புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2013




           ந்திய அரசியல் கட்சிகளை ஒட்டுமொத்தமாக உலுக்கியிருக்கிறது அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்திய புகைப்படம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்துவைத்து, சுட்டுக் கொன்ற கொடிய செயலுக்கு சாட்சிய மாகவும் ஆவணமாகவும் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த டெல்லித் தலைவர்கள் பலரும் இதயம் நொறுங்கிப் போயிருக்கிறார்கள். நொறுங்கிய இதயங்களின் குரலைத்தான் கடந்த புதன்கிழமையன்று (பிப்.27) ராஜ்யசபா எதிரொலித்தது. nakeeran

ஜெனீவாவில் தொடங்கியுள்ள (பிப்ரவரி 27-மார்ச் 22) ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்றும் "இலங்கை அரசுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்' என்றும் தமிழக எம்.பிக்களிடமிருந்து வெளிப்பட்ட குரலின் தொடர்ச்சியாக, தேசிய கட்சித் தலைவர்களும் ஈழப் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்ததுதான் தற்போது ஏற்பட்டுள்ள மிக முக்கியமான முன்னேற்றம். நாடாளுமன்றத்தில் பேச நேரம் கிடைக்காத பல கட்சிகளின் எம்.பி.க்கள், டெல்லியில் தேசிய கட்சிகளின் தலைவர் கள் உள்பட எல்லோரையும் அந்தப் படம் அதிர வைத்துள்ளது.

தேசிய  கட்சிகளில் ஈழப்பிரச்சினை குறித்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுக்கும் வழக்கம் கொண்டவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரான டி.ராஜா. புதனன்றும் அவர் குரல் வலிமையாக ஒலித்தது. 2009-ல் நடந்த இனப்படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் எடுத்துக் கூறிய அவர், ""இலங்கையில் சிங்களர்களுக்கு நிகராக தமிழர்களும் வாழ ஏற்ற வகையில்  அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்த உறுதிமொழியை இலங்கையிடம் இந்தியா பெறவேண்டும்'' என்றார் அழுத்தமாக.


எதிர்பாராத புதிய திருப்பமாக ஒலித்தது பா.ஜ.க.வின் வெங்கையா நாயுடு குரல். ""இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகளில் இந்தியா வெறும் பார்வை யாளராக இருக்கக்கூடாது. சர்வதேச விசாரணைக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும். தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கும் 13-வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்'' என்றார். பிரதான எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் கொடுத்த அழுத்தத்தை ஆளுந்தரப்பின் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் உற்று கவனித்தார்.

பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் குரலும் உயர்ந்தது. அதன் ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் ராவத், ""இலங்கை விவகாரத்தில் இந்தியா இப்போதாவது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்ல, தமிழகத்திற்குப் பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சி.எம்.ரமேஷ், ""இலங்கை தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்'' என்றார் ஆவேசமாக. லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ராம்விலாஸ் பாஸ்வான் உரத்த குரலில், ""உங்கள் அருகில் உள்ளவரா (இலங்கை அரசு), ரத்த உறவா (தமிழர்கள்) என்றால்... ரத்த உறவுதான் இயற்கையான தேர்வு. அண்டை நாட்டுடன் நல்லுறவு தேவைதான். ஆனால், அதற்கு விலை நம்முடைய சொந்த மக்கள் அல்ல'' என்று ஓங்கியடித்துச் சொன்னார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன், தி.மு.க.வின் திருச்சி சிவா ஆகியோரும் தங்கள் கருத்துகளை எடுத்து வைக்க... எல்லாவற்றையும் கேட்டபடியே இருந்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை எம்.பிக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

குர்ஷித்தோ, ""நமக்கு வருத்தம் இருக்கலாம். கோபம் இருக்கலாம். ஆனால் இலங்கையை பகை நாடு என்று கூறக்கூடாது. தமிழகத்தைச் சேர்ந்த எனது நண்பர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இலங்கை அரசுடன் அதிகாரபூர்வ மாகப் பேசுகிற போதெல்லாம் 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். பொறுப்பு என்பது இலங்கையிடமிருந்துதான் வரவேண்டும். ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீது நாம் எடுக்க உள்ள நிலை குறித்து இந்த அவையில் முன்கூட்டியே கூற முடியாது. இதில் இறுதி நிலையை எடுத்த உடன் சபை யில் அறிவிக்கப்படும்'' என்றார். அமைச்ச ரின் பதில் திருப்தி தரவில்லை எனக் கூறியும் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கூறி தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க.வினரும் வெளியேறினர். 

பாலகன் பாலச்சந்திரன் பச்சைப் படுகொலை, பெண் புலிகள் மீதான கொடூர பாலியல் வன்முறைத் தாக்குதல், உடைகளைக் களைந்து கைகளைப் பின்புறமாகக் கட்டிப்போட்டு ஆண்-பெண் புலிகளை சுட்டுக்கொன்றது, இன்னமும் சிறை சித்ரவதைகளை அனுபவிக்கும் தமிழீழ இளைஞர்கள் என இலங்கை அரசின் கொடூரங்கள் ஆவணமாக வெளியிடப்பட்ட பிறகும், இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு எதிரான நிலையை எடுக்கத் தயங்குவது ஏன் என்பது பற்றி டெல்லி வட்டாரங்களில் விசாரித்தோம்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நவி பிள்ளை, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணி. இலங்கைக்கு தனது குழுவினருடன் நேரில் சென்று ஆய்வு நடத்தி ஐ.நா.விடம் அறிக்கை கொடுத் திருக்கிறார் நவி. அந்த அறிக்கையில், ""சர்வதேச அளவிலான விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அவரது அறிக்கைக்கு அமெரிக்காவின் ஆதரவும் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அறிக்கை, தீர்மானம் ஆகியவை ஐ.நா.வினால் முக்கியத் துவம் கொடுத்து செயல்படுத்தப் படும் என்பது உலகறிந்த ரக சியம். அதன் படி, இலங் கையில் நடந்த இறுதிப் போரில் நடைபெற்ற சர்வ தேச போர் நெறிமுறைகளுக்கு எதிரான விதிமீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடந்தால், இந்தியாவின் பங்களிப்புகள் அம்பலத்திற்கு வரும். இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கும் நெருக்கடிக்கும் உள்ளாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே தீர்மானத்தை ஆதரிக்கத் தயங்குகிறது இந்தியா'' என்கிறார்.

கடந்த 2012 மார்ச்சில் இதே மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத் தை எதிர்த்த சில நாடுகள் இந்தமுறை தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்துள் ளன. இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இந்த முறை  மனித உரிமை ஆணையத்தில் வாக்களிக்கும் வாய்ப்பு இல்லை. எனவே, இந்தியாதான் இலங்கைக்கு ஆதரவான முக்கியமான நாடு. அது இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்தால், போர்க்குற்றம் தொடர்பான உலக நாடுகளின் அழுத்தம் அதிகமாகும். அது ஈழத் தமிழர்களுக்கு ஓரளவேனும் சாதகமாக இருக்கும் என்பதுதான் தற்போதைய நிலைமை.

கடந்த முறையும் ராஜ்யசபாவில் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர், "தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என வலியுறுத்திய போது, அப்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, "அது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரம்' என இலங்கைக்கு ஆதரவான குரலில்தான் பேசினார். தமிழகத்திலிருந்து கலைஞர், ஜெ. உள்ளிட் டோர், "தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என பிரதமரை வலியுறுத்தி கடிதம் எழுதினர். மன்மோகன்சிங் வழக்கம்போல மவுனமாக இருந்த நிலையில், சென்னையில் கலைஞர் பேட்டியளித்தார்.

"மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை என்றால் பங்களாதேஷ் சுதந்திரத்திற்காகத் தலையிட்டது ஏன்? ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன்வரா விட்டால், மத்திய அரசுக்கான ஆதரவைத் தொடர்வது குறித்து தி.மு.க.வின் செயற்குழு கூடி முடிவெடுக்கும்' என்று கலைஞர் பேட்டியளிக்க, தி.மு.க எம்.பிக்களும் இதைப் பிரதமரிடம் நேரில் எடுத்துச் சொன்னார்கள். 

தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடும் என்றும், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. அமைச் சர்கள்  விலகுவார்கள் என்ற தீர்மானமும் ரெடியானது. இந்த வேகத்தை அடுத்து தான், ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என மன்மோகன்சிங் அறிவித்தார். 

இந்த முறையும் இந்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திருச்சி சிவா கடுமையாகப் பேசிவிட்டு தன் பேச்சின் இறுதியில், ""இனத்தையே அழித்த இலங்கையுடனான உங்களது நட்பை நீடிக்க வேண்டுமா? அல்லது தென்னிந்தியாவில் உள்ள எங்களோடு நட்பாக இருக்க வேண்டுமா? எது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சல்மான் குர்ஷித்தைப் பார்த்துச்  சொன்னார். தி.மு.க தலைமையின் குரலாகத்தான் இதை காங்கிரஸ் பார்க்கிறது என்கிறார்கள் டெல்லியில் உள்ளவர்கள். இலங்கைத் தூதரகமும் அப்படித்தான் பார்க்கிறதாம்.

மார்ச் 7-ந் தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் டெசோ கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற வுள்ள நிலையில், தி.மு.க. தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. கூட்டணி விஷயத்திலும் காங் கிரசின் மிரட்டலுக்கு இனிப் பணிய வேண்டாம்  என்ற  நிலையில் தி.மு.க. இருப்பதை நக்கீரன் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அ.தி.மு.க.வும் இந்தத் தீர்மானம் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதால் தி.மு.க.வின் வேகமும் அதிகரிக்கும் என்றும், அரசுக்கான ஆதரவு நிலையில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் டெல்லி உணர்ந்திருக்கிறது. 

""தமிழகக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமின்றி தேசியக் கட்சிகளான பா.ஜ.க., சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் சிவசேனா, தெலுங்கு தேசம், லோக்ஜனசக்தி எனப் பல கட்சிகளும் இந்தியாவின் நிலை மாறவேண்டும் என வலியுறுத்துவதால், "கடந்த முறை போலவே கடைசி நேரத்தில் இந்தியாவின் நிலை மாறக்கூடும்' என்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் இலங்கைப் பாசம் நீடித்தபோதும்... "அக்கட்சி தன் பாவக் கறைகளைக் கழுவ வேண்டு மென்றால் ஐ.நா. மனித உரிமை தீர்மானத்தை இந்தியா ஆதரித்தே ஆகவேண்டும்''' என்கி றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

-லெனின், டெல்லியிலிருந்து அக்பர்

ad

ad