புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2012


இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டது - டில்ருக்சன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள்!
வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தில் காயமடைந்து கோமா நிலையிலிருந்து உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்சன் மரியதாஸின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றும்போதே தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு
மனோ கணேசன்
யுத்தத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோதும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் திருப்தி கொள்ளவில்லை. அதனால்தான் தமிழர்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கைத் தீவில் நாய்களுக்கு கொடுக்கின்ற உரிமைகூட தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. மிருக வதைகளுக்காக நாட்டில் சட்டங்களை உருவாக்கும் அரசாங்கம் மனிதர்களின் உயிர்களை பறிப்பது எந்தவிதமான நியாமமாகும்.
நிமலரூபன், டில்ருக்சன் போன்று இன்னும் படுகொலைகள் தொடரத்தான் போகின்றன. இதற்காக மக்கள் ஜனநாயக வழியில் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஜனநாயக வழி மூலமான போராட்டத்தின் ஊடாகத்தான் தமிழ் மக்கள் மீதான அரசின் ஒடுக்குமுறையினை சர்வதேச ரீதியில் வெளிக்கொணர முடியும் என்று மனோ கணேசன் இரங்கலுரையில் மேலும் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டது. இங்கு தமிழர்களின் வாழ்கை என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது என்றார்.
நாங்கள் பலமாக இருக்கும் போது சர்வதேச நாடுகளும் எங்களுடன் கைகோர்த்து நின்றது. இப்போது சர்வதேச நாடுகளும் வேறு திசைக்கு மாறிவிட்ட நிலை காணப்படுகிறது.
நாங்கள் எங்கள் உரிமைக்காக ஒன்று திரண்டு போராடும்போது சர்வதேசமும் எங்கள் பக்கம் இருக்கும் என்று தொடர்ந்தும் சிறிதரன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
அரசியல் கொலை செய்வதில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றபோது அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
இவ்வாறான கொலைகள் தொடராமல் இருக்க மக்கள் வீதியில் இறங்கிப்போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
அத்துடன் வவுனியா சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தின்போது கொல்லப்பட்ட நிமலரூபன் மற்றும் டில்ருக்சன் ஆகியோரின் மரணத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் நீதியின் முன்னிறுத்தி தண்டிக்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் மீண்டுமொரு முள்ளிவாய்க்காலை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்
சிறைச்சாலை படுகொலைகள் குட்டிமணி, தங்கத்துரை காலம் தொடக்கம் இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. ஆனால் இந்தப் படுகொலைகள் எவற்றுக்கும் நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை. இதற்குக் காரணம் படுகொலை செய்யப்படுகிறவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதே.
இறந்தவரின் உடலுக்கு சுதந்திரமாக இறுதியஞ்சலி செலுத்த அனுமதிக்காத, சுயநினைவிழந்து கிடப்பவருக்கு காலில் விலங்கு பூட்டியிருக்கின்ற இந்த மோசமான அரசாங்கத்தின் கீழேதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனினும் இதனை தொடர்ந்தும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இது அரசாங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு கொலை. வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எல்லோரும் அடித்து துன்புறுத்தப்பட்டு இதன் பின்னர் அனுராதபுரம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்தும் மிகமோசமான துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதில் டில்ருக்சனுக்கு முன்னதாக நிமலரூபன் கொலை செய்யப்பட்டார். அவரது உட ல் 23 நாட்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக் கு முன்னதாகவே வவுனியாவில் அவரது சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவ்வாறு உடலை கொண்டு வருவதற்கும் கூட அரசாங்கம் அனுமதிக்கவில்லை. பின்னர் நீதிமன்றத்தை நாடி உயிர் நீதிமன்றில் அனுமதி பெற்றே உடலை சொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய முடிந்தது. டெல்றொக்சனின் இறுதிச் சடங்கும் கூட பல கஸ்டங்களுக்கு மத்தியில் தான் இடம்பெறுகின்றது.
கறுப்பு கொடிகள் கட்டக் கூடாது, வாத்தியங்கள் இசைக்க கூடாது, என பல அழுத்தங்கள் போடப்படுகின்றன. எனவே இந்த நாடு எப்போதும் ஜனநாயக சூழலில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றில் இராணுவ நெருக்குவாரங்கள் இருக்கின்றன. அல்லது பொலிஸ் நெருக்குவாரங்கள் இருக்கின்றன. சாதாரணமாக வீட்டில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கும் கூட அனுமதி பெறவேண்டிய நிலையில் இன்று தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.
டில்ருக்சனுடனிருந்த சக கைத்திகளும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். பல கைதிகள் கைமுறிந்தும், கால் முறிந்தும் இன்னமும் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்கின்றார்கள். அவர்களை நாம் சிறைச்சாலைக்குச் சென்று பார்த்திருக்கின்றோம். அந்த நேரத்தில் டில்ருக்சனை பார்க்க முடியவில்லை.
பின்னர் ராகம வைத்தியசாலைக்குச் சென்றபோது பார்வையிட எமக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நாம் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அனுமதியைப் பெற்றுக்கொண்டு சென்று பார்த்தபோது அவர் நினைவற்ற நிலையிலிருந்தார். அவரால் சாப்பிட முடியாது, எதையும் அவதானிக்க முடியாது. ஆனால் அவருடைய கால்களில் விலங்குகள் மாட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான மோசமான அரசின் கீழேதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெற கூடாது. ஒருவேளை சரியான மருத்துவ வசதி கிடைத்திருந்தால் டில்ருக்சன் உயிர் பிழைத்திருப்பார். நாம் அதற்கும் அனுமதி கேட்டிருந்தோம்.
வெளியிலிருந்து பலர் அந்த உதவியினை செய்ய முன்வந்தனர். ஆனால் அரசு அதையும் அனுமதிக்காமல் சாகும் வரை வைத்து வேடிக்கை பார்த்தது. இதேபோல் கைமுறிந்து, கால் முறிந்தவர்களுக்கும் சரியான வைத்திய வசதி கிடையாது, அவர்களுடைய அவயவங்கள் கழற்றப்படலாம்.
பாராளுமன்றில் சிறைச்சாலை அமைச்சின் அதிகாரிகளுடன் பேசி கொலை தொடர்பாக என்ன விசாரணை இடம்பெற்றது? எனக்கேட்டிருந்தோம். இது திட்டமிட்ட கொலை, மிருகத்தனமாக கைதிகள் தாக்கப்பட்டுள்ளார்கள்.  தாக்குதலாளிகள் மீது என்ன விசாரணை என்று கேட்டபோது அந்த இடத்தில் 25ற்கு மேற்பட்ட அதிகாரிகளிருந்தனர். அவர்கள் எவரிடமும் பதில் கிடையாது.
பொலிஸார் விசாரணை செய்வதாகவும், ஒரு வாரகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிப்பதாக கூறுகின்றார்கள். பல்வேறுபட்ட அமைப்புக்கள் இணைந்து பல்வேறு விதத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றோம். சர்வதேச மன்னிப்புச் சபை தொடக்கம் இந்த விடயத்தை கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என அரசை கேட்டுள்ளோம். இவ்வாறான சம்பவங்கள் சிறைச்சாலையில் குட்டிமணி, தங்கத்துரை தொடக்கம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கொல்லப்படுபவர்கள் தமிழர்கள் என்பதால் எந்த விசாரணையும் கிடையாது. இதற்கொரு நியாயம் தேடுவோம். என்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழினத்திற்கு எதிராக காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்பட்டுவரும், வன்செயல்களின் ஒரு பாகமாகவே நிமலரூபனதும், டில்ருக்சனினதும் படுகொலைகளை நாங்கள் பார்க்க வேண்டும். இந்த படுகொலைகள் வெறுமனே ஒரு அரசாங்கத்தின் இனவாதப்போக்கை காண்பிக்கவில்லை.
ஒட்டுமொத்த சிங்கள அரசாங்கங்களினதும் இனாவாதப்போக்கையே காண்பிக்கின்றது. இதை நாங்கள் சரியாக புரிந்து கொண்டு, இந்தப் பிரச்சினைகளை சரியான பின்னணியில் அணுகவேண்டும். அல்லாதுபோனால் நிச்சயமாக இந்தப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணமாட்டோம்.
தன்னுடைய இனத்திற்காக சேவை செய்யும் நோக்கத்தில் செயற்பட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டிருந்தும் தன்னுடைய இனத்திற்கான விடுதலை நோக்கிச் செல்லவேண்டும் என்ற உறுதியான கொள்கையோடு நின்றிருந்தார். தன்னுடைய மக்கள் எந்த தரப்பினரால் பாதிக்கப்படுகின்றார்களோ அந்தத் தரப்பின் சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக தனது பக்க நிலைப்பாட்டை கூறி தன்னுடைய தனிப்பட்ட விடுதலைக்காக காத்துக் கொண்டிருந்தவர். ஆனால் அந்தத் தரப்பு தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு நீதியைக் கொடுக்காமல் கொலை செய்திருக்கின்றது.
ஆகவே டில்ருக்சனின் கொலையின் உன்மையான, ஆழமான நிலையினை சரியாக அறிந்துகொள்ள வேண்டும். இன்று இலங்கை தன்னையொரு ஜனநாயக நாடு என கூறிக் கொள்கின்றது. ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம் சட்டத்தின் ஆட்சி, அதாவது அந்த நாட்டின் சட்டத்திற்கு அமைவாகவே அனைத்து விடயங்களும் இடம்பெறவேண்டும்.
அந்த வகையில்தான் தன்னுடைய விடுதலையினை வாதாடி எடுக்க தயாராக இருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்;றார். இதன் அர்த்தம் உண்மையில் இலங்கையில் ஜனநாயகம் என்பது இல்லை என்பதே. இதேபோல் இன்றுள்ள இந்த அரசுதான் இவ்வாறு செயற்படுகின்றது என்றில்லை.
காலத்திற்குக் காலம் இருந்த அத்தனை அரசாங்கங்களும் இதையேதான் செய்திருந்தன. வெலிக்கடையில் நடந்தபோது வேறு அரசாங்கம், வேறு கட்சி ஆட்சியிலிருந்தது, அது போலத்தான் காலத்திற்குக் காலம் தமிழினப் படுகொலைகளின் போது வேறு வேறு அரசாங்கங்களும், கட்சிகளுமே ஆட்சியிலிருந்தன.
எனவே இன்றுள்ள இந்த அரசாங்கத்தின் இனவாதப் போக்கை மட்டும் காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக சிங்கள அரசாங்கங்களினது இனவாதப் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது. இன்று நாம் டில்ருக்சனின் படுகொலையை கண்டித்து ஒரு கூட்டத்தை நடத்துவதால் பயனில்லை.
அவற்றின் மூலம் இவ்வாறான படுகொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியினை எம்மால்  நிச்சயமாக வைக்க முடியாது. சரியான பின்னணியில் அணுகாவிட்டால் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமாட்டோம். இதனை தமிழினத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்செயல்களின் அங்கமாகவே நாம் பார்க்கவேண்டும்.
எங்கள் மக்களின் விடுதலைக்காக தென்னிலங்கையிலுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்பட நாம் தயாராகவுள்ளோம். ஆனால் எங்கள் பிரச்சினைகள் சரியாக அணுகப்படவேண்டும். என்றார்.

ad

ad