சனி, டிசம்பர் 29, 2018

மெல்போர்ன் டெஸ்ட்: பட் கம்மின்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி தாமதம்


மெல்போர்ன் டெஸ்ட்: பட் கம்மின்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி தாமதம்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-வது இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்தபோது டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. ஆனால், முதல் இன்னிங்சைப் போல் இல்லாமல் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சுதாரித்து ஆடினர். இருப்பினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. பட் கம்மின்ஸ் மட்டும் ஒருபுறம் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலை அளித்தார். இந்திய ரசிகர்களின் பொறுமையை சோதித்த பட் கம்மின்ஸ் அரை சதம் அடித்ததோடு, இந்திய அணியின் வெற்றியையும் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றார். நாதன் லயனும் அவருக்கு பக்க பலமாக தனது விக்கெட்டை பாதுகாத்துக்கொண்டார்.

இதனால், 4-வது நாளிலேயே ஆட்டம் முடிந்து விடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 84 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 141 ரன்கள் தேவைப்படுகிறது. கம்மின்ஸ் 61 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகளே தேவைப்படுவதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இந்தப்போட்டியில் பிரகாசமாக உள்ளது. எனினும், ஆஸ்திரேலிய அணியின் மீதமுள்ள இரு விக்கெட்டுகளையும் இந்திய அணி விரைவாக வீழ்த்துவது அவசியமாகும். ஏனெனில், 60 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், போட்டியின் முடிவு இதைப்பொறுத்து மாறவும் வாய்ப்பு உள்ளது.