புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2013

இலங்கையில் இயற்கையின் சீற்றம்: 18 படகுகள் கவிழ்ந்தன - பலரை காணவில்லை - தெஹிவளையில் பதற்றம் - நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு
காலி, பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 
நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலை காரணமாகவே இந்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு கடலுக்கு சென்ற 20 படகுகளில் 18 படகுகள் கடும் காற்று வீசியமையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அந்த படகுகளில் இருந்த மீனவர்களில் இருவர் கரைக்கு நீந்திவந்து சம்பவத்தை விபரித்துள்ளனர்.
இதனையடுத்தே மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினருடன்  இணைந்து விமானப்படை ஹெலிக்கொப்டர் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் மூன்று கடற்படை படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடலுக்குச் செல்ல வேண்டாம்
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மன்னார், பொத்துவில், காலி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
மீனவர்கள் போராட்டத்தால் தெஹிவளையில் பதற்றம்
தெஹிவளை பகுதியில் ரயில் வீதியை மறித்து மீனவர்கள் சிலர் போராட்டம் மேற்கொள்வதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்ற சில மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரியே மீனவர்கள் போராட்டம் செய்கின்றனர்.
இங்கு சிலர், மீன் பிடி படகுகளை ரயில் தண்டவாளத்தில் தரித்துவைத்து ரயில் போக்குவரத்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் ரயில் போக்கவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு
சீரற்ற வானிலையால் காணாமல்போன நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலி, பேருவளை, பெந்தோட்டை மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போயுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு மீனவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானப்படை ஹெலிக்கொப்டர்கள் மூலம் மூன்று மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பேருவளை கடலில் விபத்துக்குள்ளான மீனவர் ஒருவரும் தெஹிவளை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இரண்டு மீனவர்களும் காப்பாற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஆறு மீனவர்களுடன் தெஹிவளை கடற்பரப்பில் படகொன்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஆராயும் நடவடிக்கையை விமானப்படை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஜய சாகர என்ற கப்பலை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
பேருவளை, மொரட்டுவை, தெஹிவளை ஆகிய கடற்பரப்புக்களில் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் படகுகளில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக நந்திமித்திர மற்றும் சயுர கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad