெடரர் சாதனை

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார். 2 மணி 40 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் பெடரர் 6-4, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பெடரரின் 300-வது வெற்றியாக இது பதிவானது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாமில் 300 வெற்றிகளை குவித்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பை அவர் பெற்றார். 

2000-ம் ஆண்டு, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியை ஆஸ்திரேலிய ஓபனில் ருசித்த பெடரர் 2006-ம் ஆண்டு விம்பிள்டனின் போது 100-வது வெற்றியையும், 2010-ம் ஆண்டு விம்பிள்டன் தொடரின் போது 200-வது வெற்றியையும் பெற்றிருந்தார்.

பரவசம்

34 வயதான பெடரர் இதுவரை 67 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்று அதில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருப்பது நினைவு கூரத்தக்கது.

பெடரர் கூறும் போது, ‘இந்த சாதனையை நினைத்து மகிழ்ச்சியுடன் பரவசமடைகிறேன். சாதனைகளை எதிர்நோக்கி நான் ஆடுவதில்லை. ஆனால் சாதனை நிகழ்ந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்’ என்றார். 

ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்களில் அமெரிக்க முன்னாள் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா வெற்றி பெற்றிருக்கிறார். அவரது வெற்றி எண்ணிக்கை 306. அதை விரைவில் பெடரர் முறியடித்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. பெடரர் 4-வது சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் காபினை எதிர்கொள்கிறார்.

மகேஷ் பூபதி தோல்வி

நம்பர் ஒன் வீரர், நடப்பு சாம்பியன் ஆகிய அந்தஸ்துடன் வலம் வரும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-5, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ஆண்ட்ரியாஸ் செப்பியை (இத்தாலி) தோற்கடித்து 4-வது சுற்றை உறுதி செய்தார். நிஷிகோரி (ஜப்பான்), சோங்கா (பிரான்ஸ்), தாமஸ் பெர்டிச்(செக் குடியரசு), ஜிலெஸ் சிமோன்ஸ் (பிரான்ஸ்) உள்ளிட்ட வீரர்களும் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் அமெரிக்க சகோதரர்கள் பாப் பிரையன்-மைக் பிரையன் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்டில் மகேஷ் பூபதி (இந்தியா)-ஜிலெஸ் முல்லர் (லக்சம்பர்க்) இணையை வெளியேற்றியது. அதே சமயம் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ருமேனியாவின் புளோரின் மெர்கா கூட்டணி தங்களது 2-வது சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் லுகாஸ் லோகி-ஜிரி வெஸ்லி இணையை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஷரபோவா 600-வது வெற்றி

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ரஷியாவின் மரிய ஷரபோவா கடுமையாக போராடி அமெரிக்காவின் லாரென் டேவிசை 6-1, 6-7 (5-7), 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 2 மணி 14 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஷரபோவா 16 ஏஸ் சர்வீஸ்களை போட்டது கவனிக்கத்தக்கது.

28 வயதான ஷரபோவாவுக்கு இது 600-வது சர்வதேச வெற்றியாகும். இந்த மைல்கல்லை எட்டிய 17-வது வீராங்கனை ஆவார். ‘‘நான் 600 வெற்றிகளை பெற்று விட்டேனா?’’ என்று ஆச்சரியமுடன் வினவிய ஷரபோவா, 28 வயதிலும் தொடர்ந்து டென்னிஸ் விளையாடிக்கொண்டிருப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் உணர்ச்சிவசப்பட்டார். அடுத்து சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை சந்திக்கிறார்.

செரீனா அபாரம்

மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 45 நிமிடங்களில் டாரியா கசட்கினாவை (ரஷியா) துவம்சம் செய்தார். இதே போல் 4-ம் நிலை வீராங்கனையான அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மோனிகா பிய்க்கை (பியூர்ட்டோ ரிகோ) தோற்கடித்து 4-வது சுற்றை எட்டினார்.

மழை காரணமாக சில ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் களம் இறங்க இருந்த லியாண்டர் பெயஸ்-மார்ட்டினா ங்கிசின் ஆட்டமும் அடங்கும்.

ad

ad