புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2013

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு இந்திய தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்த மனோ கணேசன்,
இந்திய அரசாங்கத்தின் இலங்கை பற்றிய கொள்கைகள் பற்றியும், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும், தேசிய இனப்பிரச்சினை பற்றிய இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றியும் எமது கட்சியின் நிலைப்பாடுகளை புதிய இந்திய தூதுவருக்கு தெரிவித்தோம்.
இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கை இன்று தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதில் முடிந்துள்ளது. தனது நாட்டின் தென் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இந்திய அரசு, இலங்கை அரசுக்கு கடந்த காலங்களில் பல விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளது. இவை பற்றி எம்மால் முழுமையாக மகிழ்ச்சி அடைய முடியவில்லை.
இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கையில் தனக்கு சாதகமான அம்சங்களை மாத்திரம் இலங்கை அரசு பயன்படுத்திக்கொண்டுள்ளது.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை மலையக மக்களை பலவீனப்படுத்தவும், இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு அளித்த உதவிகள் மூலம் பெற்ற வெற்றியை முழு நாட்டையும் சிங்கள பௌத்த மயமாக்கவும் இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது.
எனினும் இன்று இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரே ஒரு அதிகாரப்பரவலாக்கல் அம்சமான 13ஆம் திருத்தம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் புரிந்து கொள்கின்றோம்.
எனவேதான் இலங்கை அரசு 13ஆம் திருத்தத்தையும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் இல்லாது ஒழிக்க முயல்கின்றது.
இன்று வட இலங்கையில் போரின் பின் மீளக்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் நிலைமை ஒரு எரியும் பிரச்சினையாக இருக்கின்றது. அதேவேளை இலங்கை மக்கள் ஜனத்தொகையில் மிகவும் பின்தங்கிய பிரிவாக மலையக தோட்ட தொழிலாளர் சமூகம் இருகின்றது.

வடக்கில் மீளக்குடியேற்றம் திருப்திகரமானதாக இருப்பதாகவும், மலையகத்தில் தொழிலாள மக்கள் இன்று வசதியாக வாழ்வதாகவும் சில தரப்பினர் புள்ளி விபரங்களை காட்ட முயல்வது பிழையானது ஆகும். இந்த நாட்டின் வறுமை விகிதம் சுமார் 12 வீதமாக இருக்கும் போது, மலையகத்தில் அது 30 வீதமாக இருக்கின்றது. சிசு மரண விகிதமும் மலையகத்தில் மிக அதிகமாக நிலவுகின்றது.
இதே நிலைமையே வன்னியிலும் இன்று நிலவுகின்றது. எனவே இந்த இரண்டு பின் தங்கிய பிரிவினரையும் இந்திய அரசு சரிசமமாக கருதி கவனத்தில் எடுத்துகொண்டு கொள்கை வகுக்க வேண்டும்.
நமது கருத்துகளை கேட்டு தெரிந்துகொண்ட இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய அரசின் இன்றைய நிலைப்பாடுகள் பற்றியும், எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் விளக்கி கூறினார்.

ad

ad