சிங்கள அரசின் எல்லை தாண்டிய நயவஞ்சகச் சதியால் 08.11.2012 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தளபதி கேணல் பரிதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வும் வித்துடல் விதைப்பும் எதிர்வரும் சனிக்கிழமை 24.11.2012 அன்று  நடைபெறும் என்பதை  அறியத்தருகின்றோம் .

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கேணல் பரிதி அவர்களின் பங்கு  அளப்பெரியது என்பதை உலகம் முழுதும் பரந்து  வாழ்ந்தாலும் கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவின் செய்தி கேட்டுத் துடித்து நின்ற ஈழத்தமிழர்களின் உணர்வே சாட்சி. தமிழீழ மண் மீதான உரிமைக்காக , உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்ற உறுதியுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரம் கேணல் பரிதி அவர்கள் .

சர்வதேச வல்லரசுகளின் துணையோடு சிங்களம் எமது மக்களை பல்லாயிரக்கணக்காக அழித்து உதிரம் உறைந்த  முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரும் உடலுமாக புதைத்து வெறி கொண்டு கோரமுகம் காட்டி ஆடிய வேளையில் , எமது போராட்டம் நிலத்தில் மௌனிக்கப்பட்டாலும் புலத்தில் கேணல் பரிதி அவர்கள் வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்து மரண அறைகளை கருவறைகளாக மாற்றி எமது சுதந்திர தமிழீழத்தை அடையும் விடுதலைப் பாதையை எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் அன்று முதல் இன்று வரை தணியாத தாகத்துடன் தளராத துணிவுடன் எச் சூழ்நிலையிலும் எந்த வலியையும் சந்திக்கும் தைரியம் கொண்டு தனது இறுதி துளிர் உயிர் இருக்கும் வரை தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் .

இத்தருணத்தில், தளபதி கேணல் பரிதி எந்த உயரிய இலட்சியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, அதற்காகவே தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தாரோ, அந்த இலட்சியப் பயணம் இலக்கினை அடையும் வரை தளராமல் போராடுவதே ஒவ்வொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களதும், உணர்வாளர்களதும், மற்றும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையுமாகும்.

இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் மிக விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்ஸ்