புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013

தலைவா - விமர்சனம்!

   ல தடைகளைத் தாண்டி வெளிவந்திருக்கிறது விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா. தலைவனாகிறதுன்னா சும்மாவா? தலைவா தாமதமாக வெளிவந்த பிரச்சனையில் பல சந்தேகங்களும் கருத்துகளும் இருக்கும். அதேல்லாம் நமக்கெதுக்கு? படம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

‘படத்தின் கதை இதுதான்’ என்பது இணையதளங்களில் வேகமாக பரவியதால், அனைவரும் அறிந்த அதே கதை தான். மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தி தன் பலத்தை நிரூபிக்க முயற்சி செய்கிறது வில்லன் கும்பல். அந்த வில்லன் கும்பலின் தலைவனை தீர்த்துக் கட்டி, அந்த இடத்திற்கு அண்ணா-வாக வருகிறார் சத்யராஜ். சத்யராஜை அனைவரும் அண்ணா என்று தான் அழைக்கிறார்கள். 


தன் மகனுக்கு இதெல்லாம் தெரியக்கூடாது என்று சொல்லி சிறுவயதிலேயே அவரை ஆஸ்திரேலியா அனுப்பிவிடுகிறார். ஆஸ்திரேலியாவில் வளர்ந்த விஜய் நண்பன் சந்தானத்துடன் பிசினஸ் செய்துவருகிறார். விஜய் நடத்தும் டான்ஸ் டீமில் அமலா பால் சேர, இருவருக்கும் காதல் மலர்கிறது. அமலா பாலின் தந்தை சுரேஷ், விஜய்யின் குடும்பத்தை பற்றி தெரிந்துகொள்ள நினைக்கிறார். அவர்களை அழைத்துக்கொண்டு தன் தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க மும்பை வருகிறார் விஜய். 

மும்பை வந்த பிறகு தான் சத்யராஜ் என்ன வேலை செய்கிறார் என்பதும், அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவருகிறது விஜய்க்கு. விஜய்யை சந்திக்க சத்யராஜ் வெளியே வர அவரை சுற்றி வளைக்கிறது போலிஸ். அமலா பாலும் அவர் தந்தை சுரேஷும் சி.பி.சி.ஐ.டி ஆபீசர்கள் என்பதும் அம்பலமாகிறது. சத்யராஜ் கைதுசெய்யப்பட்ட போலிஸ் வண்டி வில்லனின் சதி வேலையால் வெடித்து சிதற, அப்பகுதியில் மீண்டும் வில்லன்களின் அராஜகம் தொடங்குகிறது. 


சத்யராஜின் இடத்திற்கு இன்னொரு தலைவனாக யார் வருவார் என்ற கேள்வி எழும் நேரத்தில், நான் இருக்கிறேன் என்று சொல்லி வாலிண்டியராக  வாயைக் கொடுக்கிறார் விஜய். விஜய்க்குப் பின்னால் மக்கள் சக்தி இருப்பதை புரிந்து கொண்ட போலிஸ், எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறது. தொடர்ந்து வரும் வில்லன்களின் அட்டகாசங்களை எதிர்க்கும் விஜய், கூட இருந்துகொண்டே குழிப்பறிக்கும் சில கருப்பு ஆடுகளையும் தாண்டி தலைவனாக தன்னை எப்படி நிலைநாட்டுகிறார் என்பது தான் முடிவு. 

ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஏற்றக் கதைதான். மிகவும் சுலபமான ஒரு கதைக்களத்தை எடுத்த இயக்குனர் விஜய் அதை மிகவும் சிக்கலான முறையில் கையாண்டிருக்கிறார். படத்தின் திரைக்கதை ஜவ்வு மாதிரி இழுப்பது மிகப் பெரிய மைனஸ். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் அது கொஞ்சம் ஆறுதலாக அமைந்திருக்கும். முதல் பாதில் வரும் ரொமாண்டிக் காட்சிகளையும் இரண்டாவது பாதியில் வரும் விஜய்க்கான பில்டப் காட்சிகளையும் கத்தரித்து கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். திருடப்பட்ட கேசட்டை திருடனிடமிருந்து மீட்க விஜய்யும் வில்லனும் போட்டிப்போடும் காட்சியில் திரைக்கதை சரவெடியாய் பறக்கிறது. அந்த வேகம் படம் முழுக்க இல்லை என்பது தான் சோகம்.  


படத்தின் மிகப் பெரிய ஆறுதல் சந்தானம் மட்டுமே! அமலா பாலை காதலிக்கும் கலாட்டாக்களில் தொடங்கி, மும்பை வந்து பாங்கு திங்கிற வரைக்கும் சிரி சிரின்னு சிரிக்க வைக்கிறார். ‘இது ஒருவழிப்பாதை திரும்பிப்போக முடியாது’ என்று சத்யராஜ் விஜய்யிடம் சொல்வது அர்த்தமானதாக இருந்தது. அதையே சந்தானத்திடம் விஜய் ரிபீட் அடித்தது கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதையே சந்தானம் தன் நண்பனிடம் சொல்லி அப்ளாசை அள்ளிக்கொண்டு போய்விட்டார்.

சாம் ஆன்ட்ரசன் வரும் ஒரு காட்சி தியேட்டரையே குலுங்க வைக்கிறது. ஆஸ்திரேலியாவுல ஷூட்டிங் இருந்ததால வர முடிச்சது, தமிழ்நாட்டுல இருந்தா ரொம்ப கஷ்டம் என்று விஜய்யிடம் அவர் சொல்வது மேலும் கிச்சு கிச்சு மூட்டியது. 

மகாராஷ்ட்ர வெறியர்களிடம் ‘நீயும் நானும் ஒரு நாடு, இந்தியா! ரத்தத்தில் தமிழன், பீகாரி என்று எழுதியிருக்கிறதா?’ என்றெல்லாம் வசனம் பேசி, அவர்களை ஒரு நிமிடத்தில் திருத்திவிடுவது மணிரத்னம் காலம் தொட்டே நடப்பதுதான். அதில் பெரிய ஆச்சரியமில்லை.

கலர்ஃபுல் காஸ்டியூம்களோ, டண்டனக்கா டான்சுகளோ இல்லாதது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். அந்தக் குறையை பாங்கு சாங்கில் ஒரளவு சரிகட்டி இருக்கிறார் விஜய். அமலா பால் காலில் அடிபட்டு, ஆடமுடியாத நிலையில் இருக்க, அவரை தூக்கி வைத்து ஒரு ரொமாண்டிக் டான்ஸ் போடுவது விஜய்க்கே உரிய ஸ்டைல். சண்டைக்காட்சிகளில் ஓரளவிற்கு நம்பும்படியாக நியாயத்தைக் கடைபிடித்திருக்கிறார்கள். 

வித்யாசமான கதாபாத்திரத்தில் சத்யராஜ், நிதானமாகவும் நிறைவாகவும் நடித்திருக்கிறார். அமலா பாலுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை அதை சரிசெய்ய முயன்றிருக்கிறார். பொண்வண்ணன் மனதில் நிற்கிற நடிப்பு. 

தொழில்நுட்ப ரீதியாக ‘தி பெஸ்ட்’ என்பதில் சந்தேகமில்லை. நீரவ் ஷா கேமராவில் அசத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் பல இடங்களில் பல இசையை ஞாபகப்படுத்துகிறார். ’தளபதி... தளபதி...’ பாடல் விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து. 
 
அரசல் புரசலாக சொல்லப்பட்ட வசனங்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் தண்ணி கேன் சப்ளைப் பண்ணும் பிசினஸ் செய்வதால், அவரைப் பார்த்து சுரேஷ் இப்படி சொல்கிறார் தமிழ்நாட்டுக்கே தண்ணிகொண்டு வர முடியல, நீங்க ஆஸ்திரேலியாவுக்கே கொண்டு வந்துட்டீங்களே’.  

தலைவா - வெடிகுண்டு எதற்கு? படமே போதும்! ரசிகர்கள் ஜாக்கிரதை... 

ad

ad