புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2012


வாழ்வாதாரத்திற்கு வழிதேடிச் சென்ற யாழ். திருவடிநிலை மக்களுக்கு ஒற்றுமையை சொல்லிக் கொடுத்த ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்!
யாழ். மாதகல், திருவடிநிலை பகுதியில் படையினரால் கரையோரம் முழுவதும் விழுக்கப்பட்டுள்ள நிலையில் நீதி கேட்ட மக்களுக்கு நீதி சொல்லச் சென்ற ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அயல் கிராமத்து மக்களுக்குச் சொந்தமான கடற்பரப்பில் சமாதானமாக தொழில் செய்யுங்கள் என பாடம் புகட்டியிருக்கின்றார்.
திருவடிநிலை பகுதியில் மக்கள் ஆண்டாண்டு காலமாக தொழில் செய்துவந்த கடற்பரப்பை யுத்தத்தின் பின்னர் ஆக்கிரமித்திருக்கும் படையினர், அந்தப்பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன் கடலில் மீனவர்கள் இறங்க கூடாதெனவும் பணித்திருக்கின்றனர்.
இதனால் சுமார் 85 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொழிலை இழந்து நிற்கின்றனர். ஏற்கனவே அந்த மக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினர் இப்போது கடலிலும் இறங்க கூடாதென பணித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இந்த மக்களுடைய பிரச்சினை கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுடன் குறித்த பாராளுமன்ற உறுப்பினரும் வந்திருக்கிறார்.
ஆனால் மக்கள் என்ன பிரச்சினையை வைத்திருக்கிறார்கள் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. அதோடு தங்கள் பிரச்சினையை கூற முற்பட்ட அப்பாவி பொதுமக்களை தூசணத்தால் பேசாத குறையாக பேசி அமர்த்திவிட்டாராம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அதன் பின்னர் அதிகாரிகள் காதில் ஓதிய வேதத்தை கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திருவடிநிலை கடற்பகுதிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கரையோரமாகச் சென்று காற்றுவாங்கிய படியே கரையோரத்தை அவதானித்துள்ளார். இதன்போது அங்கு கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதை பார்த்துவிட்டு, உங்களுடைய நிலம் இல்லையென்றால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
உங்களுடைய பகுதிக்குள் அத்துமீறி தொழில் செய்யும் மீனவர்களுடன் ஒற்றுமையாக வாழுங்கள். ஒற்றுமையே மேன்மை என நன்னெறி கருத்துக்களை போதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
இத்தனைக்கும் மக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினர் குறித்தோ அல்லது எஞ்சியிருக்கும் மக்களுடைய கடற்பரப்பில் நுழைந்து தொழில் செய்யும் மீனவர்கள் குறித்தோ இந்த பாராளுமன்ற உறுப்பினர் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் அன்றாட வாழ்க்கையோட்டத்திற்கே படாதபாடுபடும் திருவடிநிலை கரையோர மக்கள் ஏமாற்றத்துடனும், விரக்தியுடனும் வீடு திரும்பியிருக்கின்றனர்.

ad

ad