புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2013


சுவிஸ் சூரிச்சில் சிவராம் நினைவுப் பணிமன்ற ஐந்தாவது நினைவுக் கருத்தரங்கு - மாவை சேனாதிராஜா உரையாற்றினார்
சுவிஸ் சூரிச் மாநகரில் இன்று மாலை இடம்பெற்ற சிவராம் நினைவுப் பணிமன்றம் ஏற்பாடு செய்த 5வது நினைவுக் கருத்தரங்கில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினையும் சமகால அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இக் கருத்தரங்கு ஊடகவியலாளர் கனகரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அங்கு மாவை சேனாதிராஜா அவர்கள் ஆற்றிய உரையின் முழுவடிவம்
 இனப்பிரச்சினையும் சமகால அரசியலும்

முதலில் எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டாவதாக இலங்கையில் தமிழீழத் தாயக மண்ணின் விடுதலை, மக்களின் சுதந்திரம் மீது கொள்கைப் பிடிப்பும் இலட்சியப் பற்றும் கொண்ட மக்களாய் திடசங்கற்பத்துடன் வாழ்ந்தும், போராடியும் வரும் எம் தமிழ் உறவுகளாகிய புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்றாவதாக எங்கள் மனதில் என்றும் இடம் கொண்டிருக்கும் உத்தம மனிதர் பத்திரிகையாளர் சிவராம் நினைவாக மன்றம் அமைத்து அறிவுக்கும் ஆய்வுக்கும் களமமைத்துத் தமிழர் விடிவிற்கு உழைத்துவரும் சிவராம் ஞாபகார்த்த மன்ற நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் இன்றும் பத்திரிகைச் சுதந்திரம் அற்ற சூழலில் இனப் பற்றோடு, விடுதலை உணர்வுகளோடு உழைத்துவரும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல நீதி நியாயாத்திற்காகக் குரல் கொடுத்து வரும் சிங்கள ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். அரசின் சர்வாதிகார, இனவாத ஆட்சியினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர். அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட ஊடகவிலாளர்கள்; குறிப்பாக சிவராம் அவர்களுக்கும் என் இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை மண்ணில் களப்பலியாகிவிட்ட எம் உறவுகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று உலக அரசியல் அரங்கில் இலங்கைத் தமிழர் பிரச்சினை முக்கிய அங்கம் வகித்து வருவதை அறிவோம். உலக வல்லாண்மை நாடுகள் உலகின் பல நாடுகளின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு நடவடிக்கையில் ஈடுபடுகையில் இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கைப் பிரச்சினையிலும் ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமென ஈடுபாடுகொண்டு அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்துவரும்போது நாமும் இராஜதந்திரத்துடன் நடந்து கொள்வது அவசியமானதாகும்.

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விடுதலைக்கும், சுதந்திர ஆளுகைக்குமாய் குறிப்பாக கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயக அறவழிப் போராட்டங்களும், ஆயுதப் போராட்டங்களும் தமிழ் மக்களின் விடுதலை எனும் கொள்கை மீதான திடசங்கற்பமுமே சர்வதேசத்தில் இன்று ஏற்பட்டுவரும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்குக் காரணம் ஆகும். இச்சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிடக் கூடாது. சர்வதேச நாடுகளை அனுசரித்து இந்த இராஜதந்திரப் போரில் தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வெற்றிபெற வேண்டும். அல்லது அணிதிரண்டுவரும் சர்வதேச நாடுகள் விரக்தியடைந்துவிட நேரும். குறிப்பாக புலம்பெயர்நத தமிழர்கள் இந்த இராஜதந்திர நடவடிக்கையில் செயலாற்றி வருவது முக்கியமானதொன்றாகும். மேலும் புலத்திலும், களத்திலும் புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி நிற்கின்றேன். அதற்கான அர்த்தமுள்ள பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கொள்கை, இலட்சியப் பற்றுடனான செயற்பாடுகள் இலங்கையில் ஒரு சிறந்த அரசியல்தீர்வை, தமிழர் தாயகத்தில் தமிழர் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு பேருதவியாய் அமையும் என்பதைக் கூறவேண்டும்.

எந்தத் தமிழர் தாயகத்தில் சுதந்திரமும், விடுதலையும் ஏற்படவேண்டும் என்று போராடுகின்றோமோ, தியாகம் செய்திருக்கின்றோமோ அந்த நிலம் கடந்த மூன்று ஆண்டுகளில், அறுபது ஆண்டுகளின் தொடர்ச்சியாக சிங்கள மயமாக்கப்படுகின்றது. அதற்காக இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. பௌத்த மயமாக்கப் படுகின்றது. ராஜபக்ஷ அரசின் நிகழ்ச்சி நிரல் தமிழ்த் தேசிய இனத்துக்குரித்தான இறைமை, சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தை அழித்து விடுவதை நோக்கமாகக் கொண்டது. தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வுரிமையை அழித்து, இன அடையாளத்தை அழித்துவிடும் இன ஒழிப்பு நடவடிக்கைகளைத் (புநழெஉனைநட யுவவயஉமள) தீவிரப்படுத்தி வருகின்றது. 1983 ஓகஸ்ட் 16 ஆம் திகதி இந்திரா காந்தி அவர்களே அதற்கு முதல் நாட்களில் திரு. அமிர்தலிங்கம் அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளை இந்திய மக்களவையில் (டுழம ளுயடிhய ரூ சுயதலய ளுயடிhய) மேற்சபையில் அறிவித்து விட்டுக் கூறும்போது 'இலங்கையில் நடப்பது இன அழிப்பு நடவடிக்கைகள் (புநழெஉனைநட யுவவயஉமள) தான்" என அறிவித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஏனெனில் இலங்கைக்கான இந்திய அரசின் அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளில் இராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் ஒருவகை மாற்றம் ஏற்பட்டிருந்தமையை அவதானிக்கலாம். இந்த நிலையில் இந்தியநாடு மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கைத் தமிழர் நிலைப்பாட்டை ஆதரிக்க வைக்க வேண்டும். அதற்கான பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இத்துமா சமுத்திர இந்தியப் பிராந்தியத்தில் வங்காளதேசம் உருவாவதற்கு முஜிபுர் இரகுமான் இந்திரா காந்தியுடன் கொண்டிருந்த நம்பிக்கை, நட்புறவே அடிப்படையாக அமைந்திருந்தது. இந்திரா காந்தியின் சிறந்த இராஜதந்திரமும் எதிர்காலத்தை ஆசியப் பிராந்தியத்தில் தீர்மானிக்கும் தகைசார்ந்த தலைமைத்துவமும், புத்திக் கூர்மையுடைய இராஜதந்திரப் பார்வை(ஏளைழைn) யும் காரணமாக அமைந்தன. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, சீனா ஒரேகோட்டில் பாகிஸ்தானில் இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராக, பங்களாதேஸ் உருவாக்கத்தை எதிர்த்து நின்றபோதும், இரத்து அதிகாரத்தையும், இராணுவ அச்சுறுத்தலையும் பிரயோகித்த போதும் அதை முறியடித்து இந்திய ருசிய நாட்டு நட்புறவு உடன்படிக்கை பங்களாதேசை அங்கீகரிக்க வைத்தது. முதன்முதல் பங்களாதேசை அங்கீகரித்தது ருசியநாடுதான். ஆனால் இலங்கை மீதான, தமிழர் பிரச்சினை மீதான இந்தியாவின் முன்னெடுப்புகளிலும் இராஜதந்திர உறவுகளிலும் ஒரு பகைமை ஏற்பட்டு; விட்டதைச் சுட்டிக் காட்டலாம்.

இப்பொழுது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக தமிழர்களுக்கு அனுசரணையாக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தென் ஆபிரிக்க நாடுகள் அணிவகுத்துவருவதை நாம் அவதானிக்கலாம். இன்றும் ஆசிய, தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா தவிர்ந்த நாடுகள் இலங்கை சார்ந்து நிற்பதைக் குறிப்பிடலாம். குறிப்பாக சீனா, ருசிய போன்ற வல்லாண்மை நாடுகள் எதிர் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளை நடுநிலைக்குக் கொண்டுவரும் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம்.

இலங்கை இந்திய நட்புறவுடன் என்றும் நடந்ததில்லை. எதிராகவே நடந்து வந்திருக்கின்றது. சீனா, பாகிஸ்தான் பக்க சார்புடனேயே நடந்து வந்திருக்கின்றது. இன்று இலங்கை அரசு சீனாவின் உதவியை இலங்கையில் இறுகப் பற்றியிருக்கின்றது. இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வல்லாண்மை விரிவாக்கத்திற்கு இலங்கையில் இடமளித்து வருவதே, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அணிவகுத்து நிற்கின்ற நிலையை உருவாக்கி வருகின்றது. இவ்வரிய, அறிவார்ந்த, இராஜதந்திர சூழ்நிலைகளை இலங்கைத் தமிழர் அரசியல் தீர்வுக்கு சாதகமாய்ப் பயன்படுத்துவதில் நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என வற்புறுத்துகிறேன். தொடர்ந்தும் எம்மில் சில சக்திகள் அமெரிக்கா குறிப்பாக இந்தியாவை எதிராக விமர்சிப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். பகை உணர்வோடு விமர்சிப்பதை விடுத்து ஆக்கபூர்வமான விமர்சனங்கள் பயனளிக்கும் விதத்தில் அமைவதே தற்போது வேண்டும்.

சில மாதங்களாக இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக தென்னாபிரிக்க இராஜதந்திர பிரதிநிதிகள் குழு இலங்கை வந்து அரசுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமையை இராஜதந்திர மதிப்பீடற்ற முறையில் சிலர் விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர். இலங்கையிலும், யேர்மன் பேர்லின் நகரிலும் எம்முடனும் பின் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தினர். தென்னாபிரிக்காவில் சிறுபான்மை வெள்ளையினத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த பெரும்பான்மை கறுப்பு கலப்பின மக்கள் விடுதலைக்காகவும் ஆட்சியமைப்பதற்காகவும், ஜனநாயக வழிகளிலும் ஆயுதம் எடுத்தும் போராடினர். வெற்றி பெற்றனர். ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (யுNஊ) தலைமையில் ஆபிரிக்கக் கூட்டமைப்பும், போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புக்களும், சிவில் சமூகங்களும் ஒன்றுபட்டு நின்றன. அதனால் நெல்சன் மண்டேலா தலைமையில் ஆட்சியைப் பகிர்ந்து ஏனைய அமைப்புக்களும் தென்னாபிரிக்காவில் இன்று ஆட்சி அமைத்துள்ளன. தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். இலங்கை அரசுப் பரதிநிதிகள் தென்னாபிரிக்கா செல்லுமுன் எம்மை அழைத்தனர். ஆனால் நாம் உடன் செல்லவில்லை. சென்ற மாதம் 29ஃ01 இல் தென்னாபிரிக்கா சென்றோம். பல அனுபவங்களை, இராஜதந்திர அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்திய அனுபவங்களை நாங்கள் எடுத்துக் கூறினோம். எங்கள் தரப்பு நியாயாங்களை ஏற்றுக் கொண்டது தென்னாபிரிக்கா. எம் பிரச்சினையில் இருபது நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள தென்னாபிரிக்காவுடன் நம்பிக்கையுடன் தொடர்ந்து உறவுகளைப் பராமரிக்க உடன்பாடு கண்டுள்ளோம். ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் ஒன்று வரும் நிலையில் இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தும்; சாத்தியமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னாபிரிக்கா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் மூலம் ஆபிரிக்க நாடுகளில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய தென்னாபிரிக்காவுடன் நட்புறவு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்க விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து சீனா அரசியல் செல்வாக்குச் செலுத்தி வருவதையும், அபிவிருத்தியடைந்துவரும் அந் நாடுகளில் முதலீடுகள் செய்து உதவி புரிவதுடன் இராஜதந்திர நலன்களையும் பேணி வருகின்றது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

2011 ஒக்டோபர் இறுதியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையை அழைத்துப் பேசியது. இது ஒரு முக்கிய நகர்வாகும். இலங்கை ராஜபக்ஷ அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை, சர்வதேச விசாரணை நடாத்த வேண்டியதன் அவசியம் பற்றிக் கருத்துப் பரிமாறப் பட்டது. அதேபோன்று இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளுடனும் நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தமையை யாவரும் அறிவர். போர்க்குற்ற விசாரணைக்கான பிரேரணையை அமெரிக்கா கொண்டு வருமானால் அதற்காகாவே சீனா, ருசியா போன்ற சில நாடுகள் எதிர்த்து இலங்கைக்குச் சார்பாக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைமையைத் தெரிந்து கொண்ட அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரக் கூடிய எப்பிரேரணையிலும் தோற்றுவிடாமல் நிறைவேற்றக்கூடிய ஒரு பிரேரணை இராஜதந்திர ரீதியில் உருவாக்கப்பட்டது. இந்நிலைமை தொடர்பிலும் அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதி இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கு விளக்கமளித்திருந்தமையை யாவரும் அறிவர். நாம் எதிர்பார்த்தது போல போர்க்குற்றப் பிரேரணை வராதுவிட்டாலும், இலங்கையை ஐ.நா. சாசன விதிகளுக்கு உட்படுத்தி செயலூக்கப்படுத்தும் சந்தர்ப்பம் ஒன்றை வழங்க அவகாசம் நிபந்தனையிட்டு வழங்கப்படக்கூடிய ஒரு தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஆதரித்து நிற்கக் கூடிய ஒரு தீர்மானம் மனித உரிமைப் பேரவையில் 2011 மார்ச் 22 இல் நிறைவேற்றப் பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் இலங்கை அரசினால் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட பேச்சுக்களும், அறிக்கைகளும் எத்தனை பொருத்தமற்ற உண்மையற்றவை என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனுக்குடன் அப்பேரவைக்கு அறிக்கைகளாக அனுப்பி வைத்ததை யாவரும் அறிவார்கள்.

சென்றமுறை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எமக்கும் இணக்கமாகவே பட்டது.

1. போர் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் அவர்கள் வாழ்ந்த சொந்த நிலத்திலேயே குடியேற்றப்பட வேண்டும்.

2. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.

3. இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும்.

4. காணாமற் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள், கைதானோர் தொடர்பில் நடுவுநிலையான தகைமைசான்ற விசாரணைப் பொறிமுறை ஒன்று நிறுவ வேண்டும்.

5. மேற்குறித்த தீர்மானங்களை இலங்கை அரசு நிறைவேற்றுவதைக் கண்காணிக்க இலங்கையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைக்குழு நியமிக்கப்படும்

என்பனவே அத்தீர்மானங்கள்.

இவற்றில் ஒன்றையேனும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்ற அறிக்கை எம்மால் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது மாத்திரமல்ல மனித உரிமைக்குழு ஆணையாளரினாலும் முக்கியமான அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முன்னேற்றகரமாக இலங்கை அரசுக்கு எதிரான ஒரு தீர்மானம் எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் குழு சென்ற மாத பிற்பகுதியில் இலங்கை வந்து திரு இரா. சம்பந்தன் முதலான கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இவை தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளது. எதிர்நோக்கியுள்ள பிரேரணை 'போர்க்குற்ற விசாரணை"யை மையமாகக் கொண்டிருக்கலாம். இறுதியில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீவிரமான ஒரு பிரேரணை மீது ஐ.நா. பாதுகாப்புச்சபையில் சீனா, ருசிய நாடுகள் தமது இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்படலாம்.

இன்று இப்பிரேரணைகள் நிறைவேற்றப்படுமானாலும் இனப்பிரச்சினைக்கு எவ்வகையில் உதவுமென்ற கேள்வி எழுப்ப இடமுண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி இனப்பிரச்சினைத் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்றே சர்வதேச சமூகம், இந்தியா உட்பட வல்லாண்மை நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இப்பொழுது மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள போர்க்குற்றப் பிரேரணையை (றுயச ஊசiஅநள) விட இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் இன அழிப்புப் பிரேரணை (யுஉவழைn யபயiளெவ புநழெஉனைநட யுவவயஉமள in ளுசi டுயமெய) கொண்டு வரப்பட வேண்டும். அதன் அடிப்படைகளிலிருந்து தமிழ் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக பிரேரணை கொண்டுவர வாய்ப்புகள் ஏற்படும் எனும் பொறிமுறை வாய்ந்த, அர்த்தமுள்ள வாதங்களும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயங்களில் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும், இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு புரிந்துணர்வில் இணங்கி பொருத்தமான வேலைத்திட்டத்தினை வகுத்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்துகின்றோம். இதனூடாகவே சர்வதேசத்தின் அனுசரணையை நாம் வென்றெடுக்க முடியும் என நம்புகிறோம். எதற்கும் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் வாழும் களநிலைமைகள் மதிப்பிடப்பட வேண்டும். அதன் அடிப்படைகள் இராஜதந்திர அணுகல்முறைக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய பொறிமுறைகளை முன்னெடுக்கவும் ஏற்புடையதாகும்.

ஏனெனில், ஒரு இலக்கை, இலட்சியத்தை அடைவதற்கு மக்களின் திடசங்கற்பமான தீர்மானமும், போராட்டமும், சர்வதேச இராஜதந்திர அணுகல்முறைகளும் அவசியமே. அதேபோல இன்றுள்ள களநிலை அதாவது அரசின் இன அழிப்பு நடவடிக்கை அதற்காக தமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம், வாழும் நிலம் அல்லது எந்த நிலத்தில் தமிழர் ஆட்சி ஆளுகை நிலைநாட்டப்பட வேண்டுமோ அந்தநிலம் தமிழ் நிலமாக இல்லாமல் அழித்துவிடவும், தமிழ்த் தேசிய இனத்துக்குரித்தான இறைமை, சுய நிர்ணய உரிமைத் தத்துவத்தை இல்லாமற் செய்து தமிழ் இனம் அரசு, இராணுவக் கட்டமைப்புக்கூடாக தமிழர் உரிமைக்குரல் எவ்வகையிலும் எழுந்துவிடக் கூடாது என்பதனை மையப்படுத்தி தமிழ்பேசும் மக்கள் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றமையை உடன் தடுத்து நிறுத்த வேண்டியதும் அவசியமாகின்றது. அரசியல் தீர்வுக்கான ஒரு பேச்சுவார்த்தைக்கு இவை முன்நிபந்தனைகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.

அதற்கும் ஈடாக தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், போர்க் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கும் அங்கவீனர்கள், வாழ்விழந்த பெண்கள், அநாதைச் சிறுவர்கள் நல்வாழ்வுக்காக புலம்பெயர்நத தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த திடடங்களுக்கூடாகப் பணியாற்ற வேண்டுகிறோம். அதற்கான கட்டமைப்புகள், பொருத்தமான செயலாண்மை, பயனுள்ளவையாக உருவாக வேண்டும்.

ஐ.நா. சாசனத்தின் அடிப்படையில் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வுரிமையையும், இன அழிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் சர்வதேசநாடுகள் பாதுகாப்பு வழங்கக்கூடிய பொறுப்புத் தீர்மானங்களை (சுநளிழளெiடிடைவைல வழ Pசழவநஉவ) முன்னெடுப்பதற்கும் பிரேரணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப்பொழுது ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் பல இராஜதந்திர நகர்வுகளை உள்ளடக்கியதாகவும், படிமுறைகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன என்பதைப் போல இதில் அக்கறையுள்ள, பொறுப்புள்ள நாடுகள் தங்கள் நலன்களின் அடிப்படையிலும்தான் செயல்படுவார்கள் என்பதனையும் நாம் அறிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டும்.

எங்கள் மத்தியில் சர்வதேச இராஜதந்திரம் தெரிந்து நாட்டு அரசுகளை வென்றெடுக்கக்கூடிய இராஜதந்திரிகள், அறிவு சார்ந்தோர், அனுபவம் வாய்ந்தோர் குறைவாகவே உள்ளமையைச் சுட்டிக் காட்ட வேண்டும். நமது ஒற்றுமை எம்மிடம் உள்ள திடசங்கற்பம், அர்ப்பணம் இவையே இன்று தேவை. ஒருங்கிணைந்த சர்வதேச அளவிலான கூட்டமைப்பைக் கட்டியெழுப்பவும் அறைகூவல் விடுக்க வேண்டியது அவசியம்.

அதற்கும் மேலாக தமிழ்த் தேசிய இனத்தை ஒடுக்கி அழித்துவரும் அரசை எதிர்த்தும், அந்த அடக்குமுறைச் சர்வாதிகாரத்தை வீழ்த்தி எம் தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சியை ஏற்படுத்தவும் ஜனநாயக வழியில், சாத்வீக அடிப்படையில் களத்திலும், சர்வதேசத்திலும் போராட்டங்களை முன்னெடுக்கவும்நாம் திட்டங்களை வகுக்கவும் கடப்பாடும் திடசங்கற்பமும் கொண்டு செயலாற்றவும் நாம் ஒன்றுபட வேண்டும்.

இன்று ஏற்பட்டுவரும் உலக சந்தர்ப்பத்தை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும். இன்று கூடி வந்திருக்கும் இராஜதந்திரப் போரில் நாம் மிகுந்த இராஜதந்திரத்துடனும், பொறுமையுடனும், உயர்ந்த தன்னலமற்ற அர்ப்பணத்துடனும் ஒரே குரலாய் ஒன்றுபட்டுச் செயற்படுவோமாயின் இலங்கையில் தமிழ்நிலத்தில் தமிழர் ஆட்சியை நிலைநாட்டுவோம் என்பதில் நம்பிக்கையுண்டு என்று உங்களிடம் கூறி வைக்கிறேன்.

ad

ad