புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2013


அமெரிக்க அழைப்பை நிராகரிக்க மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, அரச படையினர் காரணமல்ல என்று இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக, கடந்த 10ம் திகதி இராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.
அது ஒன்றும் புதிய அறிக்கை கிடையாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கை தான்.
கடந்த பெப்ரவரி 15ம் திகதி இதே அறிக்கை இராணுவத் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
இரண்டாவது தடவையாகவும், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து, இந்த அறிக்கை வெளியிடப்படதற்கு ஒரு காரணம் உள்ளது.
இரண்டாவது தடவையாகவும், இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஏப்ரல் 8ம் திகதி கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் அமெரிக்கத் தூதுவர் மைக்கல் ஜே சிசன் நிகழ்த்திய உரையே இதற்குக் காரணம்.
அவர் தனது உரையில், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இலங்கை இராணுவம் நடத்திய விசாரணை அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் நம்பகமான விசாரணையையும், வெளிப்படைத் தன்மையையும் அமெரிக்கா தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வந்துள்ளது.
இந்த இராணுவ நீதிமன்ற விடயத்திலும் அமெரிக்கா அதையே எதிர்பார்த்தது, எதிர்பார்க்கிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க, கடந்த ஆண்டு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு இந்த விசாரணை நீதிமன்றம் நியமிக்கப்பட்டது.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான, சுதந்திரமான, நியாயமான, விசாரணைகளை அமெரிக்கா வலியுறுத்தி வந்த போதிலும், குற்றச்சாட்டுக்குள்ளான இராணுவத் தரப்பை இந்த விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட போது அதற்கு எதிராக அமெரிக்கா எந்தக கருத்தையும் வெளியிடவில்லை.
இப்போதும் கூட, இந்த அறிக்கையை நிராகரிக்காமலேயே தான், அதனை முழுமையாக வெளியிட வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் சிசன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை மறைமுகமாக நிராகரிக்கும் வகையில் தான், இந்த அறிக்கை இரண்டாவது தடவையாகவும் வெளியிடப்பட்டது.
முதலாவது தடவை இந்த அறிக்கை வெளியிடப்பட்ட சூழல், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஆயத்தம் செய்து கொண்டிருந்த காலமாகும்.
ஜெனிவா தீர்மானத்துக்கு முன்னதாக இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம், இலங்கைக்கு எதிரான கருத்து வலுப்பெறுவதைத் தடுக்கலாம் என்று அரசாங்கமும் படைத்தரப்பும் கருதியதில் ஆச்சரியமில்லை.
ஆனால் இராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கை ஜெனிவாவில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவேயில்லை என்பதுதான் முக்கியமான விடயம்.
எனினும் இராணுவ நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 15ம் திகதி இராணுவத் தளபதியிடம் கையளித்த அறிக்கை, மிகவும் காலதாமதமாகவே பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையைப் படித்து, அது தொடர்பான தனது கருத்துடன் பாதுகாப்புச் செயலரிடம் ஒப்படைப்பதற்கு, இராணுவத் தளபதிக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்துள்ளன.
இராணுவத் தளபதி இந்த அறிக்கையை முழுமையாகப் படிக்காமல் அதற்கு ஒப்புதல் வழங்காமல், இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை முடிவு குறித்த அறிக்கையின் சுருக்கம் பெப்ரவரி 15ம் திகதியே வெளியிடப்பட்டது கேள்விகளை எழுப்புகிறது.
அவ்வாறாயின் இந்த அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டுவிட, இராணுவத் தலைமையகம் திட்டமிட்டிருக்கலாம்.
அமெரிக்கத் தூதுவரின் உரையை அடுத்து, அதற்குப் பதிலளிக்கும் வகையில், இந்த அறிக்கை பாதுகாப்புச் செயலரிடம் கையளிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
மீண்டும் அதே அறிக்கைச் சுருக்கத்தையே இராணுவத் தலைமையகம் வெளியிட்டதன் மூலம், இராணுவ நீதிமன்ற அறிக்கை முழுமையாக வெளியிடப்படமாட்டாது என்ற செய்தி அமெரிக்காவுக்குச் சொல்லப்பட்டுள்ளது.
இராணுவ நீதிமன்ற அறிக்கைகள் ஒருபோதும், பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்றும், அவ்வாறு பகிரங்கப்படுத்துவது இராணுவச் சட்டங்களுக்கு முரணானது என்றும் இராணுவப் பேச்சாளரை மேற்கோள் காட்டி சில செய்திகள் வெளியாகின.
அவ்வாறாயின் அமெரிக்காவின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை என்பதே பொருள்.
போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்ட ஆட்டிலறித் தாக்குதல்களுக்கு படையினர் காரணமா? என்ற கோணத்தில் அந்த இராணுவ நீதிமன்ற விசாரணை மேற்கொண்டிருந்தது.
மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான அந்த இராணுவ நீதிமன்றத்தில், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, பிரிகேடியர் ருவான் குலதுங்க, பிரிகேடியர் ருவான் டி சில்வா, பிரிகேடியர் அருண விஜேவிக்ரம ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கமைய பூச்சிய நிலை பொதுமக்கள் இழப்பு கொள்கை போரின் போது இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போர் தவிர்ப்பு வலயங்கள் தொடர்பான உத்தரவுகள் எல்லா நேரங்களிலும் படைத் தளபதிகளினால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள், போர் தவிர்ப்பு வலயங்களில் இருந்து தாக்குதல் நடத்தினாலும் கூட பதில் தாக்குதலை தவிர்க்குமாறு தளபதிகளுக்கு கூறப்பட்டிருந்தது.
மனிதாபிமானப் போரின் எல்லாக் கட்டங்களிலும், இராணுவம், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தையும், போர்ச் சட்டத்தையும் மதித்து ஒழுக்கத்துடன் நடந்து கொண்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதை அவர்கள் தவிர்த்தனர்.
விடுதலைப் புலிகளே பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது. தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை படுகொலை செய்தது, சிறார்களை கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தியது போன்ற போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டனர்.
விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து அனைத்துலக சமூகம் தவறியுள்ளதை இராணுவ நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையின் சுருக்கத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த இராணுவ நீதிமன்ற அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகைப்புக்கிடமானது என்று நிராகரித்துள்ளது.
கூட்டமைப்பின் அறிக்கையின் படி, இராணுவத்தினர் குற்றவாளிகளே என்ற தலைப்பிட்டு செய்தியை வெளியிட்ட மறுநாள் தான், யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் மீது ஆயுத பாணிகள் தாக்குதல் நடத்தி, அதன் அச்சகப் பகுதியை எரித்திருந்தனர்.
எனினும், இந்த விசாரணை நீதிமன்றம் சனல் 4 வெளியிட்ட வீடியோ ஆதாரங்கள் குறித்த விசாரணையை இன்னமும் முடிக்கவில்லை.
இந்தநிலையில், முதற்கட்ட விசாரணை அறிக்கையே பகிரங்கப்படுத்தப்படாத நிலையில், இரண்டாவது கட்ட விசாரணையின் அறிக்கை முக்கியத்துவமாக நோக்கப்படாது.
சர்வதேச சமூகம், குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிப்படையானதும் நம்பகமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தி வரும் நிலையில், அதற்காக அடுத்த கட்டத்துக்கும் நகரத் தயாராக இருப்பதாக சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்ற நிலையில், இலங்கை இராணுவமோ மூடிய விசாரணைகள் நடத்தி தன்னை சுற்றவாளியாக நிரூபிக்க முனைகிறது.
நம்பகமும் வெளிப்படைத் தன்மையும் இல்லாத எந்தவொரு விசாரணையின் மூலமும், உலகளவில் ஏற்பட்டுள்ள கறைகளை அரச படையினரால் ஒருபோதும் கழுவிக்கொள்ள முடியாது.
பொறுப்புக்கூறலின் மூலம் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அரச படைகளுக்கோ, அரசாங்கத்துக்கோ இல்லாத அதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதையும் நியாயபூர்வமாக நிரூபிக்கவும் தயாராக இல்லை.
இந்த இரண்டும் கெட்ட நிலை அரசாங்கமோ இலங்கை இராணுவமோ சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இப்போதைக்கு மீளப் போவதில்லை என்பதையே சுட்டி நிற்கின்றது.
சுபத்ரா

ad

ad