புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013


கலைஞருக்கு உள்ள பெரிய மைனஸ்பாயிண்ட்!
திருமா பேச்சு!

திமுக தலைவர் கலைஞரின் 90வது பிறந்தநாளையொட்டி சென்னையில் 03.06.2013 திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து
கொண்டுநக்கீரன்  பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,
கலைஞரை வாழ்த்துவதற்காக நான் இங்கு வரவில்லை. வாழ்த்து பெறுவதற்காக வந்திருக்கிறேன். கலைஞருக்கு 90 வயது. கலைஞர் ஒரு வியப்பு. கலைஞர் ஒரு பிரமிப்பு. ஏனென்றால் கலைஞர் என்றால் உழைப்பு. அதனால்தான் கலைஞர் ஒரு வியப்பு. எழுத்தால், பேச்சால் எதிரிகளுக்கு விடை சொல்லுவதை விட, செயலால் விடை சொல்லுகிற ஆற்றல், கலைஞரின் தனி ஆற்றல். திருமாவளவன் இங்கு இல்லை என்று எல்லோரும் எழுதிக்கொண்டிருந்தபோது, கலைஞரை சந்திக்க திருமாவளவனுக்கு அனுமதி தரப்படவில்லை என்று சொல்லும்போது, எழுத்தால் பேச்சால் விடைசொல்லாமல், 'தம்பி வா என் பக்கத்தில் அமர்' என்று என்னை அழைத்து இடப்புறத்திலே அமர வைத்து எல்லோருக்கும் விடை சொல்லியிருக்கிறார்.
கலைஞர் எழுத்தால், பேச்சால் விடை சொல்லுவதைவிட செயலால் விடை சொல்லுகிற ஆற்றல் வாய்ந்தவர். 
கலைஞருக்கு ஒரு வேண்டுகோள். 90வது பிறந்த நாளில் வாழ்த்துவதற்கு அல்லது உங்களிடம் வாழ்த்து பெறுவதற்கு ஒரு வாய்ப்பை தந்ததுபோல, உங்கள் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறபோது, அந்த மேடையிலும் எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கலைஞரிடம் 'உங்களைப் பற்றி ஒரு வரி சொல்லுங்கள்' என்று கேட்ட கேள்விக்கு, 'நான் ஒரு சுயமரியாதைக்காரன்' என்று பதில் சொல்லியிருக்கிறார். அந்த உணர்வுதான் இன்றைக்கு அவரை நூறாண்டுகள் வாழுகிற நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம் என்பது மருத்துவ பழமொழி. ஆனால் கலைஞரை பார்க்கிறபோது, நொறுங்காமல் இருந்தால் நூறாண்டு வாழலாம் என்று நம்மால் உணரமுடிகிறது. 
அவரது 76 ஆண்டுகால பொதுவாழ்வில் அவர் சந்திக்காத விமர்சனங்கள் இல்லை. அவதூறுகள் இல்லை. வீண்பழிகள் இல்லை. அவர் சந்திக்காத எதிர்ப்புகள் இல்லை. நமக்கு வியப்பாக இருக்கிறது. எப்படி இவரால் நொறுக்கிப்போகாமல் இருக்க முடிகிறது. சின்ன சின்ன ஏமாற்றங்களை காணுகிறபோதே நம் மனம் உடைந்து போகிறது. நொறுங்கிபோகிறோம். சுருண்டு விழுந்துவிடுகிறோம். 
ஆனால், எத்தனை காயங்கள் முதுகிலே. எத்தனை வடுக்கள் முதுகிலே. அவ்வளவையும் தாங்கிக்கொண்டு அவரால் இந்த களத்திலே தாக்குப்பிடித்து நிற்க முடிகிறது என்று சொன்னால், அவருடைய சுயமரியாதை உணர்வுதான். அந்த பண்புதான். அவர் உள்வாங்கியிருக்கிற அரசியல்தான். 
நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்திலே எழுதுகிறார். அவர் சின்னஞ்சிறு சிசுவாக தாயின் அருகில் படுத்திருந்தபோது, வீட்டுக்குள்ளே திருடன் ஒருவன் நுழைந்துவிடுகிறான். நுழைந்த வேகத்தில் வீட்டில் இருந்தவற்றை எல்லாம் அவன் அள்ளிக்கொண்டு ஓடுகிறான். என்னை படுக்க வைத்து தாலாட்டுவதற்காக வைத்திருந்த ஏணையையும் அள்ளிக்கொண்டு ஓடுகிறான். உறங்கிக்கொண்டிருந்த என் தாயின் கழுத்தில் இருந்த தாலியையும் அறுத்துக்கொண்டு ஓடுகிறான். என் தாய் விடிந்த பிறகு பார்த்துவிட்டு அழுகிறார். என் தந்தை தேற்றினார். 
அப்போது என் தாய் என்னிடத்திலே சொன்னார். 'நீ கத்தியிருந்தால், சத்தம் போட்டியிருந்தால் உன் கழுத்தை நெறித்து கொன்றுபோட்டிருப்பான் அந்த திருடன். நல்லவேளை நீ கத்தவில்லை. தப்பித்துக்கொண்டாய்' என்று தாய் சொல்லியிருக்கிறார். அப்போதே திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கக் கூடிய உணர்வு கலைஞரிடம் இருக்கிறது என்பதைத்தான் அந்த வரிகள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 
இவரை ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்துபோவார்கள் என்பதற்கு இன்னொரு நிகழ்வையும் அதிலே சுட்டிக்காட்டுகிறார். இரண்டாவது முறையாகவும் திருடன் வீட்டிற்குள் நுழைகிறான். அந்த திருடன் ஆசையாக ஓடி வந்து ஒரு கலயத்தை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான். வீட்டிற்குள் இருந்த கலயத்தில் ஏதோ போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். அதில் நிறைய பொன்னும் பொருளும் இருக்கும் என்ற ஆசையோடு அவன் அந்த கலயத்தை திருடிக்கொண்டு ஓடுகிறான். ஓடிப்போனவன் அதனைப் பார்த்து எப்படி ஏமாந்திருப்பான் என்பதை கலைஞர் எழுதுகிறார். 'நான் சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தபோது, குலதெய்வத்திற்காக முடி வளர்த்தார்கள். அங்கு மொட்டை அடிப்பது வழக்கம். எனது தந்தை சிவபக்தர். ஆகவே, என்னை கோவிலுக்கு அழைத்துச் சென்று முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டாலும், வறுமையில் வாடியதால் கோவிலுக்கு போக முடியவில்லை. அதற்கு ஒரு மாற்று கண்டுபிடித்து, வீட்டிலேயே முடியை இறக்கி, அந்த முடியை பத்திரமாக கலயத்திலே போட்டு கட்டி பாதுகாத்து வைத்திருந்தார்கள் எனது பெற்றோர். யாராவது அந்த கோவிலுக்கு போகும்போது, அவன் கையிலே அந்த முடியை கொடுத்து சேர்த்துவிடலாம் என்று அதனை பாதுகாப்பாக வைத்திருந்தனர் எனது தாயும், தந்தையும். ஆனால் திருட வந்தவன் அந்த கலயத்தை ஆசை ஆசையாய் எடுத்துக்கொண்டு ஓடினான். அவன் போய் பிரித்து பார்த்தபோதுதானே தெரியும் அந்த கலயத்திற்குள் இருந்ததெல்லாம் என்னவென்று.' அவன் எப்படி ஏமாந்துபோனானோ, அப்படித்தான் இவருடைய வாழ்க்கையில் இவரை ஏமாற்ற நினைத்தவர்கள் எல்லாம்ஏமாந்துபோனார்களே தவிர, கலைஞர் யாரிடமும் ஏமாந்துபோகவில்லை. 
தலைவர் என்று சொன்னால் ஆணையிடுகிறவன் பெயர் தலைவன் அல்ல. கட்டளையிடுகிறவனுக்கு பெயர் தலைவன் அல்ல. தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒருகும்பலை பயன்படுத்திக்கொள்கிறவனுக்கு பெயர் தலைவன் அல்ல. தன்னை பின்பற்றுகிறவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான ஆற்றல் பெற்றவர்கள்தான் தலைவர்கள். ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். தலைவர் கலைஞரை பார்க்கிறபோது, அவரை படிக்கிறபோது, அவரோடு நிற்கிறபோது, அவரிடம் இருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும். துணிவை கற்றுக்கொள்ள வேண்டும். அறிவை கற்றுக்கொள்ள வேண்டும். செயல்திறத்தை கற்றுக்கொள்ள வேண்டும். 
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது முரசொலி படிக்கும் பழக்கம் உள்ளவன். அந்த முரசொலியை படிக்கும்போதுதான், நான் காரல்மார்க்ஸ் பற்றி படிக்கும் ஆர்வத்தை பெற்றேன். 'கர்ச்சிக்கும் சிங்கத்தின் தோற்றம். கண்களிலோ கணிவும் துணிவும், அர்ச்சித்து வாழ்வதோ முதலாளி வர்க்கத்தை என ஆர்தெழுந்த எழுத்துக்கு வித்திட்ட மேதை காரல்மார்க்ஸ். காரல்மார்க்ஸ் ஒரு புத்தகம், ஏங்கல்ஸ் அதன் நூலகம், மாவீரன் லெனின் அதன் செயலகம்' என்று கலைஞர், காரல்மார்க்ஸ் நூற்றாண்டு விழாவின்போது 1985லே முரசொலியில் எழுதினார். அதைப்படித்தபிறகுதான் காரல்மார்க்ஸ் பற்றி படிக்கவேண்டும். அவருடைய எழுத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உருவானது. ஆர்வம் என்னை தூண்டியது. 
அதேபோல, சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்கிற அந்த சொல்லை நான் கண்டது முரசொலியில்தான். கலைஞர் எழுத்தில்தான். 'ஒரு தேசிய இனத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஒவ்வொரு தேசிய இனமும் தான் விரும்பினால், அந்த தேசத்தில் இருந்து பிரிந்து செல்லுகிற உரிமை உண்டு என்று லெனின் சொன்னார்- ரஷ்யாவிலே ஒரு சோவியத் கூட்டமைப்பு உருவானபோது' என்று கலைஞர் எழுதினார். அதில் இருந்துதான் கலைஞர் எழுத்தில் இருந்துதான் சுயநிர்ணய உரிமை என்கிற சொல்லை நான் கற்றுக்கொண்டேன். அந்த அரசியலை நான் தெரிந்துகொண்டேன். 
கலைஞரிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. அதனால்தான் அவர் தலைவர். தலைவரோடு எல்லோரும் தலைவர் என்று போட்டிபோடுவதினால் அனைவரும் தலைவர் அல்ல. வண்ணமயிலோடு போட்டியிடுகிற வான்கோழிகளெல்லாம் வண்ணமயில்களாகிவிடாது. கலைருக்கு உள்ள துரதிர்ஷ்டம் என்னவென்று சொன்னால், இவரோடு போட்டி போடுகிற தகுதிவாய்ந்த தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. இவரை எதிர்க்கிறவர்கùளல்லாம் நடிகர்களாக இருக்கிறார்கள் அல்லது தலைவர்களாய் தங்களை காட்டிக்கொள்பவர்களாக இருக்கிறார்களே தவிர, இவருக்கு இணையாக தகுதிப்பெற்ற தலைவர்கள் யாரும் போட்டிப்போடவில்லை. அதுதான் அவருக்கு உள்ள பெரிய மைனஸ்பாயிண்ட். பெரிய பின்னடைவு. தனக்கு இணையான தகுதியுள்ளதலைவரை அவரால் தமிழகத்தில் சந்திக்க முடியவில்லை. 
எழுத்தாற்றல் உள்ள தலைமை. பேச்சாற்றால் உள்ள தலைமை. அறிவாற்றல் உள்ள தலைமை தலைவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட கலைஞரை 
இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது வியந்துபோகிறேன். திரைப்பட கதாநாயகர்களைப் பார்த்து, அவருடைய ரசிகர்கள் கதாநாயகனைப்போல் மீசை வைத்துக்கொள்வது, கிருதா வைத்துக்கொள்வது, முன்மண்டையை சுரண்டிக்கொள்வது என்றெல்லாம் நாம் பார்க்கிறோம். ஆனால், ஒரு கட்சித் தலைவரை பார்த்து ஒரு அரசியல் தலைவரை பார்த்து கலைஞரைப்போல் தலையில் நடுவடுகு எடுத்துக்கொள்ள வேண்டும். கலைஞரைப்போல் தலையில் நெளி வைத்து சீவிக்கொள்ள வேண்டும். தலைவரைப்போல் பெரிய நீளமான துண்டை அணிந்துகொள்ள வேண்டும்.
கலைஞரைப்போல் கரகரத்த குரலில் பேசி பழக வேண்டும் என்று தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவானது என்று சொன்னால் அந்த பெருமைக்குரிய தலைவர் இந்தியாவிலேயே, உலகத்திலேயே தலைவர் கலைஞர் ஒருவர் மட்டும்தான். அவ்வளவு ஈர்ப்புள்ள, ஆற்றல் உள்ளவர். 
பூமியை எதிர்த்து விண்ணுக்குப்போகிற விண்கலங்கள் எதுவாக இருந்தாலும் பூமியை எதிர்த்துதான் போகமுடியும். அதைப்போல கலைஞரை எதிர்த்து பலர் மேலே போக நினைத்தார்கள், அவ்வளவுபேரும் வீழ்ந்துபோனார்கள்.

கலைஞர் ஒரு சுயமரியாதைக்காரர். பெரியாரோடு திராவிட இயக்கத்தை ஒழிக்க
வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் கருத்தியல் பகைவர்கள். பெரியாருக்கு பின்னால் அண்ணா வந்தார். அண்ணாவோடு ஒழிந்தது என்று ஆசைப்பட்டார்கள் கனவு கண்டார்கள். அண்ணாவிற்கு பிறகு கலைஞர் இன்னும் அதனை கட்டி காப்பாற்றி வருகிறார். 
அவருக்கு ஒருமுனை தாக்குதல் அல்ல. இருமுனை தாக்குதல் அல்ல. நான்கு முனை தாக்குதல் அல்ல. எட்டு திசைகளில் இருந்து வரும் எண்முனை 
தாக்குதல் அல்ல. 360 டிகிரியிலும் அவருக்கு எதிர்ப்பு இருக்கிறது. தாக்குதல் இருக்கிறது. அவ்வளவு தாக்குதல்களையும் தாக்குப்பிடித்துக்கொண்டு கவிஞர்கள் நடுவினிலே போனால் கவிஞர்களின் நாயகராக இருக்கிறார். எழுத்தாளர்களின் நடுவினிலே போனால் எழுத்தாளர்களின் நாயகராக இருக்கிறார். பேச்சாளர்களின் நடுவினிலே அமர்ந்தால் பேச்சாளர்களின் நாயகராக இருக்கிறார். தலைவர்களின் நடுவே அமர்ந்தால் தலைவர்களின் நாயகராக இருக்கிறார். அவ்வளவு ஆற்றல் வாய்ந்த ஒரு தலைவர் சுயம்புவாகவே தன்னை அப்படி ஆளாக்கிக்கொண்டிருக்கிறார். வளர்த்துக்கொண்டிருக்கிறார். 
அவர் நொறுக்கிப்போகாத மனம் உள்ளவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் காலமான செய்தி கேட்டு, அவருடைய ரசிகர்கள் தொண்டர்கள் எல்லாம் திரண்டுவிடுகிறார்கள். சென்னை மாநகரம் எங்கும் கூட்டம். எங்கு பார்த்தாலும் அவருக்கு துக்கம் தெரிவிப்பதற்காக தொண்டர்கள் திரண்டுவிட்டார்கள். ஆனால், அவர் காலமானது உடல் நலிவினால் என்பது ஊருக்கு உலகத்திற்கு தெரியும். 

ஆனாலும் கூட அவரது தொண்டர்கள் கலைஞரை எதிரியாக கருதிய காரணத்தினால், அண்ணா சாலையிலே மணியம்மை அவர்களால் 
நிறுவப்பெற்ற கலைஞரின் திருவுருவச் சிலையின் மீது ஏறி கடப்பாறையை கொண்டு, அவர் மார்பிலே ஓங்கி ஓங்கி எம்.ஜி.ஆர். தொண்டன் ஒருவன் குத்திக்கொண்டிருக்கிறான். அந்த சிலை உடைத்து கீழே தள்ளப்படுகிறது. இந்த செய்தி நாளேடுகளில் வருகிறது. படம் பிடித்து போடுகிறார்கள். அந்தப் படத்தை எடுத்து முரசொலியிலே போட்டு ஒரே ஒரு வரியில் பதில் எழுதியிருந்தார். அதை பார்க்கிறபோது சராசரி மனிதனாக இருந்திருந்தால், சராசரிதலைவனாக இருந்திருந்தால் புலம்பியிருப்பான். 'நான் என்ன குற்றம் செய்தேன். எம்.ஜி.ஆர். சாவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. அவர் என்னுடைய நண்பர் அல்லவா. 12 ஆண்டுகால பகைமை இருந்தாலும், 40 ஆண்டுகால நட்புதான் எங்களிடம் மேலோங்கி இருக்கிறது' என்று. கலைஞர் நட்பு பாராட்டியதை நாம் அறிவோம். சராசரி மனிதராக இருந்திருந்தால் புலம்பியிருப்போம். குழம்பியிருப்போம். ஆனால் கலைஞர் 'இந்த தம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தான் குத்துகிறான். வாழ்க' என்று எழுதினார். 
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், எத்தகைய அவதூறுகள் வந்தாலும், எத்தகைய இடியே விழுந்தாலும் நொறுங்கிப்போகாத நெஞ்சுரம் கொண்ட தலைவர். அத்தகைய ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கு எங்கே இவர் பயிற்சி பெற்றார் என்பது தெரியவில்லை. ஒரு விடை நமக்கு தெரிகிறது. அவரே சொல்லியிருக்கிற விடை. 'என் அண்ணா, இதயமன்னா' என்று அண்ணாவுக்கு அஞ்சலி எழுதிய கவிதையில் கலைஞர் சொல்லுகிறார், 'அண்ணா உன் இதயத்தை இரவலாக தந்திடண்ணா. நான் மீண்டும் உன் இடம்தேடி வருகிறபோது, அதை பத்திரமாய் கொண்டு வந்து உன் காலடியில் சேர்ப்பேன்' என்று எழுதினார். 'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்று அண்ணாவின் கல்லறையிலே கலைஞர் பதித்து வைத்திருக்கிறார். அந்த இதயம் இவருக்கு இரவலாக கிடைத்திருக்கிறது என்பதை நாம் இதி-ருந்துதான் புரிந்துகொள்ள முடிகிறது. கலைஞர் கேட்டதை அண்ணா கொடுத்திருக்கிறார். 
அண்ணாவின் இதயத்தை கலைஞர் பெற்றிருக்கிறார். ஆகவேதான் நொறுங்கிப்போகாத நெஞ்சுரம் கொண்ட ஒரு கம்பீரமான தலைவராக இன்னும் விலங்குகிறார். 
90 வயது என்றால், முதுமை என்றால் கவர்ச்சியாய் இருக்கும் என்பதற்கு இவரே அடையாளமாக இருக்கிறார். கலைஞரின் முதுமையே கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கலைஞரின் வழுக்கையே கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் எப்போதுமே அறிவு கவர்ச்சியானது. எப்போதுமே ஞானம் கவர்ச்சியானது. சூது எப்போதும் அசிங்கமானது. சூது உள்ளவன், சூழ்ச்சி உள்ளவன் எப்போதுமே முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொள்வான். உடலை இறுக்கமாக வைத்திருப்பான். அவன் முகத்தை பார்க்கும்போதே இவன் உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவதாக தெரியும். ஆனால் கலைஞர் இன்னும் பிரகாசமாக இருக்கிறார். இன்னும் உழைக்கிறார். இன்னும் எழுதுகிறார். இன்னும் பேசுகிறார். இன்னும் சுற்றிக்கொண்டே இருக்கிறார். கலைஞர் அவர்களே,புவிஈர்ப்பு விசையைபோல, அரசியல் ஈர்ப்பு விசையாக மைய நோக்கு விசையாக நீங்கள் ஒருவரே விளங்குகிறீர்கள். உங்கள் ஆற்றலை எங்களைப்போல இளைஞர்களுக்கு தாருங்கள். எங்களைப்போல இûளஞர்களுக்கு ஊட்டி விடுங்கள். தமிழைக் காப்பாற்ற, தமிழ் இனத்தைக் காப்பாற்ற, தமிழ் தேசத்தைக் காப்பாற்ற, தமிழ் ஈழத்தை வென்றெடுக்க, தமிழகத்தின் மாநில உரிமைகளை வென்றெடுக்க நாம் போராட வேண்டியிருக்கிறது. 
90 கவிஞர்கள் கூடிய விழாவில் பேசியிருக்கிறீர்கள், 'இனிமேல்தான் இன்னும் வேகமாக எழுதப்போகிறேன். என்னுடைய 6ம் பாகம் நெஞ்சுக்கு நீதி வரப்போகிறது' என்று நீங்கள் சொல்லும்போது எவ்வளவு உறுதி இருக்கிறது. நெஞ்சுறுதி இருக்கிறது என்பதை என்னால் பார்க்கமுடிகிறது. நீங்கள் நூற்றாண்டை தாண்டி வாழுவீர்கள் என்று அந்த சொல்லில் இருந்து எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதற்கும், தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் உங்களை விட்டால் நாதியில்லை. ஆகையால் உங்கள் தலைமையில் தமிழகம் உரிமைகளை மீட்கட்டும். இவ்வாறுபேசினார்.
படங்கள் - ஸ்டாலின்

ad

ad