"இலங்கையில் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்து' என்று உலகத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் குரல்கள் கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் "makeranஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்கிற ஆவேசக்குரல் தாய் தமிழகத்தில் வலிமையாக எழுந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்த வரைவு தீர்மானம், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 12-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 15-ஆம் தேதியிலிருந்து அதன் மீது விவாதம் நடக்கவிருக்கும் நிலையில் "இன்னமும் எங்களுக்கு தீர்மானம் கிடைக்கவில்லை. தீர்மானத்தை பார்த்துவிட்டுத்தான் இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்' என்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான்குர்ஷித்.
""எல்லோருடைய கையிலும் அந்த தீர்மானம் இருக்கிறபோது, இந்தியாவிடம் இல்லையென்று சொல்வது அயோக்கியத்தனம். கடந்த வருடம் போல இப்போதும் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை நீர்த்துப் போக வைக்கும் சூழ்ச்சியில் இந்தியா குதித்திருப்பதால்தான் இந்திய அரசின் இப்படிப்பட்ட பொறுப்பற்ற பேச்சு'' என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.
பொது வேலை நிறுத்தம் குறித்து டெசோ உறுப்பினர்களிடம் விவாதித்த கலை ஞர், நவநீதம் பிள்ளை யின் அறிக்கையை சுட்டிக்காட்டி, ""ஐ.நா.மனித உரிமை கள் ஆணையமே இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கும் நிலையிலும் ஈழத் தமிழர்களுக்காக ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசின் நடவடிக்கைகள் நமக்கு திருப்தியளிக்கவில்லை. வேதனையைத்தான் தருகிறது. அமைச்சர் சல்மான் குர்ஷித், "அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் பற்றி அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அமைச்சர் ஜி.எல். பெரிஸை கேட்டுக்கொண்டிருக் கிறேன். தனக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை தடுக்கும் வாய்ப்பு களை இலங்கை அரசு ஆராய வேண்டும். அதன் பிறகுதான் தீர் மானத்தை ஆதரிப்பதா? வேண் டாமா?ன்னு இந்தியா முடி வெடுக்கும்'னு சொல்லியிருக்கிறார் அந்த அமைச்சர். அவருக்கு நெஞ்சில் ஈரமே கிடையாது. காங் கிரஸ் கட்சியின் போக்கையும் இந்திய அரசின் போக்கையும் நாம் தொடர்ந்து மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற் கான நேரம் நெருங்கிக்கிட்டி ருக்கு''’’என்று உணர்வுகளை கொட்டியிருக்கிறார்.
மனித உரிமைகள் கவுன்சிலின் அறிக்கையை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறது அமெரிக்கா. இதில், "இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி. மற்றும் அதனை செயல்படுத்த தேசிய செயல் திட்டம் ஆகிய இரண்டுமே சர்வதேச சட்டங்களின் பொறுப்புகளை நிறைவேற்ற போதுமானவையாக இல்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையம் அளித்த அறிக்கையை ஏற்கிறோம். அதனடிப்படையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையை கவனத்தில் கொள்ளவேண்டியதிருக்கிறது. மனித உரிமை ஆணையத்தின் 12 பரிந்துரைகளையும் இலங்கை நிறைவேற்ற வேண்டும். போரின்போது சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமை சிறப்பு வல்லுநர்களுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டும். அவர்களுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இந்த தீர்மானத்தின் செயலாக்கம் பற்றி இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2013 செப்டம்பரில் ஒரு இடைக்கால அறிக்கையையும் 2014 மார்ச்சில் முழு அறிக்கையையும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதன் மீது விவாதம் நடத்தப்படவேண்டும்' என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய தலைமை இயக்குநர் ஜி.அனந்த பத்மநாபன், ""சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கையை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை ரொம்பவே குறைந்துவிட்டன. இந்த நிலையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் நிறைவேறிவிடும். இந்தியாவின் ஆதரவு இல்லாமலே கூட தீர்மானம் நிறைவேறும் நிலை உள்ளது. இந்தியாவின் முன்னே உள்ள கேள்வி, தீர்மானம் நிறைவேறுமா என்பதல்ல. எந்த மாதிரியான, எந்த கருத்துக்கள் கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்காத ஒரு தீர்மானம் நிறைவேறினால் அதனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. இந்த மாதிரி தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தால், தங்கள் குடிமக்களின் கருத்து மற்றும் பாசத்தை கருதாமல் ராஜபக்சே அரசுடனான உறவை மட்டுமே முக்கியமாக கருதுகிறது என்பது தெளிவாகிவிடும்'' என்கிறார்.
தீர்மானம் சற்று கடுமையாக இருப்பதால்தான் தனது கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் இலங்கையை காப்பாற்றும் நோக்கில் தீர்மானத்தை நீர்த்துப் போக வைக்கும் தந்திர சூழ்ச்சியில் குதித்துள்ளது இந்தியா. இதுகுறித்து டெல்லியில் உள்ள மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளிடம் பேசியபோது,’ ""இனப் படுகொலை, போர்க் குற்றம், சர்வதேச விசாரணை ஆகிய வார்த்தைகளை இந்திய அரசு ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், யுத்தத்தை நடத்தியதில் 50 சதவீதம் இந்தியாவுக்கு பங்கு இருப்பதால் இந்த 3 குற்றச்சாட்டுகளும் இந்தியாவுக்கும் பொருந்தும் என்பதால்தான். அதனால் இலங்கையை பாதுகாப்பதில் எப்போதையும் விட இப்போது அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்கிறது இந்தியா.
தீர்மானத்தின் நகல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரு மாதத்திற்கு முன்பே கிடைத்து விட்டது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் டெல்லிக்கு வந்த போதும், திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவை ரா அமைப்பின் தலைவர் சந்தித்தபோதும் தீர்மானம் பற்றியே விவாதிக்கப்பட்டது. அப்போது "தீர்மானத்தின் ஒவ்வொரு வரிகளும் இலங்கைக்கு எதிராகத்தான் இருக்கிறது. அதிலுள்ள வாசகங்கள் எந்த வடிவத் தில் இடம் பெற்றாலும் அது இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதனால் அதை இந்தியா ஏற்கக் கூடாது' என்று இந்த சந்திப்புகளில் இலங்கைத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது "இலங்கைக்கு எதிரான தீர்மான வாசகங்களை இந்தியா ஒருபோதும் ஏற்காது' என இந்திய தரப்பில் இலங்கைக்கு உறுதி தரப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்காவிடம் பேசிய இந்திய அரசு, "எந்தச் சூழலிலும் இலங்கையை நாங்கள் விட்டுவிட முடியாது. அது எங்களுடைய நட்பு நாடு. அதனால் இப்போதுள்ள வடிவத்திலே தீர்மானத்தை தாக்கல் செய்வதில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை' என்று தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியது. ஆனால், கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போதும் இப்படித்தான் தெரிவித்து அதில் பல்வேறு திருத்தங்களை செய்த இந்தியா, அந்த தீர்மானத்தின்படி இலங்கை நடந்து கொள்ளும் என தந்த உறுதிமொழியும் நிறைவேற்றப் படாததால் இந்த முறை இந்தியா சொல்கிற விஷயத்தை காதில் வாங்கிக் கொள்ளவில்லை அமெரிக்கா. அதனால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் வார்த்தைகளை கவனமுடன் சேர்த்திருக்கிறது. இருப்பினும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் நாள் வரையில் இலங்கைக்கு எதிரான வாசகங்களை திருத்த இந்தியா கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் விருப்பப்படி திருத்தப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை இந்தியா ஆதரிக்கும். அதேசமயம் இலங்கைக்கு எதிரான இப்போதைய வாசகங்களுடன் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் இந்தியா நடுநிலை வகிக்கும் என்பதுதான் இப்போதைய இந்தியாவின் நிலைப்பாடு''’’என்று விவரிக்கிறார்கள்.
இந்தச் சூழலில், டெல்லி மேலிட உத்தரவுப்படி கலைஞரின் நடவடிக்கைகளை உற்று கவனித்து வரும் மத்திய உளவுத்துறை அண்மையில் ஒரு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. அதில், "கி.வீரமணி, திருமாவளவன், சுப.வீர பாண்டியன் உள்ளிட்ட டெசோ உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் துரோகம் செய்வதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதேசமயம், தி.மு.க.வில் உள்ள எம்.பி.க்களில் பெரும்பாலானோர், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று சொல்லி வருகிறார்கள். இருந்த போதிலும், "இனியும் பொறுப்பதற்கில்லை' என்றே அடிக்கடி கலைஞர் சொல்லி வருகிறார்'' என்று குறிப்பிட்டுள்ளது, இந்த நிலையில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காமல் போனால் மத்திய அரசிலிருந்து வெளியேறும் முக்கிய முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது தி.மு.க.! தவறான எண்ணத்தால் சிக்கியிருக்கிறது சோனியா காங்கிரஸ்.