புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2013

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தமிழர் பகுதி மாகாண சபை அதிகாரங்களை ரத்து செய்ய இலங்கை நடவடிக்கை
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாகாண சபை அதிகாரங்களை நீர்த்துப்போக செய்வதற்கான அவசர மசோதாவை பாராளுமன்றத்தில் 18–ந்தேதி தாக்கல் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத்தரும் வகையில் கடந்த 1987–ம் ஆண்டு இந்திய அரசு தலையிட்டது. அதன் பலனாக, ராஜீவ்–ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழர்களின் தாயகமாக கருதப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.
அந்த ஒன்றுபட்ட மாகாணத்துக்கு போலீஸ் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் 13ஏ–வது திருத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழர் பகுதியான வடக்கு மாகாணசபைக்கு வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், 13ஏ திருத்தத்தால் மாகாணசபைகளுக்கு நிறைய அதிகாரங்கள் இருக்கும் நிலையில், வடக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடத்தினால், அது தமிழ் ஈழம் உருவாவதற்கு வழிவகுத்து விடும் என்று ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிங்கள தேசியவாத கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.
எனவே, மாகாணசபை அதிகாரங்களை நீர்த்துப்போக செய்வதற்காக, 13ஏ திருத்தத்தை ரத்து செய்யுமாறு அதிபர் ராஜபக்சேவை வற்புறுத்தி வருகின்றன.
ஆனால், 13ஏ திருத்தத்தை ரத்து செய்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராஜீவ்–ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி, மாகாணசபைகளுக்கு அதிகாரம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளும், தமிழக அரசியல் கட்சிகளும் இதே கோரிக்கையை விடுத்தன.
இந்நிலையில், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, மாகாணசபை அதிகாரங்களை ரத்துசெய்வதில் இலங்கை அரசு பிடிவாதமாக இருக்கிறது. இதற்காக அவசர மசோதா கொண்டு வருகிறது.
இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடர்பாளர் கேகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது:–
மாகாணசபைகளுக்கு அதிகாரம் அளிக்கும் 13ஏ அரசியல் சட்ட திருத்தத்தை திருத்துவதற்கான அவசர மசோதா, 18–ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அந்த மசோதாவின்படி, ஒரு மாகாணம் மற்றொரு மாகாணத்துடன் இணைவதற்கான அதிகாரம் ரத்து செய்யப்படும்.
ராஜீவ்–ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உருவானபோது கூட, மாகாணங்கள் இணைப்புக்கு எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்த பாராளுமன்ற தேர்வு கமிட்டியை 19–ந்தேதி கூட்டுவது என்று இலங்கை மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13ஏ திருத்தத்தில் வேறு என்னென்ன திருத்தங்கள் செய்யலாம் என்று தேர்வு கமிட்டி ஆய்வு செய்யும்.
ஆனால், தேர்வு கமிட்டியின் முடிவுகள் எப்படி அமைந்தாலும், நாங்கள் 13ஏ திருத்தத்தை திருத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி பெற்று விடலாம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘மாகாணசபை அதிகாரங்களை நீர்த்துப்போக செய்வதற்கு இந்தியாவும், சர்வதேச சமூகமும் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி இலங்கை அரசின் கருத்து என்ன?’ என்று கேகலியே ரம்புக்வெல்லாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:–
உள்நாட்டு மக்களின் கவலையும், கருத்துகளும்தான் அரசுக்கு மிகவும் முக்கியம். பிரிவினைவாத பிரச்சினையில் இந்தியா தலையிட்ட 1987–ம் ஆண்டில் இருந்து பிரச்சினை இருந்து வருகிறது. அந்த நேரத்தில் அந்த அதிகாரங்கள் சரியானதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதைய நிலைமை வேறு. ஒரே நாட்டுக்குள் வெவ்வேறு போலீஸ் படைகள் இருக்கும் சூழ்நிலையை சந்திக்க நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad