புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2013


கூட்டமைப்புடன் பேச பீரீஸ் முட்டுக்கட்டை; அரசின் குட்டு அம்பலமாகிறது; ரஜீவ விஜேயசிங்க அதிர்ச்சித் தகவல்
அரசியல் தீர்வுத்திட்டப் பேச்சு விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க, அரச தரப்பு பேச்சுக்குழு மறுசீரமைக்கப்பட
வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் பீரிஸ் தலைமை வகித்து முன்னெடுத்த எந்தத் திட்டம்  வெற்றியளித்துள்ளது என்று கேள்வியெழுப்பிய அவர், பேச்சு குழம்பினால் தனக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தலையைப் பாதுகாக்க முனைபவர்களை வைத்துக்கொண்டு பேச்சை முன்னெடுப்பது சிக்கல்தான் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், தீர்வுத்திட்டப் பேச்சுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தீர்வுத்திட்டப் பேச்சுகள் தொடர்பில் தமக்கு உரிய வகையில் அறிவிக்கப்படாததால் தான் அந்தக் குழுவிலிருந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியேறிவிட்டார் என்றும் ரஜீவ விஜயசிங்க மேலும் கூறினார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் நோக்கில் போருக்குப் பின்னர் இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பித்தது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பேச்சுகள் ஆரம்பமாகி சில மாதங்கள் சென்ற பின்னர் இடைக்காலத் தீர்வுத்திட்ட யோசனையை கூட்டமைப்பு முன்வைத்தது. எனினும், அந்த யோசனைத் திட்டத்தை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதனால், இருதரப்பு பேச்சுகளுக்கும் தடங்கல் ஏற்பட்டது. எழுத்துமூலம் உறுதிமொழி தராவிட்டால் பேச்சுகளைத் தொடர்வதில் பயனில்லை எனத் தெரிவித்து அதிலிருந்து கூட்டமைப்பு வெளியேறியது.

இருப்பினும்,  சில மாதங்களுக்குப் பின்னர் புரிந்துணர்வின் பிரகாரம் பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகின.

காலப்போக்கில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் பிரதமர் சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இராஜிநாமா செய்தமை உட்பட அரச தரப்பினரின் அசமந்தப் போக்காலேயே இந்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனையை முன்வைத்து கூட்டமைப்புக்கு நிபந்தனை விதித்ததால் தீர்வுத்திட்டப் பேச்சுகள் முடங்கின.

இவ்வாறு பேச்சுகள் முறிவடைந்து பல மாதங்கள் கடந்துள்ள  நிலையில், அரசு  கூட்டமைப்பு பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகவேண்டும் எனச் சர்வதேச சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது. அரசு இதயசுத்தியுடன் பேச்சை ஆரம்பிக்குமானால் அதில் பங்கேற்கத் தயார் எனக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசியல் தீர்வுத்திட்டப் பேச்சுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்கு அரச தரப்புத் தயாராக உள்ளதா என அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவிடம் "உதயன்' வினவியது.

இதற்குப் பதிலளித்த அவர், பேச்சுகள் மீண்டும் ஆரம்பமானால் அது வரவேற்கக்கூடியதொன்று. இருப்பினும், சில தடங்கல்களும் உள்ளன. பதவியை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் போதும் எனச் செயற்படுபவர்களை வைத்துக்கொண்டு நேர்மையான பேச்சை முன்னெடுக்க முடியாது. எனவே, தீர்வு விடயத்தில் நீதியாகச் செயற்படும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெறவேண்டும்  என்று கூறினார்.

அப்படியானால் மீண்டும் பேச்சு ஆரம்பமாவதற்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸா தடங்கலாக இருக்கின்றார் என "உதயன்' அவரிடம் மற்றுமொரு கேள்வியைத் தொடுத்தபோது, அவ்வாறு நான் கூறவில்லை. பீரிஸ் தலைமை வகித்து முன்னெடுத்த எந்தத் திட்டம்  வெற்றியளித்துள்ளது? பேச்சு குழம்பினால் தனக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தலையைப் பாதுகாக்க முனைபவர்களை வைத்துக்கொண்டு பேச்சை முன்னெடுப்பது சிக்கல்தான்.

பேச்சு மேசைக்குச் செல்லும்போது அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த எனக்கு இது குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை. இதனால் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே நான் இராஜிநாமாக் கடிதத்தை வழங்கிவிட்டேன்.'' நிமல் போன்றோர் அதிலிருந்தால்தான்  பங்கேற்கத் தயார் என்று கூறியிருந்தேன் என்றும் அவர் கூறினார்.

ad

ad